தாமரை, வெள்ளம், ஆம்பல்!

அறிவியலின் அடிப்படைத் துறைகளான இயற்பியல், உயிரியல், வேதியியல், கணிதவியல், வானியல், புவியியல், உயிரியல், சமூக அறிவியல் முதலிய துறைகளுள் 'அறிவியலின் அரசி' எனப் போற்றப்படுவது கணிதவியலாகும்.
தாமரை, வெள்ளம், ஆம்பல்!
Updated on
2 min read

அறிவியலின் அடிப்படைத் துறைகளான இயற்பியல், உயிரியல், வேதியியல், கணிதவியல், வானியல், புவியியல், உயிரியல், சமூக அறிவியல் முதலிய துறைகளுள் "அறிவியலின் அரசி' எனப் போற்றப்படுவது கணிதவியலாகும். இக்கணிதவியலில், எண்கணிதம், வடிவக் கணிதம், அளவையியல், இயற்கணிதம் முதலிய பல பிரிவுகள் உள்ளன. அந்தவகையில், தொல்காப்பியர் குறிப்பிடும் மூன்று பேரெண்களைப் பற்றியும், காப்பியத்தில் இடம்பெற்றுள்ள தாமரை, வெள்ளம், ஆம்பல் பற்றியும் காண்போம்.

தொல்காப்பியனார் தாமரை, வெள்ளம், ஆம்பல் என்னும் பேரெண்களை,

""ஐஆம் பல்என வரூஉம் இறுதி

அல்பெயர் எண்ணினும் ஆயியல் நிலையும்''

என்று (தொல்.எழுத்.394) குறிப்பிடுகிறார். இந்நூற்பாவிற்கு உரை கூறும் இளம்பூரணர், "பொருட்பெயர் அல்லாத எண்ணுப் பெயராகிய தாமரை, வெள்ளம், ஆம்பல் வந்தால் (எழுஞாயிறு, எழுநாள் போல்) நெடுமுதல் குறுக்கம் இல்லாமல் உகரமும் பெறாமல் அவ்வியல்பின்கண்ணே நின்று முடியும்' என்றெழுதி, ஏழ்தாமரை, ஏழ்வெள்ளம், ஏழாம்பல் என்ற எடுத்துக்காட்டுகளும் தந்து விளக்குகிறார். இவ்வுரை கிடைக்காமல் இருந்திருப்பின் இந்நூற்பாவின் பொருள் விளங்காமல் இடர்ப்பட்டிருப்போம்.

உரையாசிரியரான இளம்பூரணர், இந்நூற்பாவிற்குச் செம்பொருள் காண உதவிய நூல் தோலாமொழித் தேவரால் இயற்றப்பட்ட "சூளாமணி' காப்பியம் ஆகும். இவர், தாமரை, ஆம்பல் என்னும் பேரெண்களைத் தம் பாடல்களில் பொருத்திக் காட்டியுள்ளார்.

காப்பியத் தலைவனாகிய திவிட்டன் கோடிக்குன்றினை எடுத்தது கண்டு மகிழ்ந்த மகளிர்,

""தாமரை தங்குந் தண்புலல் வேலித் தடநீந்தி

தாமரை தங்குந் தண்புனல் தன்னாட் டகமெய்தித்

தாமரை தங்குந் தண்சுடர் ஒண்பொற் கலைநல்லார்

தாமரை தங்குந் தண்புகழ் பாடத் தகைபெற்றார்'' (சூளா : 1522)

"தாமரை மலர்கள் பூத்துக் குலுங்கும் குளிர்ந்த பொய்கைகளைக் கடந்து; தாமரை தங்கும் அஃதாவது திருமகள் தங்கும் (செல்வம் நிறைந்து விளங்கும்) நாட்டின் உள்பகுதியினை அடைந்து; தாமரை தங்கும் அஃதாவது (தா+மரை) தாவுகின்ற மான் தங்கும் சந்திரன் போல் ஒளிவீசும் மேகலை அணிந்த பெண்கள்; தாமரை தங்கும் தண்புகழ் அஃதாவது, தாமரை என்ற பேரெண் அளவிற்கு புகழ்பாட அழகு பெற்றார்; புகழ்பெருக அழகும் கூடிற்று' என்றார்.

ஆம்பல் என்ற பேரெண்ணையும் பொருத்தி இனிய தமிழ்ப்பாடல் பாடியுள்ளார். திவிட்டன் கோடிக் குன்றத்தினை எடுத்து மீண்டும் அது முன்னிருந்த இடத்திலேயே வைத்துவிட்டு, யானையின் மேல் ஏறி நகருக்குள் செல்கிறான்.

