உயிர் வகைகள் எண்பத்து நான்கு இலட்சம் என்று நம் முன்னோர்கள் எவ்வாறோ கண்டறிந்துள்ளனர். திருஞானசம்பந்தர், திருவீழிமிழலையைப் பாடும்போது, ""உரைசேரும் எண்பத்து நான்குநூ றாயிரமாம் யோனி பேதம் நிரைசேரப் படைத்தவற்றின் உயிர்க்குயிராய் அங்கங்கே நின்றான் கோயில்'' என்று பாடியுள்ளார்.
இவ்வுயிர்கள் இனவகையால் தேவர், மக்கள், விலங்கு, ஊர்வன, நீர்வாழ்வன, பறவை, தாவரம் என்று எழுவகைப்படும், அஃதாவது ஊர்ந்து செல்லும் உயிரினம் 11 இலட்சம்; மனித இனம் 9 இலட்சம்; நீர்வாழ் உயிரினம் 10 இலட்சம்; பறவை இனம் 10 இலட்சம்; நாற்கால் விலங்கினம் 10 இலட்சம்; தேவரினம் 14 இலட்சம்; தாவர இனம் 20 இலட்சம். ஆக மொத்தம் 84 இலட்சம் வகை என்பது "ஊர்வன' என்று தொடங்கும் பழம்பாடல் ஒன்றால் தெரிய வருகிறது.
இவ்வுயிர்கள் அனைத்தும் நான்கு வகையாகப் பிறக்கின்றன. ஒரு வகை குழந்தை, கன்று போன்று கருவிலிருந்து பிறப்பன. மற்றொரு வகை ஈர், பேன் போன்று வியர்வையிலிருந்து உண்டாவன. இன்னொரு வகை கோழி, பல்லி போன்று முட்டையிலிருந்து வருவன. பிறிதொரு வகை மா, பலா போன்று விதையிலிருந்து தோன்றுவன. இவற்றை முறையே சராயுஜம், சுவேதஜம், அண்டஜம், உத்பீஜம் என்று வடமொழியில் குறிப்பர். கல்லும் மண்ணும் பிறப்பவை அல்ல; இயற்கை. இதனால்தான் ""கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்....பிறந்திளைத்தேன்'' என்னும் திருவாசகத் தொடர் ""கல்லா மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்'' என்று இருந்து ஏடெழுதுவோரால் "கல்லாய்' என்று பிழையாக எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
இத்தனை உயிர்கள் இருந்தாலும் ஒன்றினைப்போல் மற்றொன்று இருப்பதில்லை. ஓர் இன உயிர்களினிடையேகூடத் தோற்றம், இயல்பு முதலானவற்றில் வேறுபாடுகள் அமைந்துள்ளன. பெற்றோர்களின் உடலமைப்பில் சில கூறுகளைப் பிள்ளைகளிடத்தில் காண முடியும் என்றாலும், முற்றிலும் அவர்களைப் போன்றே தோற்றம் இருப்பதில்லை. எனினும் எங்கோ ஓர் இடத்தில் ஒருவரைப் போல் மற்றொருவர் தோற்றம் இருப்பதை அரிதினும் அரிதாகப் பார்க்க முடிகிறது.
கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டூல்கர் போன்றே தோற்றமளித்த ஒருவர் விளையாட்டு அரங்கில் அமர்ந்திருப்பதைச் சில ஆண்டுகளுக்கு முன்பு தொலைக்காட்சியில் காட்டினார்கள். அண்மையில் இந்திய வீரர் விராட் கோலியைப் போன்றே அகமத் செஷாட் (Ahmed Shehzad) என்னும் பாகிஸ்தான் வீரர் தோற்றமளிப்பதாகச் செய்திகள் தெரிவித்தன. அமெரிக்க நடிகர் ஜானி டெப் Johny Depp) என்பவர் கேப்டன் ஜாக் ஸ்பேரோ (Captain Jack Sparrow)என்னும் வேடத்தில் நடித்திருந்தார். அந்தப் பாத்திரம் போன்றே தோற்றமளிக்கும் ஒருவர் தில்லியில் கைவண்டி இழுப்பதைப் படம்பிடித்துப் பெண்மணி ஒருவர் முகநூலில் பதிவிட்டிருந்தார். இப்படி ஒரே அச்சில் வார்த்தெடுக்கப்பட்டது போன்ற தோற்றம் உடையவர்களை Doppelganger என்பர்.
Doppelganger என்பது ஜெர்மன் மொழியிலிருந்து ஆங்கிலத்தில் குடியேறிய சொல். ஜெர்மன் மொழியில் Doppel என்பது இரட்டை என்றும் ganger என்பது நடப்பவர் என்றும் பொருள்படும். இது பேய், மாயத்தோற்றம் போன்றவற்றைக் குறித்தபோதிலும் தலைமைப் பொருள் ஒருவரைப் போன்ற உருவம் கொண்ட பிறிதொருவரைக் குறிப்பதே ஆகும். இதற்கு ஏற்ற தமிழ்ச் சொல்லாக,
* சந்திரா மனோகரன் - பேயுரு, ஆவியுரு, இருவரின் ஒரே உருவத்தோற்றம்
*என்.ஆர். ஸத்யமூர்த்தி - தன்னச்சு, தன்னிரட்டை
* கா.மு. சிதம்பரம் - உருவெளிப்பாடு,
உருவெளித்தோற்றம்
*ப.இரா. இராசஅம்சன் - ஒத்த தோற்றமுடையோன்
* சு. சாயி கிரிதர் - நிழல் அலகை, அச்சலகை,
இரட்டைக்கூளி
* கோ. மன்றவாணன் - உருப்போலி, ஒருசாயலர்,
அச்சுருவம், நிகரர்
* தி. அன்பழகன் - உயிராவி
* வெ.ஆனந்தகிருஷ்ணன் - பேயுரு, ஆவித்தோற்றம்
ஆகிய சொற்களைப் பரிந்துரைத்துள்ளனர். மேற்கூறிய பொருளுக்கு ஏற்றவையாக உருப்போலி, தன்னச்சு, அச்சுருவம் ஆகிய சொற்கள் உள்ளன. எழுத்துப்போலி என்பதுபோல உருவப் போலி என்றோ அச்சு உரு என்றோ குறிக்கலாம். "அவரின் அச்சுரு இவர்' என்று கையாளலாம்.
Doppelganger - உருவப் போலி அல்லது அச்சு உரு.
அடுத்த வாரத்திற்குரிய சொல் : Ego ( ஈகோ )
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.