சொல் புதிது - 43

மாதம் ஐம்பதாயிரம், ஒரு இலட்சம் என்று ஊதியம் வாங்கிக்கொண்டு வேலை பார்த்தவர்களைத் திடீரென்று வீட்டுக்கு அனுப்புகிறார்கள். வேலையில் குறை இல்லை; வேலையும் குறையவில்லை; நிறுவனத்தின் இலாபமும் குறையவில்லை; பணியாளர்கள் தவறும் செய்யவில்லை; ஆனாலும் வேலையில் இருந்தவர்களை வீட்டுக்கு அனுப்புகிறார்கள்.
Updated on
2 min read

மாதம் ஐம்பதாயிரம், ஒரு இலட்சம் என்று ஊதியம் வாங்கிக்கொண்டு வேலை பார்த்தவர்களைத் திடீரென்று வீட்டுக்கு அனுப்புகிறார்கள். வேலையில் குறை இல்லை; வேலையும் குறையவில்லை; நிறுவனத்தின் இலாபமும் குறையவில்லை; பணியாளர்கள் தவறும் செய்யவில்லை; ஆனாலும் வேலையில் இருந்தவர்களை வீட்டுக்கு அனுப்புகிறார்கள்.

படிக்க வாங்கிய கடனை அடைத்து அக்கா, தங்கை திருமணம் முடித்துத் தன் வாழ்க்கையைத் தொடங்கும்போது வேலையைவிட்டு வீட்டுக்கு அனுப்பினால் என்ன செய்வார்கள்?

""மரம்கொல் தச்சன் கைவல் சிறார் எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே'' என்று ஒரு காலம் இருந்தது. வயது கூடவே பணி அனுபவம் அதிகமாகியபோது ஊதியமும் அதிகமான காலம் இருந்தது. இப்போது அனுபவம் அதிகமாகிறபோது பயம் தொற்றிக் கொள்கிறது. எப்போது வேண்டுமானாலும் வீட்டுக்கு அனுப்பப்படலாம்.

நாம் அருந்தும் பாலில் பசுவின் வாழ்நாளும் இருக்கிறது. ஆகவே, கறவை நின்ற பின்பும் பசுவைக் காப்பாற்றவும் கும்பிடவும் சொல்லித் தந்திருக்கிறார்கள். நிறுவனங்களுக்கு அந்தக் கவலையோ பொறுப்போ இல்லை போல. உழைப்பிற்கு ஊதியம் கொடுத்துவிட்டதாக நினைக்கிறார்கள். உழைப்பின்போது உருவானவற்றில் உடன் சேர்ந்திருக்கும் உழைப்பாளியின் ஆயுட்காலத்தைக் கவனிப்பதில்லை. திடீரென்று அவர்களுக்கு வேலையிலிருந்து விடுவிக்கும் ஓலை கொடுக்கிறார்கள்.

வறுமையில் வாழ்ந்தவர்கள் கைநிறைய சம்பளம் கிடைத்ததும் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்கிறார்கள். வேலை போனதும் பழைய வாழ்க்கை முறைக்குப் போக முடியாமலும் புதிய வாழ்க்கை முறையில் வாழ முடியாமலும் அல்லாடுகிறார்கள்.

நாள் கூலி, வாரக் கூலியாக வேலை பார்க்கிறவர்களுக்கு வாழ்க்கையைப் பற்றி இருக்கிற நம்பிக்கை மாதச் சம்பளம் பெறுகிறவர்களிடம் குறைந்து கொண்டிருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் வேலையைவிட்டு அனுப்புவார்கள் என்ற அச்சத்தோடு பணிசெய்வோரை வைத்திருக்கிறது Pink slip.

