அழும் கண்கள்

திருக்குறளில் காமத்துப்பால் களவியல், கற்பியல் என்று இரண்டு பகுதிகளை உடையது.
அழும் கண்கள்
Updated on
1 min read

திருக்குறளில் காமத்துப்பால் களவியல், கற்பியல் என்று இரண்டு பகுதிகளை உடையது. இவற்றுள் கற்பியலில் உள்ள "கண் விதுப்பு அழிதல்' எனும் அதிகாரத்துள் அமைந்துள்ள பத்துக் குறள்களிலும் தலைவியின் கண்கள் குறித்தும், தலைவனைப் பார்த்தக் கண்கள் படும்பாடு குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளன.

கண் விதுப்பு அழிதல்:கண் விதுப்பு அழிதல் என்பது, கண்கள் காதலரை விரைந்து பார்க்க வேண்டும் எனும் துடிப்பால் வருந்துவதாகும். மனம் ஒரு பொருளைப் பார்க்க விரும்பும்போது கண்களுக்குக் கட்டளையிடும். அப்போது கண்கள் ஆர்வத்துடன் பார்க்கத் தூண்டும். மனம் எந்தப் பொருளையும் நாடவில்லை என்றால், கண்கள் விழித்திருந்தாலும் அவை பார்க்க ஆர்வம் கொள்ளமாட்டா. கண் பார்வைக் குணம் பெற்றிருந்தாலும் மனம் விரும்பவில்லையென்றால், அப்போது ஏற்படும் குறையினைக் கண்கள் மீது சுமத்தி, அதைக் கண் விதுப்பழிதலில் கூறியுள்ளார் வள்ளுவர்.

இக்காம நோய் தலைவிக்கு உண்டாகக் காரணமாக இருந்தது இக்கண்கள்தாம். ஆனால், இப்போது அக்கண்கள் தலைவனைப் பார்க்க முடியாததற்கு வருந்துகின்றன. இது முறையோ? (1171) என்று தலைவி கூறுகிறாள்.

கண்களில் நீர் வற்றிவிட்டன:தலைவி வேதனையோடு தோழியிடம், ""என் கண்கள் அவரது காதல் நோக்கைச் சந்தித்ததால் அன்பு வளர ஆரம்பித்தது. இப்போது அவர் பிரிந்துதான் உள்ளார். ஆனாலும், அவரைப் பார்க்கக் கண்கள் துடிக்கின்றன. என் கண்கள் வழியாகச் செல்லும் ஏக்கத்தை என்னால் நிறுத்த முடியவில்லை. எனக்கு ஏற்பட்ட இத்துன்பம் தீராமலிருந்தால் நான் பெருந்துன்பத்திற்குள்ளாகி, மனநோய்க்கு உள்ளாகி விடுவேனோ என்ற பயம் எனக்கு ஏற்படுகிறது. கண்ணில் நீர் இருப்பது இயற்கையாகும். ஆனால், என் கண்களோ நீரை இழந்த நிலைக்கு வந்துவிட்டன'' (1174) என்கிறாள்.

எப்போதும் தூக்கமில்லை : பிரிந்து சென்ற தலைவன் பணியை முழுமையாக முடித்துவிட்டு வந்தால்தான் மறுபடியும் போகமாட்டார். அவர் வந்துவிட்டால் இக்கண்கள் அமைதி கொள்ளுமா? ஆழ்ந்து தூங்குமா? என்று எண்ணினாள். அவர் வராதபோது வரவில்லையே என்று எண்ணிக் கண்கள் தூங்காமலிருக்கும். வந்துவிட்டால் பிரிந்து சென்றுவிடக்கூடாதே (1179) என்று தூங்காமலிருக்கும்.

இக்கண்கள் நீரை வடித்துக்கொண்டே இருப்பதால், காமநோயாகிய இரகசியத்தைத் தலைவியால் மறைக்க முடியவில்லை. காரணம், அவள் கண்கள் அழுது அழுது பறைசாற்றி, ஊரார்க்கு அனைத்தையும் அறிவித்து விடுகின்றன. பரிமேலழகரும் ""எம்மைப் போன்ற கண்களை உடையவர்களின் நெஞ்சில் அடக்கி வைத்துள்ளவற்றை ஊரார் அறிவது எளிது'' என்று, "மறைபெறல் ஊரார்க் கரிதன்றால் எம்போல் அறைபறை கண்ணார் அகத்து' (1180) எனும் குறளுக்கு உரை எழுதியுள்ளார்.

தலைவன் கற்பு வாழ்வில் பிரிந்துள்ளதைப் பொறுத்துக் கொள்ள முடியாத தலைவி, இந்நிலைக்குக் காரணம் தலைவனை எனக்குக் காண்பித்த என் கண்கள்தான். அதனால்,

என் கண்கள் அழுதுகொண்டே இருக்கட்டும். என்னைத் துன்பப்படுத்திய இக்கண்களும் துன்பப்படட்டும் என்கிறாள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com