அரிய - அறியாத நூல்கள்!

தமிழ் மக்கள் அறியாத - அரிய நூல்கள் இன்னும் ஆயிரக்கணக்கில் உள்ளன என்பது ஒரு வியப்பான செய்தியாகும்!
அரிய - அறியாத நூல்கள்!

தமிழ் மக்கள் அறியாத - அரிய நூல்கள் இன்னும் ஆயிரக்கணக்கில் உள்ளன என்பது ஒரு வியப்பான செய்தியாகும்!

பழனி தண்டாயுதபாணி பிள்ளைத் தமிழ், பெரியநாயகி அம்மன் பிள்ளைத் தமிழ், வீர குமார நாடகம், வீரையன் அம்மானை, பாபவிநாசத் தல புராணம், பினாங்கு தண்ணிமலை வடிவேலன் பதிகம், வங்காளம் தண்டபாணி பதிகம், மன்மதன் கதை, காசி மகத்துவம், காந்தாதி அசுவ மகம், திருமண பவனி, நாவான் சாத்திரம், முத்தைய நாயக்கர் பிள்ளைத் தமிழ், பாரதக் குறவஞ்சி, மார்க்கண்ட நாடகம், முத்துநாச்சி சண்டை, ஊமைத்துரை சண்டை, குருசேத்திர மாலை, பெருமாள் அம்மானை, அல்லி அரசாணி அம்மானை, அப்பைய நாயகர் வள மடல், சுப்பிரமணியர் வளைய வீடு - இத்தகைய நூல்கள் எல்லாம் இன்னும் தஞ்சை சரஸ்வதி நூல் நிலையத்தில் சுவடியாகவே உள்ளன.

தமிழ்த் தாத்தாவின் அரிய முயற்சியால் எண்ணற்ற ஓலைச் சுவடிகள் அச்சேறின. அவர் காலத்துக்குப் பின் உ.வே. சாமிநாதையர் நூல் நிலையத்தில் இருந்த "திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் குறவஞ்சி' ஓலைச்சுவடி அச்சு வடிவம் பெற்றது. இன்னும் பல, ஓலைச்சுவடிகளாகவே உள்ளன.

உண்மையான தமிழ் வளர்ச்சி என்பது, இப்படி அச்சேறாமல், ஓலைச்சுவடி வடிவில் இருக்கும் பழந்தமிழ் நூல்களைத் தேடிப் பிடித்து அவற்றைப் புத்தக வடிவில் தருவதே ஆகும். வெளிநாடுகளில்கூட நமது பழைய நூல்கள் ஓலைச் சுவடிகளாக உள்ளதாக தனிநாயகம் அடிகளார் கூறியுள்ளார்; அவற்றைப் பார்த்தும் உள்ளார்.

இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, கேம்பிரிட்ஜ், ஆக்ஸ்போர்டு, அயர்லாந்து, மேற்கு ஜெர்மனி, கிழக்கு ஜெர்மனி, பிரான்ஸ், டென்மார்க், ரோம், ஸ்வீடன், லெனின்கிராட் - முதலிய வெளிநாட்டு / நகரங்களில் உள்ள சுவடி நூலகங்களில் ஆயிரக்கணக்கான தமிழ் நூல்களும், ஓலைச்சுவடிகளும் பாதுகாக்கப்பட்டுள்ளன. இராஜராஜ சோழனின் முக்கியமான செப்பேடுகள் இன்று நம்மிடையே இல்லை. அவை "லெய்டன்' செப்பேடுகள் எனக் குறிக்கப்பட்டு வெளிநாட்டில் உள்ளன.

தெலுங்கிலிருந்து தமிழ் மொழியில் பெயர்த்து எழுதிய "பாகவத புராண வசனம்' என்னும் ஓலைச்சுவடியும், மலையாளம் கலந்த தமிழில் "வர்மக் கலை' பற்றிய வர்ம நூல் சுவடியும் தஞ்சை நூல் நிலையத்தில் உள்ளன.

முகம்மது நபியின் திருமணம் பற்றிய விரிவான வரலாற்றை விளக்கும் "திருமணப் பவனி', "நூருநாமா', "அய்யம்பேட்டை பாச்சா ராவுத்தர் பவனி' முதலிய ஓலைச்சுவடிகள் இங்கே உள்ளன. முகம்மதி அண்ணாவியார் என்ற இஸ்லாமியப் புலவர் மேற்கண்ட நூல்களேயன்றி, "சாந்தாதி அசுவமகம்' என்ற பெயரில் மகாபாரதக் கதையை 4,000 பாடல்களில் எழுதியுள்ளது வியப்பான செய்தி!

மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் பிரபந்தங்கள் அனைத்தும் அச்சில் ஏறவில்லை என்பதே உண்மை. தமிழ்த் தாத்தாவின் அரிய முயற்சியால் அவரது காலத்தில் "மகா வித்வான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் "பிரபந்தத் திரட்டு' என்று தொகுத்து வெளியிட்டார். ஆனால், இன்று அவருடைய நூல்களைத் தொகுத்து வெளியிட யாருமில்லை.

அச்சில் வராத, எங்கோ மூலையில் மறைந்து கிடக்கும் தமிழ் ஏடுகளையெல்லாம் வெளிக்கொணர்ந்து, அவற்றை நூல் வடிவம் பெறச்செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே தமிழ் மேன்மேலும் செழித்து ஓங்கும்; அறியாத பல அரிய செய்திகள் வெளிச்சத்துக்கு வரும்; தமிழர் சிறப்பும் ஓங்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com