
இலக்கியங்கள் அவை எழுதப்பெற்ற காலச் சமூகத்தை எதிரொளிப்பதால் அவை காலக் கண்ணாடி எனப்பெறுகின்றன. சில இலக்கியங்கள் பெரும்பான்மையாகச் சமூகத்தையும், சிறுபான்மையாகப் புனைவையும் கொண்டு எழுதப்பெறுகின்றன. இவற்றினூடே வெகு சில இலக்கியங்கள் நடந்த நிகழ்வை அப்படியே பதிவு செய்திருப்பதையும் காணமுடிகிறது.
அவ்வகையில், 1955-இல் தமிழகத்தில் வீசிய புயலை மையப்படுத்தி, அதன் தாக்கத்தைப் பதிவு செய்துள்ள நூல் "தமிழ்நாட்டில் வீசிய புயல்'. அப்புயலின் தாக்குதலைக் குளமங்கலம் ச. இராமசாமி என்ற புலவர் "நொண்டிச் சிந்தில்' பதிவு செய்துள்ளார். நூலின் தொடக்கத்தில் புயல் வீசிய ஆண்டு, மாதம், நாள் ஆகியவற்றைச் சுட்டும் வெண்பாவொன்று இடம் பெற்றுள்ளது. அதில் 1955, நவம்பர் 30-ஆம் நாள் என்பன குறிக்கப்பெற்றுள்ளன. 30 பாடல்களைக் கொண்ட அந்நூலில் புயலின் ஆட்டத்தை ஒரு பாடல் கீழ்வருமாறு குறிப்பிடுகிறது.
ஊருகள் அழித்திடுமாம் - வெள்ளம்
ஊதி வந்த காற்றுடனே போட்டியிடுமாம்!
சீருகள் அழிந்திடுமாம் - கல்விச்
செல்வங்கள் தழைக்கின்ற கலைக்கோயிலில்
ஆறுகள் நுழைந்திடுமாம் - அதன்
அருகிருந்த சோலைகளும் மரங்களுமே
வேருகள் பிடுங்கிடுமாம். வெள்ளம்
விழுங்கிவிட்ட நூல்களுக்கும் கணக்கில்லையாம்.
மரங்கள் வேரொடு சாய்ந்தன, கூரைகள் பறந்தன. ஆடு மாடுகள் அடித்துச் செல்லப்பட்டன. பெரியோரும் குழந்தைகளும் உணவின்றித் தவித்தனர் என்றெல்லாம் கூறியுள்ளார். புயல் போலவே காமராசர் சுற்றிச் சுழன்று செயல்பட்டதை,
உன்னையும் வென்றிடுமாம் - நாங்கள்
ஓட்டு விமானங்களும் திட்டங்களையும்
தன்னையும் சுழற்காற்றாய் - அந்தத்
தருணத்தில் ஆக்கிக் கொண்ட காமராசரும்
நன்மனை மாடிழந்தோ - அங்கு
நலிந்திட்ட யாவர்க்கும் உணவளித்த
தன்மையை என்னென்போம் - தேசத்
தலைவர் கடமைக்கும் நன்றி யுரைப்போம்!
என்ற பாடல் குறிப்பிடத்தக்கதாகும்.
பழைமையிலிருந்து பாடம் கற்றுக் கொள்வதற்காகத்தான் இதுபோன்ற நூல்கள்
எழுதப் பெறுகின்றன எனலாம்.
இந்நூலாசிரியரின் தந்தையார் பெயர் தா. சத்துரு சங்காரவேல்சாமி. இவரும் "குளமங்கலம் அருள்மிகு பெருங்காரையடி மிண்டையனார் பக்திப் பாமாலை' என்றொரு நூலைப் பாடியுள்ளார். அவர் புதல்வரான இந்நூலாசிரியர் "தமிழ்நாட்டில் வீசிய புயல்' என்ற நூல் மட்டுமின்றித் "தன்னாண்மைத் தங்கம்மாள்' என்ற காவியத்தையும் ஆக்கியுள்ளார். மதுவின் தீமையைச் சுட்டிக்காட்டும் நோக்கில் "உன்னைத் தொடலாமா?' என்ற தலைப்பிலான ஓரங்க நாடகத்தை எழுதி, அதைப் பல்வேறு இடங்களில் அரங்கேற்றியுள்ளார். திருக்குறளுக்கு உரை எழுதியுள்ளார். "பெருங் காரையடி மிண்டையனார் கோவில்' வரலாற்றை எழுதியுள்ளார். நாடகம், திருக்குறள் உரை, கோவில் வரலாறு ஆகிய மூன்று நூல்களும் அச்சாகி வெளிவரவிருந்த நிலையில், ஒரு மாதத்திற்கு முன்பு காலமாகிவிட்டார் என்பது வருத்தத்திற்குரிய செய்தியாகும்.
-முனைவர் அ.செல்வராசு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.