மறவாதியர் யார்?

இந்தியச் சமயங்களின் வரலாற்றில் தமிழகத்தின் பங்களிப்பு மகத்தானது. அதிலும் குறிப்பாகப் பக்தி இயக்க வரலாற்றில் தமிழகம்தான் விதைப் பண்ணையாகவும் நாற்றங்காலாகவும் திகழ்ந்தது.
மறவாதியர் யார்?

இந்தியச் சமயங்களின் வரலாற்றில் தமிழகத்தின் பங்களிப்பு மகத்தானது. அதிலும் குறிப்பாகப் பக்தி இயக்க வரலாற்றில் தமிழகம்தான் விதைப் பண்ணையாகவும் நாற்றங்காலாகவும் திகழ்ந்தது. அதிலும் வைணவத்தில் தமிழகத்தின் கொடை வரலாற்றுச் சிறப்புமிக்கது. பக்தி இயக்கம் கால்கொண்ட தமிழகத்தில் இன்றுவரை அந்த இயக்கம் குறித்த முறையான ஆய்வு இன்னும் தொடங்கப்பெறவே இல்லை என்பதுதான் மிகப்பெரிய அவலம்.

பக்தி இயக்க நாளில் சைவம் - வைணவம் இரண்டிற்கும் பொதுவான எதிரிச் சமயங்களாக இருந்தவை சைனமும் - பெüத்தமும் ஆகும். இவை இரண்டையும் எதிர்ப்பதற்கு அவற்றின் ஊடக மொழிகளாக இருந்தவை பாகதமும் பாலியுமேயாகும். ஆசீவகம் தமிழகத்தில் தோன்றி, தமிழ் மரபுக்குரிய சமயம் ஆயினும் இதனைச் சைவம் கடும் எதிரிச் சமயமாகக் கருதியது. ஆசீவகத்தின் செல்வாக்கால் சைவம் பெரும் பின்னடைவைச் சந்தித்ததே அதற்குக் காரணம். சிவன் யானை உரிபோர்த்தவனாகச் சிந்திரிக்கப்படுவதற்கு ஆசீவக - சைவ மோதலே காரணம். அதே நேரத்தில், ஆசீவகத்திற்கும் வைணவத்திற்கும் ஏற்பட்ட நெருக்கம் வரலாற்றுச் சிறப்புமிக்கது. திருமால் முதலையிடமிருந்து யானையைக் காப்பாற்றி "கஜேந்திர மோட்சம்' அளித்தது அதன் அடையாளம். இந்நிலை பக்தி இயக்கக் காலத்தில் தமிழகத்தின் சமய வரலாற்றில் இஃதோர் குறிப்பிடத்தக்கதாகும்.

சமயங்கள் பரபக்கம் - சுபக்கம் என இரண்டு பிரிவுகளில் அடங்கும். "பரபக்கம்' என்பது, எதிரிச் சமயங்களை அவற்றின் கோட்பாடுகளைக் குறிக்கும் பகுதி. "சுபக்கம்' என்பது, தன்னோடு தொடர்புடைய சமயங்கள், அவற்றின் கோட்பாடுகளை விளக்கும் பகுதி. இவற்றை அகச்சமயம், அகப்புறச் சமயம், புறச்சமயம், புறப்புறச் சமயம் என்றெல்லாம் சமய நூல்கள் குறிக்கின்றன. ஒவ்வொரு சமயமும் தன் எதிரிச் சமயங்களோடு மோதிக்கொண்டிருந்த அதே நேரத்தில், உள்முரண்பாடுகளைக் கொண்ட தன் கிளைச் சமயங்களோடும் மோதிக் கொண்டிருந்தது. இது சைவத்திற்கும் வைணவத்திற்கும் பொதுவாகும். சைவம் கபாலிகம், காளாமுகம், பாசுபதம் முதலான ஆறு பிரிவுகளைக் கொண்டது. ஆயினும் கபாலிகம், காளாமுகம் முதலிய உட்பிரிவுகளுக்கிடையே நடந்த மோதல் ஆகம வழிபாட்டிற்கும் வைதிக வழிபாட்டிற்கும் இடையே நடந்த மோதலாகும். திருநாவுக்கரசர் கபாலிக அடியவர்; திருஞானசம்பந்தரோ காளாமுகர். இரு பிரிவுகளுக்குமான மோதலே திருமறைக்காட்டில் கோயில் கதவு திறக்கவும் அடைக்கவும் பாடிய பதிகங்களாக வெளிப்பட்டன. சைவத்தில் ஆகம வழிபாடு அகற்றப்பட்டு வைதிக வழிபாடு நிலைப்படுத்தப்பட்டது. அதாவது, தமிழ் அகற்றப்பட்டு சம்ஸ்கிருதம் புகுத்தப்பட்டது. இதனைச் செய்தவர் "திராவிட சிசு' என ஆதிசங்கரரால் புகழப்பட்ட தமிழ்ஞான சம்பந்தர். இஃதோர் வரலாற்று முரண்.

