ஞானாசிரியர் நிஜானந்தரும் மாணவர் அச்சுததாசரும்!

சிவன் உறையும் இமயமலை - கைலாசகிரி போன்றே சித்தர்கள் வாழும் கைலாசகிரி வேலூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டத்தில் உள்ளது. கைலாசகிரி ஊராட்சியின் கிராமங்கள் கடாம்பூர், உமராபாத். இவ்வூர் ஆம்பூருக்கு வடகிழக்கில் 8 கி.மீ. தொலைவில் பேரணாம்பட்டு சாலையில் உள்ளது.
ஞானாசிரியர் நிஜானந்தரும் மாணவர் அச்சுததாசரும்!

சிவன் உறையும் இமயமலை - கைலாசகிரி போன்றே சித்தர்கள் வாழும் கைலாசகிரி வேலூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டத்தில் உள்ளது. கைலாசகிரி ஊராட்சியின் கிராமங்கள் கடாம்பூர், உமராபாத். இவ்வூர் ஆம்பூருக்கு வடகிழக்கில் 8 கி.மீ. தொலைவில் பேரணாம்பட்டு சாலையில் உள்ளது.

ஸ்ரீ நிஜானந்தர்: இம்மலையை வாழிடமாகக் கொண்ட அரிய சித்தர்களுள் ஒருவர் ஸ்ரீ நிஜானந்தர். இவர் அகத்திய மரபு சார்ந்தவர். இம்மகானின் இயற்பெயர் அருணாசல குரு. இச் சித்தர் யோகம் மட்டுமன்றி இசை, மருத்துவம், சோதிடம், வானியல் முதலிய பல்கலை ஞானங்களில் வல்லவர். இத்துறைகள் சார்ந்த அரிய செய்திகளைப் பாடல்களாகவும், உரைநடையாகவும் வெளிப்படுத்தியுள்ளார். இத்தொகுப்பு "அருணாசலகுரு நிஜானந்தபோதம்' என வழங்கப்படுகிறது.

ஞானக்கோவையில் நிஜானந்தபோதம்: பதினெண் சித்தர் ஞானக் கோவை, இருபது சித்தர் ஞானக்கோவை, பெரிய ஞானக்கோவை ஆகிய நூல்கள் அனைத்திலும் அருணாசலகுரு நிஜானந்தபோதம் இடம்பெற்றுள்ளது. ஆதி நாளில் சித்தர்கள் எண்ணிக்கை 18 எனக் கூறப்பட்டாலும், பின்னாளில் இவ்வெண்ணிக்கை விரிவடைந்தது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீ அச்சுததாசர்: பன்முக ஞானம் சிறக்கப் பெற்ற ஸ்ரீ அருணாசலகுரு பக்குவம் பெற்ற சீடர் அநேகருக்கு மெய்ப்பொருள் உபதேசம் செய்தருளினார். இவருடைய குறிப்பிடத்தக்க முதன்மைச் சீடர் இருவருள் ஒருவர் அச்சுததாசர். மற்றொருவர் ஸ்ரீ சிதானந்தர் ஆவார்.

அச்சுததாசர் போளூரைச் சேர்ந்தவர். ஆத்ம சொரூபத்தை அறிய வேண்டி பதினைந்து ஆசான்களை அடைந்தும் அறிவிக்கப்பட்டிலர். இந்நிலையில், கடாம்பூர் கைலாசகிரியில் ஸ்ரீ நிஜானந்தயோகி இருப்பதைக் கேள்வியுற்று பசுவை நாடிவரும் கன்று என விரைந்து வந்தார். வணங்கி வழிபட்டு, உண்மைப் பொருளை உணர்த்தியருள வேண்டி நின்றார். பக்குவமுணர்ந்து, மகிழ்ந்து நிஜானந்தர் அவரை சீடராக ஏற்றருளினார்.

இதுவரை அறிய முடியாத நிஜ சொரூபத்தை உணர்த்தி நிஜ ஆனந்தம் வழங்கியருளிய ஸ்ரீ அருணாசலகுருவை நிஜானந்தர் என அச்சுததாசர் போற்றிப் புகழ்ந்தார். அது முதல் அருணாசல குரு என்னும் இயற்பெயர் மறக்குமளவுக்கு நிஜானந்தர் எனும் சிறப்புப் பெயர் வழங்குவதாயிற்று.

குரு வணக்கம்: கவிபாடுவதில் வல்ல ஸ்ரீஅச்சுததாசர் தம் ஞானானுவங்களை இனிய கீர்த்தனைகளாகப் பாடியருளியுள்ளார். இவை அடியார்களுக்கும், அன்பர்களுக்கும் ஒப்பற்ற ஞானப் பெட்டகமாகத் திகழ்கிறது. "ஸ்ரீ அத்வைத கீர்த்தனானந்த லஹரி' எனும் பெயருடன் கூடிய இந்நூலின் தொடக்கத்தில் பாடியுள்ள எழுசீர் அடி விருத்தத்தில் அமைந்த குருவணக்கம் வருமாறு:

ஆரண முடிவை யமலவான் வடிவை

அதுலிதா னந்தசா கரத்தைப்

பூரணப் பொருளை பகலிர வகலப்

பொலிந்தருள் பொழியுமம் புதத்தைக்

காரணங் கடந்த வகண்டசின் மயத்தைக்

கைலைமே வியநிஜா நந்தப்

பேரணங் குறுமெங் குருபரஞ் சுடரைப்

பிரியமா யுலத்தின்வைப் பேமால் !

சாற்றுக்கவியில் அருணாசலகுரு என குருநாதரின் இயற்பெயரைக் குறிப்பிட்ட ஸ்ரீ அச்சுததாசர், தாம் வழங்கி வழக்கத்தில் வந்துவிட்ட நிஜானந்தர் என்ற சிறப்புப் பெயரையே இங்கு ஆண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மற்றும் நிஜானந்தர் வாழிடம் கைலை (கைலாசகிரி) என்பதைத் தெரிவித்திருப்பது சிறந்த வரலாற்று ஆதாரமும் ஆகிறது.

ஸ்ரீ நிஜானந்தர் இயற்றிய ஞானக் களஞ்சியமான அருணாசலகுரு நிஜானந்த போதம் மற்றும் இவரின் சீடரான ஸ்ரீ அச்சுததாசர் இயற்றிய ஒன்பது நூல்களான, நிசானந்த பதிகம், தோத்திர இசைப்பாடல், அத்வைத ரசமஞ்சரி, துருவ சரித்திரம், பிரகலாத சரித்திரம், சக்குபாய் சரித்திரம், தியானானுபூதி, அத்வைத கீர்த்தனானந்த லகரி, சன்மார்க்க தர்ப்பணம் ஆகிய ஒப்பற்ற நூல்களை நாம் ஒவ்வொருவரும் படித்துணர்தலும், பிறர்க்கு எடுத்துரைத்தலும் சிறந்ததோர் வழிபாடாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com