இந்தவார கலாரசிகன்

இந்தவார கலாரசிகன்

கவிஞர் வைரமுத்து "மகிழ்ச்சி' என்கிற தனது கவியரங்கக் கவிதையில் "மகிழ்ச்சி என்பது மனதின் கொள்ளளவு' என்பார். இந்திய நாடாளுமன்ற வளாகத்தில் தமிழ் ஒலித்தபோது, "திருக்குறள்' மாணவ, மாணவியரால் ஒப்பிக்கப்பட்டபோது, எனது மகிழ்ச்சி எப்படி இருந்தது தெரியுமா? அதன் கொள்ளளவு எவ்வளவு தெரியுமா? சமீபத்திய சென்னை அடைமழை வெள்ளத்தில் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி வழிந்ததே அந்த அளவு கொள்ளளவு மகிழ்ச்சியில் மூழ்கினேன் நான். திளைத்தேன் அல்ல, மூழ்கினேன்!

எப்படிப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு அது தெரியுமா? நாடாளுமன்ற அவை கூடியும் செயல்படாமல் அத்தனை அரசியல் கட்சிகளும் முட்டி மோதிக் கொண்டிருந்த நேரம். அதே நாடாளுமன்ற வளாகத்தில், அடுத்த சில மணி நேரத்தில் அவை கூடிக் கூச்சலும் குழப்பமும் எழுவதற்கு முன்னால், பல்வேறு கட்சித் தலைவர்கள் ஒற்றுமையாக ஒருங்கிணைந்திருந்தார்கள். இப்படி எதிரும் புதிருமான பா.ஜ.க.வையும், காங்கிரûஸயும்கூட இணைத்துவிட முடிந்த அந்தச் சக்தியின் பெயர் - "திருக்குறள்'. இந்திய தேசத்தைத் திருக்குறளின் மூலமாக ஒருங்கிணைத்த பெருமைக்குரியவர் தருண் விஜய்.

தருண் விஜயின் திருக்குறள் பற்றுக்கும், தமிழ்க் காதலுக்கும் காரணம் கற்பிக்க முற்படுபவர்களுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புவதெல்லாம் ஒன்றுதான். ஐரோப்பியர்களான வீரமாமுனிவருக்கும், ஜி.யு. போப்புக்கும், கால்டுவெல் பாதிரியாருக்கும்கூடத்தான் தங்களது மதத்தைப் பரப்பும் உள்நோக்கம் இருந்தது. அதற்காக அவர்களது பங்களிப்பை நாம் மறந்துவிட்டோமா இல்லை அவர்களது தமிழின் மீதான காதலை அங்கீகரிக்க மறுத்து விட்டோமா?

"திருக்குறள்' தேசிய நூலாக அறிவிக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை நாடாளுமன்றத்தில் எழுப்பப்படாவிட்டாலும், நாடாளுமன்ற வளாகத்தில் அன்று உரக்கவே எழுப்பப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் தோழர் டி.கே. ரங்கராஜன் "வள்ளுவரும், வ.உ.சி.யும் நாடாளுமன்ற வளாகத்தில் சிலை எழுப்பி கெளரவிக்கப்பட வேண்டும்' என்று எழுப்பிய கோரிக்கை அதைவிட முக்கியமானது.

யாருடைய மனதையும் புண்படுத்த வேண்டும் என்றோ, அரசியல் உள்நோக்கத்துடனோ நான் கூறுவதாக தயை கூர்ந்து எவரும் எடுத்துக் கொள்ளலாகாது. முரசொலி மாறனுக்கு சிலை வைத்ததில் எனக்கு எந்தவித எதிர்ப்பும் இல்லை. ஆனால், மத்திய அரசில் நீண்டநாள் ஆட்சிப் பொறுப்பில் இருந்த காங்கிரஸ் கட்சி கப்பலோட்டிய தமிழனுக்கு நாடாளுமன்ற வளாகத்தில் சிலை வைத்திருக்க வேண்டாமா? மத்திய அரசில் தங்களுக்கு இருந்த செல்வாக்கையும் அதிகாரத்தையும் பயன்படுத்தி முரசொலி மாறனுக்கு சிலையமைப்பதற்கு முன்னால், வள்ளுவப் பேராசானுக்கு நாடாளுமன்ற வளாகத்தில் சிலை அமைத்திருக்க வேண்டாமா? "தன்நெஞ்சறிவது பொய்யற்க, பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும்' என்கிற குறளை மட்டும் குறிப்பிட்டு இந்தப் பிரச்னையை முடித்துக் கொள்கிறேன்.

