மறவாதியர் யார்? மலட்டுஆ எது?

கம்பர், இராமகாதை தவிர சரசுவதியந்தாதி, சடகோபரந்தாதி, ஏரெழுபது, சிலையெழுபது, திருக்கைவழக்கம் ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார்.

கம்பர், இராமகாதை தவிர சரசுவதியந்தாதி, சடகோபரந்தாதி, ஏரெழுபது, சிலையெழுபது, திருக்கைவழக்கம் ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார். இவற்றை எழுதியவர் வேறொருவர் என்னும் கருத்தும் உண்டு. இவற்றுள் சடகோபரந்தாதி நம்மாழ்வாரைப் போற்றிப் பாடிய நூறு கட்டளைக்கலித்துறைப் பாக்களால் ஆகியது. அதில் உள்ள பாடல்களுள் ஒன்று:

துறவாதவர்க் கும்துறந்தவர்க் கும்சொல்ல வேசுரக்கும்

அறஆ அவைஇங் கொராயிரம் நிற்கஅந் தோசிலர்போய்

மறவாதியர் சொன்ன வாசகமாம் மலட்டாவைப் பற்றி

கறவாக் கிடப்பர்அங் கென்பெற வோதங்கள் கைவலிப்பே.

என்பது. இதன் பொருள், "இல்லறத்தார்க்கும் துறவறத்தார்க்கும் சொன்ன அளவிலேயே பால்சுரக்கும் திருவாய்மொழிப் பாசுரங்கள் என்னும் அறவடிவான ஆயிரம் பசுக்கள் நிற்கின்றன. ஐயோ... இவற்றைக் கவனிக்காமல் பாலுக்காகச் சிலர் சென்று மறவுரை பகர்வோர் சொன்ன வாசகமாகிய மலட்டுப் பசுவினிடம் கைவலிக்கக் கறக்கிறார்களே! அவர்களுக்கு என்ன கிடைக்கும்? வீண்முயற்சி, கைவலிதான் விஞ்சும்' என்பதாகும்.

இப்பாட்டில் உள்ள "மறவாதியர் சொன்ன வாசகம்' என்பது எதனைக் குறிக்கிறது என்னும் ஐயம் சிலருக்கு எழலாம். காரணம், இப்பகுதிக்குத் திரிசிரபுரம் மகாவித்துவான் கோவிந்தபிள்ளையவர்கள் செய்த உரையாகும். அவர் கருத்துப்படி, "மறவாதியர்' என்பது மாணிக்கவாசகரையும், "மலட்டுப்பசு' என்பது திருவாசகத்தையும் குறிப்பனவாகும்.

""திருவாய்மொழியை விடுத்து வேறொன்றைப் பற்றுவது பேதைமை என்றும் (திரு)வாசகமாகிய பசு, சிஷ்யனாகிய கன்றைப் பெறாமையால், மலட்டுப்பசு எனப்பட்டது என்றும், மாணிக்கவாசகர் சொற்படி அம்பலவாணன் கையெழுத்து என்கிற பிரசித்தம் உண்டே என்றால், அந்த அம்பலவாணன் நாதமுனிகளைப் போலப் பிறருக்கு உபதேசிக்கவில்லை என்பது கருத்து'' என்றும் குறித்துள்ளார். இத்துடன் நிறுத்தாமல், ""நம்மாழ்வார் குறித்து மதுரகவிகள் சொன்ன கண்ணிநுண் சிறுத்தாம்பு போல ஒருவரும் ஆசாரிய நிஷ்டைகூடித் திருவாசகம் குறித்து ஒன்றுஞ் சொல்லாமையாலும், மலட்டுப்பசு என்னக் குறையில்லை'' என்கிறார். இதனை வை.மு.கோ. தம்நூலில் அவர் சொற்களிலேயே தம் விளக்கப்பகுதியில் குறித்துள்ளார்.

நம்மாழ்வாருக்குச் சீடர் அமைந்ததுபோல் மாணிக்கவாசகருக்குச் சீடரின்மையால் திருவாசகத்தை மலட்டுப் பசு என்றால், நம்மாழ்வாரைப் போலச் சீடரைப் பெறாத ஏனைய ஆழ்வார்களின் நிலை என்ன? அவர்களையும் மலட்டுப்பசுக்கள் என்று சொல்லும் குற்றம் உண்டாகுமே? எதிரியை வீழ்த்தப்போய்த் தன் படைத்தளபதிகளைத் தானே வீழ்த்திய இழிநிலையல்லவா உருவாகும்? அடுத்து, யாரும் மாணிக்கவாசகரை ஆசானாகக்கொண்டு ஒன்றும் சொல்லவில்லை என்னும் கூற்று, துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகளின் நால்வர் நான்மணிமாலை, வள்ளற்பெருமானின் ஆளுடைஅடிகள் அருண்மாலை ஆகியவற்றின்முன் பகலவனைக் கண்ட இருளாய் ஓடி ஒளிகிறது.