""ஆம்பல் நாணும் செந்துவர் வாயார் அமிழ்தூறு

ஆம்பல் நாணும் தேமொழி நல்லார் அலர்தூவி

ஆம்பல் நாணும் விட்டனர் ஆர்வக் களிகூர

ஆம்பல் நாணும் பல்புக ழான்அந் நகர்புக்கான்'' (சூளா : 1525)

ஆம்பல் (அல்லி) மலரும் நாணத்தக்க சிவந்த வாயினை உடைய மகளிர் புகழ்ந்து பாட, ஆம்பல் சூழலில் தோன்றிய ஆம்பல் பண்ணும் நாணமுறும் தேமொழி நல்லார் அலர் தூவ, இருபாலார்க்கும் உரிய பொது நாணம், தமக்கே உரிய சிறப்பு நாணம் ஆகிய இரு நாணங்களைவிட்டு மகளிர் மகிழ்ந்து கூடிக் காண, ஆம்பல் என்னும் பேரெண்ணும் நாணமடையக் கூடிய அளவிற்கு எண்ணிலாப் புகழ் பெற்றவனாகிய திவிட்டன் நகருக்குள் சென்றான் என்று திவிட்டன் புகழை ""ஆம்பல் நாணும் பல்புகழ்'' என்று பாடியுள்ளார்.

"வெள்ளம்' என்ற பேரெண்ணைக் குறிக்கும் சொல்லைக் கம்பர் தம் காப்பியத்தில் பல இடங்களில் எடுத்தாண்டுள்ளார். இலக்குவன், அதிகாயனைக் கொன்றான் என்ற சொல்லைக் கேட்ட இந்திரசித்து "என் தம்பி உயிரைப் பறித்த அந்த இலக்குவனை எமனுக்கு விருந்தாக்குவேன், அப்படிச் செய்யாவிட்டால் நான் இராவணன் மகன் அல்லேன்' எனச் சூளுரைத்துப் புறப்படுகிறான். அப்போது அவனுடைய சேனையின் எண்ணிக்கையைத் தம்மால் அளந்துகூற முடியாது என்பதைக் கூறுமிடத்து,

""அன்னானொடு போயினதானை அளந்து கூற

என்னால் அரிதேனும் இயம்பு வான்மீகன் என்னும்

நல்நான் மறையான் அது நாற்பது வெள்ளம் என்னச்

சொன்னான் பிறர்யார் அஃது உணர்ந்து தொகுக்க வல்லார்''

என்பார் கம்பர். யுத்தகாண்டம் கடல்காண் படலத்தில் இராமனுடன் வந்த குரங்குச் சேனை "எழுபது வெள்ளம்' என்ற குறிப்பு வந்துள்ளது. உரையாசிரியர் வை.மு.கோ.வின் "வெள்ளம்' பற்றிய விளக்கம் பின்வருமாறு:

"ஒரு தேர், ஒரு யானை, மூன்று குதிரை, ஐந்து காலாட்படை வீரர்கள் கொண்டது ஒருபத்தி. மூன்று பத்திகள் ஒரு சேனாமுகம். மூன்று சேனாமுகம் ஒரு குல்மம். மூன்று குல்மம் ஒரு கணம். மூன்று கணம் ஒரு வாகினி. மூன்று வாகினி ஒரு ப்ருதனை. மூன்று ப்ருதனை ஒரு சமூ. மூன்று சமூ ஒரு அநீகினி. பத்து அநீகினி ஒரு அக்ரோணி. இக்கணக்குப்படி ஒரு அக்ரோணி சேனையில் 21870 தேர்கள், 21870 யானைகள், 65610 குதிரைகள், 109350 வீரர்கள் இருக்க வேண்டும். எட்டு அக்ரோணி - ஒரு ஏகம்; எட்டு ஏகம் - ஒரு கோடி; எட்டு கோடி - ஒரு சங்கம்; எட்டு சங்கம் - ஒரு விந்தம்; எட்டு விந்தம் - ஒரு குமுதம் (ஆம்பல்); எட்டு குமுதம் ஒரு பதுமம்(தாமரை), எட்டு பதுமம் - ஒரு நாடு; எட்டு நாடு - ஒரு சமுத்திரம்; எட்டு சமுத்திரம் - ஒரு வெள்ளம் ஆகும்.

கால வெள்ளத்தில் ஆம்பல், தாமரை, வெள்ளம் என்னும் தமிழ்ப் பேரெண்கள் மூழ்கி மறைந்துவிட்டன. இன்றைய உலகில் கோடி, பில்லியன் (100 கோடி), டிரில்லியன் (ஒரு லட்டம் கோடி) போன்ற பேரெண்கள் வழக்கில் வந்துவிட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com