"வாலறிவனை'க் காண வேண்டுமா?

சிற்றுயிர்க்கு உற்ற துணையாக இருப்பது அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கையும் தரும் கல்விதான். கல்வியைக் காட்டிலும் மிகச்சிறந்த துணை வேறில்லை என்று கூறும்(நீ.நெ.வி.1) குமரகுருபரர், துன்பமாகத் தோன்றிப் பின்பு மிக்க இன்பம் பயக்கவல்லது கல்வி.
"வாலறிவனை'க் காண வேண்டுமா?
Published on
Updated on
3 min read

சிற்றுயிர்க்கு உற்ற துணை

சிற்றுயிர்க்கு உற்ற துணையாக இருப்பது அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கையும் தரும் கல்விதான். கல்வியைக் காட்டிலும் மிகச்சிறந்த துணை வேறில்லை என்று கூறும்(நீ.நெ.வி.1) குமரகுருபரர், துன்பமாகத் தோன்றிப் பின்பு மிக்க இன்பம் பயக்கவல்லது கல்வி. அது மடமையை (அறியாமை) அழித்து அறிவினை அகலப்படுத்தும். கல்வி எந்த அளவுக்கு மிகுதியாகக் கற்பினும் அதன் பொருளாழத்தையும் நுண்மையையும் ஆராய்ந்து அறியாவிடின் அது பெருமை உறாது(4); பிரம்மன் படைக்கும் உயிர்கள் இறந்துபோகும். ஆனால், கலைமகள் அருள்பெற்ற புலமைச் சான்றோர் படைக்கும் நூல்கள் இறந்து போகாமல் நிலைபெறும்; கல்வியே உயர்ந்தது; கல்வியைவிட சிறந்த அழகு வேறு ஒன்றுமில்லை என்று கூறுபவர், அறிவு முழுவதையும் பெற்றவர்கள் எவரும் இல்லை; அதனால் மிகுதியாகக் கற்றுவிட்டோம் என்று மகிழ்ச்சி (செருக்கு) அடைதல் கூடாது' என்கிறார்.

அறிவுச் செல்வம்

"அறிவே தெய்வம்' என்கிறார் மகாகவி பாரதியார். செல்வம் உடையவனிடத்து அரிய விலைமதிப்பற்ற அணிகலன்களும் நிறைந்த பொருள்களும் இன்று இருக்கும்; நாளை போய்விடும்; ஆனால் அறிவாளியிடம் உள்ள அறிவுச் செல்வம் என்றும் நிலைத்திருக்கும்; எங்கும் போகாது. எனவே "திரு'வாகிய செல்வத்தைவிடத் திட்பமாகிய அறிவே நல்லது - சிறந்தது என்கிறது பழமொழி நானூறு (136). இதை வள்ளுவப் பெருந்தையின் "செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்' என்ற குறளோடு ஒப்பு நோக்கலாம். வள்ளுவர் ஏன் செவிச்செல்வமே சிறந்த செல்வம் என்று கூறினார்?

நல்ல நூல்களை நேர்முகமாகக் கற்றல், நன்கு கற்ற அறிஞர் வழிக் கேள்வி(கேட்டல்) ஞானத்தைப் பெறுதல் ஆகியவற்றைப் பெறாதவர் மெய்ப்பொருள் அறிந்தவர் ஆகார். அத்தகையோர் ஏதேனும் மெய்ப்பொருளைப் பேசிவிட்டால் அது சரியான மெய்ப்பொருள் ஆகாது. நாவற்பழத்தை மரத்தில் ஏறிப் பறித்து உண்பதற்குப் பதிலாக, தரையில் விழுந்து மண்ணில் கலந்து அழுக்குப்பட்ட கனியை உண்பதற்கு நிகரானது ஆகும் (138); கற்க வேண்டியவற்றை இளமைப் பருவத்திலேயே கற்றுவிட வேண்டும் என்கிறது பழமொழி நானூறு (60).

அதனாலேயே ஒüவையார் "இளமையில் கல்' என்றார். இளமைப் பருவம் தொட்டே, கிணற்றிலே வாழும் தவளை, தான் வாழும் கிணற்று நீரே சுவையான நீரென்றும், அதற்கு இணையான நீர் வேறு எங்கும் இல்லையென்றும் கருதி செம்மாந்திருக்கும். அத்தகு "தவளை மனிதரும்' (கிணற்றுத் தவளை) உள்ளனர். அத்தகையோரைப் போல இல்லாது, நாள் முழுவதும் விரும்பி, இனிதாகப் பல இடங்களுக்கும் சென்று கற்றல் வேண்டும்; பல இடங்களுக்கும் சென்று, அறிஞர்கள் உரையைக் கேட்டல் வேண்டும். அதுவே மிகுந்த நன்மையைத் தரும் (61) என்கிறது பழமொழி நானூறு.

நாம் கற்கும்போது ஒரு நூலைக் கற்கிறோம். ஆனால், சான்றோர் வழி (செவிச்செல்வம்) கேட்கும்போது ஒருவர் கற்ற பல நூல் அறிவை ஒரே நேரத்தில் பெறும் பேறு (வாய்ப்பு) கிடைக்கிறது. அதனால்தான் செவிச்செல்வமே செல்வம் என்றார் வள்ளுவர். கற்றலில் கேட்டல் நன்று என்பது முதுமொழி.