வாரக் கூலியில் வேலை பார்க்கிறவர்களுக்கு வார இறுதியில் வழங்கும் பணம் அடங்கிய உறையில் "இனி வேலைக்கு வரவேண்டாம்' என்று இளம் சிவப்பு நிறத்தில் ஒரு துண்டுச் சீட்டு வைப்பார்களாம். பின்னர் மாத ஊதியம் பெறுகிறவர்களுக்கும் இதே நடைமுறை பின்பற்றப்பட்டதாம். வேலையிலிருந்து நீக்கப்பட்டதைத் தெரிவிக்கும் ஆணையில் மூன்று படிகள் தட்டச்சு செய்வார்களாம். அதில் பணியாளருக்குக் கொடுக்கப்படும் ஆணையின் தாள் இளம் சிவப்பு நிறத்தில் இருக்குமாம். இதுவே பின்னர் எந்த நிறத்தில் வழங்கப்பட்டாலும் வேலை நீக்கம் என்றால் பிங்க் சிலிப் என்றானதாம். இது அமெரிக்க நடைமுறையாம். 1910-இல் இச்சொல் முதன் முதல் பயன்படுத்தப்பட்டுள்ளது. 1923க்கு முன்பு ஆக்ஸ்ஃபோர்டு அகராதியில் இச்சொல் இல்லை.

தமிழகத்தில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களிலும் பணியாளர்களுக்குப் "பிங்க் சிலிப்' கொடுக்கும் நடைமுறை இருக்கிறதாம். பிங்க் சிலிப் என்பதைத் தமிழில் எப்படிச் சொல்லலாம்? வாசகர்கள் பதில் வருமாறு:

  • நா.முத்தையா - திடீர் வேலைரத்து உத்தரவு/ திடீர் வேலை ரத்துச் சீட்டு
  • பழனி சோ.முத்துமாணிக்கம் - பணிநீக்க எச்சரிக்கை ஓலை / பணிவிடுவிப்போலை
  • இராம.வேதநாயகம் - பணிநீக்க அட்டை/ உடனடி பணிநீக்க அறிவிக்கை
  • என்.ஆர்.ஸத்யமூர்த்தி - பணிநீக்கு அறிவிப்பு ஆணை / பணிப்போக்கு அறிவிப்பு ஆணை/ சிவப்பறிவிப்பு/ ஊர்தி உரிமைச் சான்றிதழ்
  • ஜனநேசன் - பணிவிடுவிப்பு ஆணை
  • வெ.ஆனந்தகிருஷ்ணன் - துண்டுத் தாள் பணிநீக்கம்

கோ.மன்றவாணன் - பணிநீக்கு ஓலை/ பணிமுறிப்போலை/ இளஞ்சிவப்பு ஓலை/ பணிநீக்க அறிக்கை/ பணிவிலக்கு ஓலை/ பணிநீக்குமுறி வெறும் இளம் சிவப்புச் சீட்டையோ, தாளையோ மட்டும் பிங்க் சிலிப் என்பது குறிக்கவில்லை. அதில் ஆணை இருக்கிறது. ஆணையோடு கூடிய ஏட்டை "ஓலை' என்று கூறும் வழக்கம் இருக்கிறது. அரசவையில் அரசனின் ஆணையை எழுதுபவர் "ஓலை நாயகம்' என்று அழைக்கப்பட்டார். தூது செல்பவர்கள் அரசனின் ஆணையை ஓலையில் எடுத்துச் சென்றிருக்கிறார்கள். இப்போதும் அரசு அலுவலகங்களில் நடவடிக்கை எடுக்கும்போது "ஓலை வரும்' என்று எச்சரிக்கை செய்கிறார்கள்.

பிங்க் சிலிப் என்பது ஒருவரை, அவரது விருப்பத்திற்கு மாறாக பணியிலிருந்து விரட்டுவதற்கு வழங்கப்படுகிறது. எனவே, பிங்க் சிலிப் என்பதைப் பணிவிரட்டோலை என்று சொல்லலாம்.

Pink slip - பணிவிரட்டோலை

25-1-2015 க்கான சொல் தேடல் - Access 

1-2-2015 க்கான சொல் தேடல் - Upward mobility.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com