சைவத்தில் நடந்த மோதலைவிட வைணவத்தில் நடந்த மோதல் வெளிப்படையானது. இன்றுவரை நீடித்து வருவது. இதனைத் தென்கலை - வடகலை மோதலாக வரலாறு பதிவு செய்துள்ளது. தென்கலை - வடகலை மோதலின் மையப்புள்ளியே நம்மாழ்வார்தான். பன்னிரு ஆழ்வார்களில் நம்மாழ்வாரின் பெருமையும் புகழும் தனித்தன்மை மிக்கனவாகும். பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான மதுரகவியாழ்வார் நம்மாழ்வாரின் வழியாகத் திருமாலை அடைய முயன்றவர். வருண நெறியில் நம்மாழ்வார் நான்காமவர். அதாவது கடைசி வருணத்தவர். மதுரகவியாழ்வார் முதலாம் வருணத்தவர். இதுவே பெரும் பூசலாக வெடித்தது. இந்த நிலையினை,

""நன்மையால் மிக்க நான்மறை யாளர்கள்

புன்மையாகக் கருதுவர்''

என்று மதுரகவியாழ்வாரே வேதனையோடு பாடியுள்ளார். இந்த மோதலின் உச்சகட்டமே வடகலை-தென்கலை மோதலாக வெடித்தது. தென்கலையின் மாபெரும் தலைவராக-மாபெரும் சமூகப் புரட்சியாளராகத் திகழ்ந்த நம்மாழ்வாரை - அவரின் தமிழ் மரபை நிலைநாட்டியவர் இராமானுசராவார். மிகச்சிறந்த மெய்யியலாளராகத் திகழ்ந்த அவர், ஒரு நூலைக்கூட தமிழில் எழுதவில்லை. ஆனால், வைணவக் கோயில்களில் ஆழ்வார் தமிழை நிலைக்கச் செய்தவர் அவரே.

நம்மாழ்வாரை மையமாகக்கொண்ட வைணவ உள்முரண்பாடு, வைணவ மரபிலிருந்து அவரை வெளியேற்றிவிட வேண்டும் என்ற அளவிற்குச் சென்றது. அதற்கு வடகலையார் சொன்ன காரணங்கள் இரண்டு. 1. அவர் நான்காம் வருணத்தவர். அதாவது சூத்திரர். 2. அவர் பாடியது தமிழில் அதாவது, நீசபாஷை. இவ்விரு காரணத்தாலும் அவரைப் புறக்கணிக்க வடகலையார் முயன்றனர். இச்சூழல் வைணவ வரலாற்றில் மாபெரும் திருப்பத்திற்குக் காரணமானது. நம்மாழ்வாரின் பாசுரங்களுக்கு உரைகள் பெருகின. சம்ஸ்கிருதமும் தமிழும் கலந்த மணிப்பிரவாள நடை உருவானது. மொழிக்கலப்பை நீக்கிவிட்டால், ஈடுஉரைகளுக்கு ஈடான உரைநடை இலக்கியம் வேறொன்றிருக்க முடியாது. மணிப்பிரவாள நடையின் நோக்கம், நம்மாழ்வாரை வெறுத்து ஒதுக்க முனைந்தவர்களுக்கு அவர்களின் மொழியிலேயே நம்மாழ்வாரின் பெருமைகளைச் சொல்வதுதான்.