நாடாளுமன்ற வளாகத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த 133 மாணவச் செல்வங்கள் திருக்குறள்

ஒப்பித்தனர். அவர்கள் முகத்தில் இருந்த பெருமிதம், அவர்களிடம் காணப்பட்ட பெருமகிழ்ச்சி, திருக்குறள் ஒப்பித்தபோது அவர்களது குரலில் காணப்பட்ட கம்பீரம் - அடடா, இந்தப் பிறவியில் நான்

பெற்ற பெரும்பேறு அந்த நிகழ்வில் பாராட்டப்பட்டது அல்ல; அந்தத் குழந்தைகள் மத்தியில் நானும் இருக்க முடிந்ததுதான்.

நம்மில் யார் நினைத்திருந்தாலும் தமிழையும் திருக்குறளையும் இப்படி அகில இந்திய அளவில் கொண்டு போய் பரப்பியிருக்க முடியாது. அந்தச் சாதனையை தருண் விஜய் செய்திருக்கிறார். அவருக்கு ஒட்டுமொத்தத் தமிழகமே நன்றியுடன் தலைவணங்கக் கடமைப்பட்டிருக்கிறது!

இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருது திருவனந்தபுரம் ஆ. மாதவனுக்குத் தரப்பட்டிருக்கிறது. அவருக்கு "தினமணி'யின் வாழ்த்துகள்.

தில்லி நாடாளுமன்றத்தில் திருக்குறள் விழாவுக்குக் கோவையிலிருந்து டாக்டர் எல்.பி. தங்கவேலுவுடன் வழக்குரைஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் வந்திருந்தார். இங்கே விழா நடந்து கொண்டிருந்தபோதுதான் சாகித்ய அகாதெமி விருது குறித்த அறிவிப்பு வெளியானது. அந்தச் செய்தி வந்தபோது வழக்குரைஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் சாகித்ய அகாதெமி விருது குறித்து ஒரு சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்து கொண்டார்.

""சாகித்ய அகாதெமி விருது தொடர்பாக இந்தியாவில் வேறு எந்த மாவட்டத்துக்கும் இல்லாத தனிச்சிறப்பு எங்கள் நெல்லை மாவட்டத்துக்கு உண்டு. நெல்லை மாவட்டம் ராஜவல்லிபுரத்தைச் சேர்ந்த ரா.பி. சேதுப்பிள்ளைக்கு 1955-ஆம் ஆண்டும், அதே கிராமத்தைச் சேர்ந்த வல்லிக்கண்ணனுக்கு 1978-ஆம் ஆண்டும் சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. அதேபோல, இடைச்செவலைச் சேர்ந்த கு. அழகிரிசாமிக்கு 1970-ஆம் ஆண்டும், கி. ராஜநாராயணனுக்கு 1991-ஆம் ஆண்டும் சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. இப்படி ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் இருவருக்கு விருது வழங்கப்பட்டிருப்பது தமிழ்நாட்டில் மட்டுமே'' என்று தெரிவித்தார் அவர்.

கவிஞர் சிற்பியின் தனித்துவம் எப்போதுமே என்னை வியப்பிலாழ்த்தும். தலைநகர் சென்னையில் வாழ்ந்து ஊடகங்களின் வெளிச்சத்தில் பிரகாசித்தால் மட்டுமே எழுத்தாளர்களாகவும், கவிஞர்களாகவும் அறியப்பட முடியும் என்கிற பொது விதியை உடைத்தெறிந்தவர் அவர். தனது எழுத்து என்கிற காந்தத்தின் சக்தியால், தலைநகர ஊடகங்களைத் தன்னை நோக்கி ஈர்க்க முடிந்த பெருமைக்குரிய கவிஞர் அவர்.

முனைவர் க. சிவமணி, "சிற்பி கவிதைகளில் மனித உறவுகள்' என்கிற தலைப்பில் எழுதிய புத்தகம் விமர்சனத்திற்கு வந்திருந்தது. புத்தகத்தைப் படித்து முடித்தபோது எனக்குத் தோன்றிய கருத்து இதுதான். ""கவிஞர் சிற்பியின் கவிதைகளை இதுவரை படிக்காதவரிடம் இந்தப் புத்தகத்தைக் கொடுங்கள். அவர் கவிஞர் சிற்பியின் தொகுப்பு எங்கே கிடைக்கும் என்று தேடிப் போவார்!''

இந்தப் புத்தகத்தில் காணப்படும்

கவிதை ஒன்றையே இந்தவாரக் கவிதையாக நான் பதிவு செய்கிறேன். கவிஞர், காவிரி நீரைத் தரமறுக்கும் கர்நாடக மாநிலத்தின் போக்கை முன்னிறுத்தி எழுதிய கவிதை இது.

இந்தியாவில்

இனிமேல்

வெளிமாநிலத்தில் வாழ

விசா கேட்பார்களோ?

பக்கத்து மாநிலத்துக்குச்

செல்லவும்

பாஸ்போர்ட்

வேண்டுமோ?

பகத்சிங்கும்

வாஞ்சி நாதனும்

ரத்தத்தைத் தொட்டு

எழுதிய இந்தியாவை

இவர்கள்

தண்ணீரைத் தொட்டு

அழித்து விடுவார்களோ?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com