இந்திய அரசர்களின் நடமாடும் அரண்கள்!

யானைகளுக்கு அதன் உருவ அமைப்பை வைத்தும், உடல் உறுப்புகளை வைத்தும் தமிழில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பெயர்கள் வழங்கப்படுகின்றன. சங்க இலக்கியங்களில் பெரிதும் இடம் பெற்றுள்ள விலங்கு யானை. மதில்களைப் பிளக்கவும்,
இந்திய அரசர்களின் நடமாடும் அரண்கள்!
Published on
Updated on
2 min read

யானைகளுக்கு அதன் உருவ அமைப்பை வைத்தும், உடல் உறுப்புகளை வைத்தும் தமிழில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பெயர்கள் வழங்கப்படுகின்றன. சங்க இலக்கியங்களில் பெரிதும் இடம் பெற்றுள்ள விலங்கு யானை. மதில்களைப் பிளக்கவும், கதவுகளைத் தகர்க்கவும் வெறியூட்டப்பட்ட யானைகள் பயன்படுத்தப்பட்டன. யானைகளின் எண்ணிக்கை அரசனின் வலிமையைக் காட்டின. யானையின் குணங்களைப் பரணர் மிகச் சிறப்பாகப் பட்டியலிட்டுள்ளார் (அகநானூறு-148).

யானையின் உறுப்புகளை உவமையாகவும், பொருளாகவும் கூறும் பகுதிகள் சங்க நூல்களில் உண்டு. முல்லைப் பாட்டு (70) யானையின் துதிக்கையைப் ""பாம்பு தைப்பன்ன பரூஉக்கை'' என்கிறது. களிறுகள் பல வெட்டுண்டு கிடந்த பரந்த போர்க்களம், பனைமரத் துண்டுகள் பல கிடந்தாங்குக் காணப்பட்டதாக,

""வெளிற்றுப் பனந்துணியின் வீற்றுவீற்றுக் கிடப்ப

களிற்றுக் கணம்பொருத கண்ணகன் பறந்தலை''

(புறம் 35: 22-23)

என்கிறது புறநானூற்றுப் பாடல்.

யானையின் செவியை முறத்திற்கு ஒப்பிட்டு, ""முறஞ்செவி யானை'' (புறம் 339:13) எனப் புறநானூறும், ""முறஞ்செவி வாரணம்'' (கலி.42: 2) எனக் கலித்தொகையும் சுட்டும்.

யானையின் சீற்றத்துடன் கூடிய செய்கைக்குக் காற்றுக் கிளர்ந்து வீசியதை உவமையாக்கி, ""கால் கிளர்ந்தன்ன வேழம்'' என்கிறார் நக்கீரர்(முருகு 82).

மாங்குடி மருதனார் வெறிகொண்ட வேழத்தின் செய்கைகட்கு,

""கடுங்காற் றெடுப்பக் கல்பொரு துரைஇ

நெடுஞ்சுழிப் பட்ட நாவாய் போல''

(மதுரை 378-379) எனக் கடுங்காற்றில் அகப்பட்டு அசையும் கப்பலை உவமையாக்கினார்.

""உறங்குபிடித் தடக்கை ஒருங்குதிரைத் தவைபோல்

இறங்கு குரல்'' (பெருங் 1.49: 103-104)

என யானையின் துதிக்கையைத் தினைக் கதிர்களுக்கு உவமையாகக் கொங்கு வேளும் கூறியுள்ளார்.

சிறுபாணாற்றுப்படையில் விறலியின் தொடைக்குத் துதிக்கை உவமையாக்கப்பட்டுள்ளது.

""ஈர்த்துநிலந் தோயு மிரும்பிடித் தடக்கையிற்

சேர்ந்துடன் செறிந்த குறங்கு'' (சிறுபாண்.19-20)

பெண்களின் பின்னப்பட்ட கூந்தல் துதிக்கை போன்றிருத்தலை ""பிடிக்கை யன்ன பின்னகம்'' (அகம்.9:22) என்று கூறுகிறது அகப்பாடலொன்று.

சங்க நூல்களில் உவமையாகக் கூறப்பட்ட யானைகள் போருக்கும் பயன்படுத்தப்பட்டமை குறித்தும் அந்நூல்கள் பேசுகின்றன. போர்க் காலங்களில் யானையின் பிடரியில் முரசு வைத்து முழக்கப்படும், ஏம முரசு (கலி. 79) என்ற முரசு புலியைக் கொன்ற யானையின் தோலால் செய்யப்பட்டதாகக் குறிப்புண்டு (மதுரை 732-733).

