பட்டக்காரர் மீது நான்மணிமாலை பாடிய அப்துல் சுகூர் சாஹிப்!

இவர் கோவை மாவட்டம் கணியூரைச் சேர்ந்தவர். தமிழ்ப் புலவர். "பண்டிதர்' எனப் பலராலும் பாராட்டப் பெற்றவர். இவரை ""கொங்கு நாட்டுப் புலவர் தலைமணி'' என்று கி.ஆ.பெ.விசுவநாதம் பாடியுள்ளார்.
பட்டக்காரர் மீது நான்மணிமாலை பாடிய அப்துல் சுகூர் சாஹிப்!

முத்திரைப் பதிவுகள் -4

இவர் கோவை மாவட்டம் கணியூரைச் சேர்ந்தவர். தமிழ்ப் புலவர். "பண்டிதர்' எனப் பலராலும் பாராட்டப் பெற்றவர். இவரை ""கொங்கு நாட்டுப் புலவர் தலைமணி'' என்று கி.ஆ.பெ.விசுவநாதம் பாடியுள்ளார். 26ஆவது பழைய கோட்டைப் பட்டக்காரர் நல்லதம்பிச் சர்க்கரை உத்தமக் காமிண்ட மன்றாடியார் மீது இவர் "நான்மணிமாலை' என்ற இலக்கியம் பாடியுள்ளார். இந்நூல் 1930-ஆம் வருடம் அச்சாகியுள்ளது. நான்மணிமாலை 40 பாடல்கள் கொண்டது. இவரைப் பற்றி ஒரு புலவர்,

""தென்னாட்டு மகமதியர் குலதிலகன்

தீன்மார்க்கத் திறமை வாய்ந்தோன்

தென்னாட்டுத் தமிழ்முனியும் திறமையற்றுப்

பின்நிற்கும் தேர்ச்சி பெற்றோன்

முன்னாட்டுப் பேரறிஞர் மனமகிழப்

பிரசங்கம் முனைந்து செய்வோன்

சொன்னாட்டும் அப்துல்சுகூர் என்றழைக்கும்

திருநாமம் துலங்கப் பெற்றோன்''

என்று பாடியுள்ளார். கா.அப்துல் சுகூர் அவர்கள் நூலைப் பாராட்டி ந.மு.வேங்கடசாமி நாட்டார், கி.ஆ.பெ.விசுவநாதம், திருச்சி தி.பொ. பழனியப்பா பிள்ளை, திருப்பத்தூர் கா.அ.சண்முக முதலியார், கணியூர் சுப்பராமையன், உத்தமபாளையம் ஆர்.நாராயணசாமி, திருநெல்வேலி தி. கருணாலயப் பாண்டியப் புலவர், நாவலூற்று சுவாமி சிவநேசன், தாராபுரம் பஞ்சாபகேசய்யர், கோயமுத்தூர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி அய்யர், காங்கயம் தெய்வசிகாமணி முதலியார், தாராபுரம் ஆறுமுகம் பிள்ளை போன்றோர் சாற்றுக்கவிகள் கொடுத்துள்ளனர். இந்நூலாசிரியர் தம் சொந்த ஊராகிய உடுமலை வட்டக் கணியூரில் இருந்த சன்மார்க்க சங்கம், தமிழ்ச் சங்கம் ஆகியவற்றில் தலைமைப் பொறுப்பு வகித்தவர்.

நான்மணிமாலை என்பது வெண்பா, கட்டளைத் கலித்துறை, விருத்தம், ஆசிரியப்பா என்ற வரிசையில் அந்தாதித் தொடை அமையப் பாடுவது. அதில் ஒரு பாடல்:

""ஏர்பிடித்த காராளர் இன்குலத்து நற்றவத்தின்

சீர்பிடித்த நல்லதம்பிச் சீமான்போல் - யார்பிடித்தார்

வாகையெனும் மாலையணி மாஅரையர் இன்குழுவில்

ஈகையெனும் மாகொடையை யே''(பா.13)

(புலவர் செ. இராசு தொகுத்த "தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்' நூலிலிருந்து...)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com