அங்கதப் பாட்டின் இன்றைய முகங்கள்

ஒருவரது கீழ்மை குணத்தை நகைச்சுவை தோன்ற நயமாகப் பழித்துரைப்பது அங்கதம் எனப்படும். இது செம்பொருள் அங்கதம், பழிகரப்பு அங்கதம் என இருவகைப்படும்.
அங்கதப் பாட்டின் இன்றைய முகங்கள்
Updated on
1 min read

ஒருவரது கீழ்மை குணத்தை நகைச்சுவை தோன்ற நயமாகப் பழித்துரைப்பது அங்கதம் எனப்படும். இது செம்பொருள் அங்கதம், பழிகரப்பு அங்கதம் என இருவகைப்படும்.

தனி மனித ஒழுக்கம் பேணப்பட்டால் சமுதாயச் சீர்திருத்தம் தானாகவே உருவாகும் என்று நம்பிய நம் சான்றோர், அரிய பல நீதி நூல்களை ஆக்கியளித்தனர். சமுதாயத்தில் மற வழியில் ஊறிக்கிடந்த மனித மந்தையால் நன்மைகள் நலிந்து, புன்மைகள் மலிந்தன. அந்நிலையில், அதர்மத்தின் அகோரத் தாண்டவம் கண்டு ஆத்திரம் கொண்ட புலவர் பெருமக்கள், சமுதாயச் சாபக்கேடுகளைச் சாடி அழிக்க அங்கதப் பாடல்களை ஆயுதங்களாகக் கொண்டனர் போலும்!

மேடைகளில் ஏறி நின்று அலங்காரச் சொற்களால் ஆகாயப்பந்தல் போடும் வாய்ச்சொல் வீரர்கள் அக்காலத்திலும் இருந்திருக்கிறார்கள். மெய்ப்பொருள் காணும் மேதா விலாசம் இல்லாமையால், வீணர்களின் வெற்றுரையைக் கேட்டுத் தலையாட்டிப் பாராட்ட அப்பாவிப் பொதுமக்களுக்கும் அன்று பஞ்சமில்லை. இந்த அவலம் கண்டு மனம் வெதும்பிய ஒரு புலவரது வேதனையின் வெளிப்பாடுதான் பின்வரும் பாடல்.

""குரங்கு நின்றுகூத் தாடிய கோலத்தைக் கண்டே

அரங்கு முன்புநாய் ஆடிக்கொண் டாடுதல் போல

கரங்கள் நீட்டியே பேசிய கசடரைக் கண்டே

சிரங்கள் ஆட்டியே மெச்சிடும் சிறியவர் செய்கை!''

(விவேக சிந்தாமணி, பா.109)

தங்கள் கைகளை வீசி ஆட்டியபடி பேசிய அற்பர்களைப் பார்த்து மூடர்கள், தங்கள் தலைகளை அசைத்துப் புகழ்ந்திடும் செய்கையானது, குரங்கு ஒன்று அரங்கத்தில் நின்று கூத்தாடிய அழகைப் பார்த்து, அவ்வரங்கத்தின் முன்பு நாயொன்று தானும் ஆடி அக்குரங்கை மெச்சியதைப் போன்றதாகும் என்பது பாடலில் பொருள். இப்பாடலில், மந்தியின் செய்கையும் மடையரின் செய்கையும் விளக்கப்பட்டுள்ளது.

இன்னொரு கவிதை "கேலிச்சித்திரம்' நம் கருத்துக்கு விருந்தளிக்கிறது. சமுதாயத்தில் மூடரை மூடர் கொண்டாடும் முட்டாள்தனத்தைப் பார்த்து மூண்டெழுந்த எரிச்சலில் முளைக்கிறது இப்பாடல்.

""கழுதை காவெனக் கண்டுநின் றாடிய அலகை

தொழுது மீண்டுமக் கழுதையைத் துதித்திட அதுதான்

பழுதி லாநமக்கு ஆர்நிக ராமெனப் பகர்தல்

முழுதும் மூடரை மூடர்கொண் டாடிய முறைபோலாம்''

(வி.சி.பா.49)

"கா'வெனக் கதறிய கழுதையின் குரல் கேட்டுக் களிப்புடன் கூத்தாடிய பேய் ஒன்று, அதைத் தொழுது துதி பாடுகிறதாம். அதைக்கேட்ட கழுதை, "இசையில் நமக்கு எவர் நிகராக முடியும்?' என்று இறுமாந்து கூறுகிறதாம். புல்லர்தம் புன்மையை நகைச்சுவையோடு பரிகசிக்கும் இப்பாடலில் "பழிகரப்பு அங்கதம்' பயின்றுவரக் காண்கிறோம்.

அங்கதம் பாடிய அன்றையப் புலவர்களும் சரி, கருத்துப் படங்கள் தீட்டும் இன்றையக் கலைஞர்களும் (கேலிச் சித்திரக்காரர்) சரி, சமுதாயத்தின் நெறி பிறழ்வுகளை நகைச்சுவையோடு இடித்துரைத்து, நேர்வழி காட்டும் அறப்பணியில் தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர்கள். முன்னது பாட்டுச் சித்திரமென்றால், பின்னது கோட்டுச் சித்திரம். நடுவுநிலைமை, நகைச்சுவை உணர்வு, சமுதாய அக்கறை என்பன இருவருக்கும் பொதுமைப் பண்புகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com