நால்வகைப் படைகளுள் யானைப் படையே போரில் முன் சென்று பகைவர்களுக்கு அச்சத்தையும், நாசத்தையும் விளைவிக்கும். இவ்வாறு பழக்கப்பட்ட யானைகள் போருக்குப் பயன்படுத்தப்பட்ட செய்தியை தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. பட்டினப்பாலை (229-31), அகநானூறு (26:6), திருக்குறள் (772,758), முத்தொள்ளாயிரம் (20) முதலிய செய்யுள்கள் யானைகள் போரில் ஈடுபடுத்தப்பட்டதைச் சொல்கின்றன.

தமிழ் மன்னர்களின் படைகளில் யானைகள் முக்கியத்துவம் பெற்றிருந்தன. பல்லவ மன்னர்கள் யானைப் படைக்கு முக்கியத்துவம் அளித்துள்ளனர். அவர்களது கல்வெட்டுகளில் கஜம், மதங்கம், நாகா, கரி, இப்றா, வாரணம், குஞ்சரம், சிந்தூரம் ஆகிய பெயர்களில் யானைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. யானைகள் தொடர்பான அறிவியல் நூலாக கஜ சாஸ்திரம் என்ற நூல் இருந்திருக்கிறது.

முதலாம் பரமேஸ்வரவர்மன், சாளுக்கிய மன்னன் விக்கிரமாதித்யனுடன் நிகழ்த்திய போரில் யானைப் படைகளின் பங்களிப்பை கூரம் செப்பேடுகளும், பல்லவர்களும் அவர்களது பகைவர்களும் யானைப் படைகளைக் கொண்டிருந்தமையை உதயேந்திரம் செப்பேடுகளும், அபராஜித பல்லவனின் கல்வெட்டொன்று அவன் சோழ மன்னனுடன் நடத்திய சிற்றாற்றுப் போரில் யானைப் படையின் துணையுடன் வென்றதையும் குறிப்பிடுகின்றன. பரமேஸ்வரவர்மனின் பட்டத்து யானை அரிவர்ணா என்ற பெயரைக் கொண்டது. அதன் மேல் அவன் அமர்வதற்காக அமைக்கப்பட்ட அம்பாரம் குறித்து கூரம் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன.

பல்லவர்களைப் போன்றே சோழர்களும் யானைப் படையைக் கொண்டிருந்தனர். சுந்தர சோழனின் பட்டத்து யானையின் போர்க்கள ஆற்றலை அன்பில் செப்பேடுகளும், ராஜாதித்யன் என்ற சோழ இளவரசன் போர்க்களத்தில் யானையில் வீற்றிருந்த நிலையில் கொல்லப்பட்டதை பெரிய லெய்டன் செப்பேடுகளும் கூறுகின்றன.

போருக்கு மட்டுமல்லாது மன்னர்களுக்கிடையே பரிமாறப்படும் அன்பளிப்புப் பொருள்களில் ஒன்றாகவும் யானைகள் விளங்கின என்பதை, புறநானூறு 135, 131, 130, 129, 140, 148, 151, 153, 165, 233 ஆகிய பாடல்கள் கூறுகின்றன.

சங்க இலக்கியங்களில் பல்வேறு வகைகளில் புகந்துரைக்கப்பட்ட யானைகள், அன்னியரிடமிருந்து நம் நாட்டைக் காப்பாற்றிய போர் யானைகள், இந்திய அரசின் நடமாடும் அரண்களாக இருந்த யானைகள் இன்று காடுகளில் வாழ முடியாமலும், ஊருக்குள் நுழைய விடாமலும் தடுக்கப்படுகின்றன. யானைகளின் வாழ்விடங்களை அழித்தும், மின் வேலிகள் அமைத்தும், தந்தங்களுக்காக அவற்றின் உயிரை பறித்தும் தொடர்ந்து அவற்றை அச்சுறுத்தி வருவது வருந்தத்தக்கது. யானை மனித இனத்துக்கு செய்த உதவியை நினைத்து மனிதன் அந்த விலங்குக்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டாமா?

-சி.இராஜாராம்

(ஆகஸ்ட்-12 உலக யானைகள் தினம்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com