மன்மதனைப் பழித்த மதனவல்லி!

குறவஞ்சி என்பது தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. இறைவன் அல்லது மன்னனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பெறுவது குறவஞ்சி இலக்கியம்.
மன்மதனைப் பழித்த மதனவல்லி!

குறவஞ்சி என்பது தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. இறைவன் அல்லது மன்னனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பெறுவது குறவஞ்சி இலக்கியம்.

தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு, கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் இயற்றிய நூல் "சரபேந்திர பூபாலக் குறவஞ்சி'. இக்குறவஞ்சியின் தலைவி மதனவல்லி, சரபோஜி மன்னன் மீது கொண்ட காதலால் விரகதாபத்தில் துடிக்கிறாள். தலைவனைத் தன்னோடு சேர்ப்பிக்காத மன்மதனைப் பழிக்கிறாள். இறைஞ்சவும் செய்கிறாள்.

""மன்மதனே! உலகத்தில் பிரஜைகள் உற்பத்தியாவதற்கு மூலகாரணமாக இருப்பவனே! சரபோஜி மன்னன்பால் காதல் கொண்ட இப்பேதையை பரிதாபத்திற்குரிய நிலைக்கு ஆளாக்கிவிட்டாயே! அலை முழங்கும் கடலையே துந்துபியாக - எக்காளமாகக் கொண்டவனே! ஆனால், பாவையரான பெண் குலத்திற்கே நீ விரோதியாகி விட்டாயே! விண்ணில் இருந்து தண்ணெனப் பொழிகின்ற மதியை - நிலவை நீ வெண்கொற்றக் குடையாகக் கொண்டவன். அந்த நிலா-மதி - துன்பம் செய்கின்ற துன்மதியாகிவிட்டதே! மன்மதனே, தென்றல் காற்றுதான் நீ பவனி வருகிற தேர். ஆனால், என்னை வாட்டுகின்ற வாடைக்காற்றை இப்போது தேராக்கிக் கொண்டுவிட்டாயா? வட திசையிலிருந்து வரும் வாடைக்காற்று உனக்கு எப்படி அபிமானியாயிற்று? இது காலம் செய்த கோலமா? என்ன காலயுத்தியோ? மற்றவர்களைத் துன்புறுத்துவதால் காரியத்தில் விஜயம் - வெற்றிபெற இயலுமா? யாரோடும் எக்காரணம் கொண்டும் விரோதியாகாமல் இருந்தாலே அது பெரும் வெற்றி - ஜெயம் என்று உனக்குத் தெரியாதா? தேன் சொரியும் மலர்களை அம்புகளாக்கி மனிதர் மீது எய்து, காதல் வரச்செய்து ஆனந்தம் அடைகிறாயே! முன்னொரு காலத்தில், மானைக் கையில் ஏந்தும் ஈஸ்வரனாகிய சிவபெருமான் உன்னை நெற்றிக் கண்ணால் சுட்டெரித்தபோதும் நீ விரோதம் பாராட்டவில்லையே! எனக்கு ஒன்று தோன்றுகிறது...

இப்போது நீ என்னை விரகதாபத்தில் வாட்டுவதற்குக் காரணம், விண்ணோர்கள் செய்த கீலகமா என்று ஐயுறுகிறேன். அதனால்தான் சித்திரை மாதத்துச் சூரியன் (சித்திரபானு) போல் சுட்டெரிக்கிறாய். என் தலைவன் சரபோஜி மன்னன் விரைந்து வந்து, என் ஆகம் குளிருமாறு என்னைத் தழுவச் செய்வாய் மன்மதா! அவ்வாறு அவர் என்னை ஆலிங்கனம் செய்யச் செய்தால், நீ சர்வஜித்தனாகி அதாவது, எல்லா வெற்றிகளையும் பெற்று, அக்ஷயனாக - குறையொன்றும் இல்லாத நல்லவனாகுவாய்!'' என்று மதனவல்லி விரகதாபத்தில் மன்மதனை நோக்கிப் பாடுவதாக சிவக்கொழுந்து தேசிகர் "மன்மதனைப்

பழித்தல்' என்ற தலைப்பில் ஒரு பாடலை அமைத்துள்ளார். இப்பாடலில் தமிழ் ஆண்டுகளின் பெயர்களை அழகுற அமைத்துள்ளார் புலவர். தமிழ் ஆண்டுகளின் பெயர்கள் இதில் எத்தனை உள்ளன என்பதைப் பார்ப்போம்.

""பிரபவன் ஆகிப் பிரஜோற்பத்தி செய்கின்ற மன்மதா - இன்று

பேதையேன் என்னைப் பரிதாபி ஆக்கல்என் மன்மதா?

பரவும் கடலினைத் துந்துபி யாய்க் கொண்ட மன்மதா - நீயும்

பாவை மார்களுக்கு விரோதி ஆயினதென்ன மன்மதா?

வானின்மேற் கோடும் துன்மதியைக் குடையாக்கி மன்மதா - காற்றாம்

வடக்கோடும் நேர்கொண்டாய் இதுஎன்ன காலயுத்தி மன்மதா!

மீனகே தனத்தினால் விஜயம் பெறலாமோ மன்மதா - யார்க்கும்

விகுர்தி ஆகாதிருந்தால் மிகவும் ஜயமாமே மன்மதா!

தேனார் மலர் அம்பால் ஆனந்தம் அடைகிறாய் மன்மதா - சீறும்

திறஅம்பொன்று உளதாயின் பிரமாதி ஆவையே மன்மதா!

மானோர் கரம்உற்ற ஈசுவரன் முன்னாளின் மன்மதா - உன்னை

வாட்டிய காலையில் காட்டும் குரோதி அல்லை மன்மதா!

தெரியும் இவ்வுலகத்தில் ஏவலர் கீலகத்தினால் மன்மதா - என்மேல்

சித்ரபானு வைப்போல் மெத்தவும் காய்கிறாய் மன்மதா!

சரபோஜி மகராஜா தமைநான் மருவச்செய் மன்மதா - நீ

சருவஜித்து ஆகிமேல் அக்ஷயன் ஆகுவாய் மன்மதா!''

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com