நூலுக்கு உரைகாண்பவர் நூலாசிரியரின் உள்ளப் போக்கினை அறிந்து எழுதும்போதே உரை சிறக்கும். கம்பர் திருமாலைத் துதித்தவர்; சிவனை மதித்தவர். அவர்தம் காப்பியத்தில் சிவபெருமானை உயர்த்திப் பேசும் இடங்கள் பலப்பல. இத்தகையவர் திருவாசகத்தை இகழ்ந்து பாடியுள்ளார் என்பது பொருந்தாது.

கம்பரால், நம்மாழ்வார் உலகைப் பொய் என்று கூறும் புத்த சமயவாதிகளுக்கு வாயடைக்கும் பூட்டாகவும், சமண சமயத்தவரின் மாறுபாட்டைக் களையும் கூரிய

வாட்சிப்படையாகவும் அமைந்தார் (72) என்றும், அறுவகைப்பட்ட சமய நூல்கள் விரித்துச்சொன்ன பொருள்களை ஒருசேரப் போக்கினார் (76) என்றும், இப்படிப் பொதுவாகப் பிற சமயங்களின் கருத்துகளை மறுத்து வைணவக் கோட்பாடுகளை நிலைநாட்டியவர் என்றே போற்றப்படுகிறார். பரவாதச் செருக்கு ஒடுக்கும் (3), சமயத் திருக்கைச் சேதிக்கும் (18) என்னும் தொடர்களால் திருவாய்மொழி பிற மதத்தவரின் வாதப்போர்களை அடங்கச் செய்வது என்று கொண்டாடப்படுகிறது. நூலில் எங்கும் குறிப்பட்ட தனி மனிதரையோ, தனி நூலையோ சுட்டிக் கண்டிக்கும் போக்கு காணப்படவில்லை. இந்நிலையில், மாணிக்கவாசகரின் திருவாசகத்தை மட்டும் பெயர்சுட்டிக் கண்டிக்கிறார் என்பது மிகைக்கூற்றாகவே அமைகிறது.

திருவாசகத்தைத் தாழ்த்தும் வேகத்தில் பாட்டில் பயிலும் சொற்றொடர்களைக் கூர்ந்து நோக்கத் தவறியுள்ளார் கோவிந்தபிள்ளை. "தம்பி' என்பது ஒருமை; "தம்பியர்' என்பது பன்மை. அதுபோல "மறவாதி' என்பது ஒருமை; "மறவாதியர்' என்பது பன்மை. "மறவாதியர்' என்பதற்கு, "அறத்திற்கு மாறானவற்றை வற்புறுத்துவர்' என்பது பொருள். கம்பரின் நோக்கம் மாணிக்கவாசகரைத் தாழ்த்துவதாக இருக்குமானால், "அர்' விகுதி இட்டு மரியாதையாகக் குறிப்பாரோ? இன்னொரு பாட்டிலும் மதவாதியர் என்னும் சொல் இடம்பெற்றிருக்கிறது. "நம்மாழ்வார் பிறந்தது யாருக்காக? அந்தணர்க்கோ? தவஞ்செய்பவர்களுக்கோ? யோகிகளுக்கோ? மறவாதியர்க்கோ? சுந்தரத்தோளுடைய பெருமானுக்கோ? அவன் அடியார்களுக்கோ?(34)' என்று வினவுகிறார். இங்கும் அச்சொல் பலரைக் குறிக்கும் வகையிலேயே வருகிறது. தம் மதம்பிடித்த நிலையில், உரையாசிரியருக்கு ஒருமை - பன்மை புரியாத மயக்கம் ஏற்பட்டுள்ளது.

திருவாசகம் ஒருவர் படைப்பு. மறவாதியர் சொன்ன வாசகம் என்பதில் வரும் "வாசகம்' பலருடைய படைப்பு; கோட்பாடு. ஆதலின் அது திருவாசகத்தைச் சுட்டுகிறது என்பதும் சரியன்று.

"மறவாதியர் சொன்ன வாசகமாம் மலட்டுஆ' என்பதற்கு, "பிறமதவாதிகள் சொன்ன கோட்பாடாகிய மலட்டுப் பசு' என்பதே நேரிய பொருள். இதனை விடுத்து, மலட்டா என்பது மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தைக் குறிக்கும் என்று காட்டி, அப்பசுவைப் பற்றிக் கறக்க முற்படுவது கைவலியைத்தான் தரும் என்று விளக்க முற்படுவது, காளையைப் பற்றிப் பாலுக்காகக் கறக்க முற்பட்ட பேதையின் செயல்போல் நகைப்புக்கு இடமளிப்பதாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com