ஈடு உரைகளைப் போலவே நம்மாழ்வாரின் புகழை, பெருமையை, அவரின் ஈடிணையற்ற இலக்கியப் பங்களிப்பை, வைணவத்திற்கு அவர் வழங்கிய கொடையை உணர்த்திய நூல் "ஆசாரிய இருதயம்' எனும் நூலாகும். மணவாள மாமுனிகள் இயற்றிய இந்நூல், நம்மாழ்வாரை சூத்திரர் என்பதற்காகவும், அவர் தமிழில் பாடியதால் அப்பாடல்களை ஒதுக்கக்கூடாது என்பதற்காகவும், அவரை வெறுத்து ஒதுக்கியவர்களைப் பார்த்து, ""பாவிகளே! அவன் வருணத்தையும், அவன் மொழியையும் பார்க்காதீர்கள்; அவன் இதயத்தை - அதில் ஊற்றெடுக்கும் திருமால் பக்தியைப் பாருங்கள்'' எனக் கூறவந்ததே ஆசாரிய இருதயமாகும். இந்நூலில் 75ஆம் பாடற்கான உரையில், ""திருவாய்மொழியை அருளிச்செய்த நம்மாழ்வாரை, நான்காம் வருணத்தில் அவதரித்தவரன்றோ என்ன, திருவாய்மொழியை (பாஷையை) கொண்டும் அர்ச்சாவதாரத்தை (திருஉருவங்களை) அது செய்யப்பட்ட பொருள்களைக் கொண்டும் இகழ்ந்தால் பாவம் உளதாம் என்று மேலே கூறவில்லையேயாகினும் அவை உளவாகத் திருவுள்ளம் பற்றி அவற்றை உடைமையாக்கிக் கொண்டு பாகவதோத்திரமான இப்பெரியாருடைய பிறவியை ஆராய்தல் பெருங்குற்றமாம்'' எனக் கூறும் உரையாசிரியர், ""அது எத்தகைய பாவம் என்பதை ஞானிகள் அர்ச்சாவதாரத்தில் முதற்காரணத்தை நினைப்பதும், ஸ்ரீவைணவனுடைய பிறப்பினை நினைப்பதும் தாயின் யோநி பரிட்சைக்கு ஒப்பாம்'' எனச் சினத்தோடு கூறுவதும் எண்ணத்தகும்.

மணவாள மாமுனிகள் ஆசாரிய இருதயம் எழுதுவதற்கு என்ன தேவை நிலவியதோ, அதைவிடக் கூடுதல் தேவை கம்பருக்கு இருந்தது. நமக்குக் கிடைக்கும் செவிவழித் தரவுகள் அதனை உறுதி செய்கின்றன. கம்பர் தம் காப்பியத்தை முதலில் அரங்கேற்றச் சென்ற இடம் சிதம்பரம். அரங்கேற்றம் தொடங்கும் போது கடவுள் வாழ்த்தான "உலகம் யாவையும்' எனத் தொடங்கும் பாடலில், "அலகிலா விளையாட்டுடையார்' என வரும் அடியில், "அவர் யார்?' என்பதை வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் எனச் சைவர் வற்புறுத்த, அதற்குக் கம்பர் இசையவில்லையாம். அதன் பொருட்டே திருவரங்கத்தில் இராமாயணம் அரங்கேறியுள்ளது. அப்படி அரங்கேறும் நிலையில், இரணியன் வதைப்படலம் வந்தபோது "மூல நூலில் இல்லாத இந்தச் செய்தியை எப்படி இராமாயணத்தில் சேர்க்கலாம்?' என்று வைணவர்கள் கடுமையாக எதிர்த்தனராம். இறுதியில் "நீங்கள் ஏதேனும் சித்துக்களைச் செய்தால் ஏற்போம்' என்றனராம். அதன்படி, "பிளந்தது தூபம் ஆங்கே' என்ற பாடலைக் கம்பர் பாடியபோது, தூணில் இருந்து சிங்கம் பிளிறியதாகவும், அதன் பிறகே அரங்கேற்றம் நிறைவடைந்ததாகவும் ஒரு செய்தி. இந்தச் செய்தியின் பின்னே ஓர் உண்மையும் உண்டு.

இரணியன் வதைப்படலம், மீமாம்சகர்களை எதிர்த்த எதிர்ப்பின் குறியீடு என்பார் "கம்பனின் கவிதைக் கலை' எனும் நூலை எழுதிய பேராசிரியர் சு.க.வீரய்யன்.

மீமாம்சகர்கள் வேதத்தின் கரும காண்டத்தை முதன்மைப் படுத்தியவர்கள். கடவுளைவிட வேதம் உயர்வானது என்று கூறியவர்கள். அதனால் வேதங்கள் யாராலும் இயற்றப்பட்டவை அல்ல என்றும் கூறியவர்கள். இம்மீமாம்சகத்தின் தொடர்ச்சிதான் அத்துவிதக் கோட்பாடாகும். இந்த அத்துவித மரபில் வந்த யாதவப் பிரகாசர் இராமானுசரின் ஆசிரியர். அவ்விருவருக்கும் இடையே நடந்த முரண்பாடு உலகம் அறிந்த ஒன்று. இந்த வரலாற்றுப் பின்புலத்தில்தான் கம்பரின் உருவகமான "மலட்டுப் பசு' மீமாம்சகர்கள் உள்ளிட்ட வைதிகக் கோட்பாட்டினரை - வைணவத்தின் உட்பிரிவினராகிய நம்மாழ்வாரை இழிவு செய்தவர்களையே குறிக்கும். இதில் ஐயம் சிறிதும் இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com