கல்வியால் அறிவு வருமா? வளருமா?

கல்வியால் அறிவு வராது; வளரும்; ஏனென்றால், அறிவு எல்லா உயிர்களுக்கும் அநாதியாகவே உள்ளது. அதை அறியாமை மறைத்திருக்கிறது. நாம் படிப்பதனால் மட்டும்தான் அறிவை வளர்க்க முடியும். இந்த உண்மையை,


""தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்

கற்றனைத் தூறும் அறிவு'' என்கிறார் வள்ளுவர்.


பகவானுக்குக் கம்பர் கொடுக்கும் காணிக்கை என்ன தெரியுமா?

""காராரு மேனிக்கரு ணாகர மூர்த்திக்கு

ஆராதனை என் "அறியாமை' ஒன்றுமே''

என்கிறார்.

கல்வியின் பயன்

கல்வியின் பயன், தன்னை அறிவதும் இறைவனை உணர்வதும், அவன் திருவடிகளை அடைவதுமேயாகும். அத்தகைய பயன்களைப் பெற நம் சங்க இலக்கியங்களும் சமய இலக்கியங்களும் உதவுகின்றன. வள்ளுவப் பெருந்தகை, கல்வியின் பயனை இரண்டாவது குறளிலேயே கூறிவிடுகிறார்.

கற்றதனாலாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின் (2)

வாலறிவனாகிய இறைவனின் திருவடிகளை உணராத - சென்று சேராத கல்வியினால் எந்தப் பயனும் இல்லை என்கிறார். கசடறக் கற்ற கல்வி அறிவைக்கொண்டு, நம் அறியாமையைப் போக்கி இறைவனைக் கண்டடைய வேண்டும்; அவன் திருவடிகளைப் பணிய வேண்டும்.

திருவடிகள்

அவன் திருவடிகளை ஏன் பணிய வேண்டும்? மணிவாசகப் பெருந்தகை கூறுகிறார்: சிவபுராணத்தில் 17க்கும் மேற்பட்ட இடங்களில் இறைவனின் திருவடிகளைப் போற்றியும் வாழ்த்தியும் பாடியுள்ளார். மேலும், ""இணையார் திருவடி என் தலை மேல் வைத்தலுமே; துணையான சுற்றங்கள் அத்தனையும் துறந்தொழிந்தேன்'' என்கிறார். இறைவனின் திருவடி பட்டமாத்திரத்திலே அனைத்துப் பற்றுகளையும் துறந்துவிடுகிறார்.

"திருவடி என்றால் ஞானம். எத்தனைத் திருவடி? இரண்டு திருவடிகள் (இணையார் திருவடி). ஒன்று அபர ஞானம். ஒன்று பர ஞானம். அபர ஞானம் என்றால் சாஸ்திர ஞானம். பரஞானம் என்றால் அனுபவ ஞானம். புத்தகங்களைப் படித்து வருவது கலைஞானம் (சாஸ்திர ஞானம்), கண்மூடி தியானித்து வருகின்ற ஞானம் அனுபவ ஞானம் (அநுபூதி). அத்தகைய இரண்டு ஞானங்களை பகவான் (இரண்டு திருவடிகள் மூலம்) கொடுக்கிறார்' என்று இறைவனின் திருவடிகளுக்கு மிக அருமையாக - எளிமையாக சைவசித்தாந்தத் தெளிவின்படி விளக்கமளிப்பார் வாரியார் சுவாமிகள்.

அத்தகைய செருக்கற்ற கல்வி அறிவே, பணிந்து நடக்கும் பண்பே வாலறிவனைச் சென்று சேர உதவும்.

"முற்றும் கற்றன என்று களியற்க'! என்பதை நினைவில் கொள்வோம். "கற்றது கைமண் அளவு; கல்லாதது உலகளவு' என்பது ஒüவை வாக்கு. கலைமடந்தையே இன்றைக்கும் கற்றுக்கொண்டுதான் இருக்கிறாளாம்! "இப்பிறவி தப்பினால் இனி எப்பிறவி வாய்க்குமோ?' என்று பட்டினத்தார் பயந்ததை நினைவில் கொண்டு, "வாய்த்திருக்கிறது நமக்கோர் மானுடப்பிறவி என்று தெளிந்து, கலைமகளைப் போற்றக்கூடிய இந்நவராத்திரி நன்நாளில், அவளைப் பணிந்து, நம் அறியாமை இருளைப் போக்கிக்கொள்ள தொடர்ந்து வாசிப்போம்.

"நூலறிவினால் வாலறிவனைக் காண இயலாது' என்பார் வாரியார் சுவாமிகள். ஆனால் அந்த நூலறிவு, நம்முடனேயே இணைந் (மறைந்து உறையும்-சீவனுள் உறையும் சிவன்) திருக்கும் வாலறிவனை நமக்கு அடையாளம் காட்டும் கருவியாக இயங்கும். அவன் திருவடிகளைத் தொழவைக்கும்; முக்திப் பேறு நல்கும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com