தமிழன்னையை வாழ்த்தும் தமிழரசிக் குறவஞ்சி

தமிழின் பிரபந்த இலக்கிய வகைகளுள் ஒன்று குறவஞ்சி. குறத்தி குறி சொல்லுதல் முதன்மையானதால் இது குறவஞ்சியாயிற்று.
தமிழன்னையை வாழ்த்தும் தமிழரசிக் குறவஞ்சி

தமிழின் பிரபந்த இலக்கிய வகைகளுள் ஒன்று குறவஞ்சி. குறத்தி குறி சொல்லுதல் முதன்மையானதால் இது குறவஞ்சியாயிற்று. இது பாட்டுடைத் தலைவியின் பெயரால் தமிழரசி குறவஞ்சியாயிற்று. தலைவன் பவனி வரும்போது தோழியருடன் சென்ற தலைவி அவனைக் கண்டு காதலுற்று வருந்துவாள். அவள் வருத்தத்தைப் போக்க தோழியர் குறத்தி ஒருத்தியை அழைத்து குறி கேட்டிருப்பார்கள். குறத்தி தன் நாடு, மலை, ஊர் வளங்களைக் கூறி, பின் தலைவன் விரைந்து வந்து தலைவியை மணந்து கொள்வான் என்று குறி சொல்வாள்.

தமிழரசி குறவஞ்சியை இயற்றியவர் தோரமங்கலம் அ.வரதநஞ்சைய பிள்ளை. இந்நூல் சுவாமிமலை என்பதைக் களமாகக்கொண்டு அங்கு வாழும் தமிழரசி எனும் பெண், அங்கு உலாவரும் தமிழ்வேளாகிய செவ்வேளின் (முருகன்) பேரழகில் மயங்கி காதல் கொள்கிறாள். அவளுக்குத் தமிழ்நாட்டுப் பொதியமலை குறத்தி ஒருத்தி குறி சொல்லி, "நீ விரும்பிய தலைவன் நின்னை விரும்பி வந்து விரைவில் மணப்பன்' என்று குறி சொல்கிறாள்.

இந்நூலின் தனிச்சிறப்பு இதில் இயற்றமிழ் புலமையோடு இசைத்தமிழும் இணைந்துள்ளது. சங்கராபரணம், பைரவி, செஞ்சுருட்டி, காம்போதி, மத்தியமாவதி, முகாரி, புன்னாகவராளி, சகானா, தோடி, நாதநாமக்கிரியை, அடானா, கல்யாணி முதலிய எண்ணற்ற ராகங்களைப் பெற்ற கீர்த்தனைகளால் ஆகிய செய்யுட்கள் விரவிக்கிடக்கின்றன. பாடல்கள் சொல்வளம் பொருள்வளம் மிக்குடையதாகத் திகழ்கின்றன. இதில், தமிழன்னையை வாழ்த்தும் பாடல்கள் வெகு சிறப்பானவை. சான்றாகப் பின்வரும் பாடலைக் குறிப்பிடலாம்.

""நண்ணு மிளமைப் பருவத்தி லேமுதல்

நாவை யசைத்தமொழி - எங்கள்

கண்ணைத் திறந்துல கத்தை விளக்கிக்

கருத்தொ டிசைத்தமொழி - எந்தம்

எண்ணத்தை கூறற்கு நானென்று முன்வந்

திருந்த திருந்துமொழி - வேற்று

வண்ணப் பிறமொழி கற்க வுதவிய

வண்மைபொ ருந்தும்மொழி - அதனால்

எங்கள் தமிழன்னை வாழிய வாழிய

வென்றடி வாழ்த்து வமே...''

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com