தாயுமானவர், வள்ளலார் - கருத்தொற்றுமை: முத்திரைப் பதிவுகள் -9

தாயுமானவர் பாடல்களின் தாக்கம் திருவருட்பாவில் பல இடங்களில் காணப்படுகின்றன. பல வகைகளில் வள்ளலார் தாயுமானவரைப் பின்பற்றிப் பாடியுள்ளார்.

தாயுமானவர் பாடல்களின் தாக்கம் திருவருட்பாவில் பல இடங்களில் காணப்படுகின்றன. பல வகைகளில் வள்ளலார் தாயுமானவரைப் பின்பற்றிப் பாடியுள்ளார்.

தாயுமானவர் எடுத்த எடுப்பிலேயே, முதற் பாடலிலேயே வென்று விடுகிறார். தாயுமானவர் பாடலின் தொடக்கம், முதற்பகுதியின் பெயர் "திருவருள் விலாசப் பரசிவ வணக்கம்'. திருவருட்பா ஆறாந் திருமுறையிலும் முதற்பதிகம் "பரசிவ வணக்கம்'.

அங்கிங்கெனாதபடி எங்கும் விளங்கும் பரம்பொருளின் வணக்கமாகவே முதற்பாடலைப் பாடுகிறார் தாயுமானவர்.

""அங்கிங் கெனாதபடி யெங்கும் ப்ரகாசமாய்

ஆனந்த பூர்த்தியாகி

அருளொடு நிறைந்ததெது தன்னருள் வெளிக்குளே

அகிலாண்ட கோடியெல்லாந்

தங்கும் படிக்கிச்சை வைத்துயிர்க் குயிராய்த்

தழைத்ததெது மனவாக்கினில்

தட்டாமல் நின்றதெது சமயகோ டிகளெலாந்

தந்தெய்வம் எந்தெய்வமென்

றெங்குந் தொடர்ந்தெதிர் வழக்கிடவும் நின்றதெது

எங்கணும் பெருவழக்காய்

யாதினும் வல்லவொரு சித்தாகி யின்பமாய்

என்றைக்கு முள்ளதெதுமேல்

கங்குல்பக லறநின்ற எல்லையுள தெதுவது

கருத்திற் கிசைந்ததுவே

கண்ட வெலாமோன வுருவெளிய தாகவுங்

கருதியஞ் சலிசெய்குவாம்'' (1)

சமய கோடிகள் எல்லாம் தம்தெய்வம் எம் தெய்வம் என்று எங்கும் தொடர்ந்து வழக்கிட நின்றது எது? எங்கணும் பெருவழக்காய் உள்ளது எது? அதுவே கருத்துக்கு இசைந்தது, எல்லார் கருத்துக்கும் இசைந்தது, பொதுக் கருத்துக்கு இசைந்தது என்று அதனைக் கருதி அஞ்சலி செய்கிறார்.

அங்கிங் கெனாதபடி எங்கும் பிரகாசமாக விளங்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை, அவரது தனிப் பெருங்கருணையை விளக்கிக்காட்டவே திருவருட்பிரகாச வள்ளலாராய், வள்ளலார் வந்தார்.

சமயகோடிகள் எல்லாம் தம்தெய்வம் எம்தெய்வம் என்று எங்கும் தொடர்ந்து வழக்கிட, எங்கணும் பெருவழக்காய் என்னும் தாயுமானவர் பாடலைப் படிக்கும்போது, "பேருற்ற உலகிலுறு சமயமத நெறி எலாம்' என்னும் வள்ளலார் திருவருட்பா நினைவுக்கு வருகிறது.

""பேருற்ற உலகிலுறு சமயமத நெறிஎலாம்

பேய்ப்பிடிப் புற்றபிச்சுப்

பிள்ளைவிளை யாட்டென உணர்ந்திடா துயிர்கள்பல

பேதமுற் றங்கும் இங்கும்

போருற் றிறந்துவீண் போயினார் இன்னும்வீண்

போகாத படிவிரைந்தே

புனிதமுறு சுத்தசன் மார்க்கநெறி காட்டிமெய்ப்

பொருளினை உணர்த்தி எல்லாம்

ஏருற்ற சுகநிலை அடைந்திடப் புரிதிநீ

என்பிள்ளை ஆதலாலே

இவ்வேலை புரிகநின் றிட்டனம் மனத்தில்வே

றெண்ணற்க என்றகுருவே

நீருற்ற ஒள்ளிய நெருப்பே நெருப்பினுள்

நிறைந்திருள் அகற்றும் ஒளியே

நிர்க்குணா னந்தபர நாதாந்த வரைஓங்கு

நீதிநட ராசபதியே'' (3677)

தாயுமானவரும் வள்ளலாரும் சமரச ஞானிகளாகத் திகழ்ந்தவர்கள். தாயுமானவர் வேதாந்த சித்தாந்த சமரசம் பேசுகிறார்; சமயங்கடந்த மோன சமரசம் பேசுகிறார். வள்ளலார் ஆறந்த (ஷடாந்த) சமரசம் பேசுகிறார்; சமயங்கடந்த சமரச சுத்த சன்மார்க்கத்தைப் பேசுகிறார்.

இன்று வள்ளலார் அவதாரத் திருநாள்

("சன்மார்க்க தேசிகன்' ஊரன் அடிகளின் "தாயுமானவரும் வள்ளலாரும்' நூலிலிருந்து...)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com