கடலும் மலையும் காடும் வயலும் பாலையும்கூட இயற்கையின் விளையாட்டாக இருக்கலாம். வாழும் இடமாகவும் வாழ்வின் ஆதாரமாகவும் அவற்றை மாற்றும் ஆற்றல் மனிதர்களுக்கு இருக்கிறது. மாற்றம் மக்களின் வாழ்க்கையை மாற்றுகிறது. மாறும் வாழ்க்கை உயர்வையும் தாழ்வையும் தருகிறது. அதற்கேற்ப மனமாற்றமும் நடக்கிறது. காலம்தோறும் கலை, இலக்கியம், அரசியல் ஆன்மிகம் ஆகியவை மனமாற்றத்தை வடிவமைக்கின்றன.
சமுதாயம், அளவிலும் தரத்திலும் சமநிலையில் இல்லை; "பிறப்பு ஒக்கும்' என்பதனால் சிறப்பில் உயர்வும் தாழ்வும் இருக்கின்றன என்பதை வள்ளுவரும் வலியுறுத்துகிறார். தொழில் வேறுபாடு, சிறப்பில் உயர்வையும் தாழ்வையும் உருவாக்குகிறது. பிறப்புக்கும் தொழிலுக்குமான பிணைப்பு அறுபட்டு, சமுதாய வளர்ச்சிக்கும் மாற்றத்திற்குமான அடிப்படைத் தேவைகளுக்குரிய தொழில்களே சிறப்பிடம் பெறத் தொடங்குகின்றன. இதனால், சமுதாயப் படிநிலைகளில் மாற்றமும் புது ஒழுங்கும் ஏற்படுகின்றன.
இப்படி, ஒருவரோ, குடும்பமோ, குழுவோ சமுதாயப் படிநிலைகளில் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மாறும் வாய்ப்பு நிகழ்கிறது. பொருளாதாரத் தேவைக்காகப் புலம் பெயர்கிறவர்களுக்குச் சொந்த ஊரில் நிலவும் சமுதாயப் படிநிலைகளில் கிடைநிலை மாற்றம் ஏற்படுகிறதே தவிர, செங்குத்தான முறையில் மாற்றம் நிகழ்வதில்லை. உதாரணமாக, ஒரு நிறுவனத்தில் மேலாளராக இருப்பவர் இன்னொரு நிறுவனத்திற்கு மேலாளராக மாறுவதைப் போன்றது. பொருளாதார நிலையில் மாற்றம் ஏற்பட்டாலும் பதவி நிலையில் மாற்றம் இல்லை. அதைப் போன்றே புலம் பெயர்ந்தவர்கள் பொருளாதார நிலையில் உயர்ந்தாலும் சொந்த ஊரில் அவர்களின் சமுதாயப் படிநிலைகளில் மாற்றம் உடனடியாக ஏற்படுவதில்லை.
சமுதாயப் படிநிலைகளைச் ஜாதி, பொருளாதாரம், சமுதாயம் பண்பாடு ஆகியவையே கட்டியமைத்திருக்கின்றன.
பிறந்த ஜாதியிலிருந்து வேறொரு ஜாதிக்கு யாரும் மாற முடியாது. எனவே, பிறப்பால் அமையும் படிநிலையாக்கத்தை மறுப்பதன் வழியும் வலியுறுத்துவதன் வழியும் மக்கள் மேல்நிலையாக்கம் பெறுகிறார்கள். அசையும் - அசையா சொத்துகள், வருமானம் போன்றவையும் சமுதாயப் படிநிலைகளில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன.
உறவுமுறை, சமுதாயத் தொடர்பு, அதிகார அமைப்பில் உள்ள இடம் போன்றவையும் சமுதாயப் படிநிலைகளைத் தீர்மானிக்கின்றன. கல்வி, திறமை, அறிவு, ஆற்றல், படைப்பு ஆகிய பண்பாட்டு ஆளுமைகளும் சமுதாயப் படிநிலை மேல்நிலையாக்கத்தை உறுதிப்படுத்துகின்றன.
தொழிலாளி, தொழிலதிபர் ஆகிறார். வேலைவாய்ப்பால் ஊதியம், வருமானம் ஆகியவற்றில் ஐம்பது வயது பெற்றோரைவிடவும் அவர்களின் மகனோ மகளோ அதிகம் பணம் ஈட்டுகிறார்கள். ஒரே வீட்டிற்குள்ளும் படிநிலை அடுக்குகளில் மாற்றம் வரத்தொடங்கியுள்ளது.
எனவே, சமுதாயப் படிநிலைகளில் ஒன்றில் இருந்து மற்றொன்றுக்கு நகரும் நிலை உலகம் முழுதும் நடைபெற்று வருகிறது. இருக்கும் படிநிலையில் இருந்து அதற்கும் மேலான படிநிலைக்கு மாறுவதை மல்ஜ்ஹழ்க் ஙர்க்ஷண்ப்ண்ற்ஹ் என்று சொல்கிறார்கள். இதற்குரிய தமிழாக்கமாக, வாசகர்கள் அளித்துள்ளவை வருமாறு:
டி.வி. கிருஷ்ணசாமி - மேல்புற நகருதல்
மீனா.கண்ணன் - உச்சம் நோக்கி/ உச்சம் நோக்கி நகராற்றல்/ மேல்நோக்கு இடம்பெயர்தல்
நா.கிருஷ்ணவேலு- மேல்நோக்கி இயங்குநர் அடையும் தன்மை
நா.முத்தையா - மேம்பாடு நோக்கிய நகர்வு/இடம்பெயர்வாற்றல்
இராம. வேதநாயகம் - சமூகநிலை உயர்வு
சோ.முத்துமாணிக்கம் - மேல்நோக்கிய நகர்வு / ஏறுமுக அசைவு
ப.இரா.இராச அம்சன் - மேல்நோக்கி இடப்பெயர்வு/ ஏறுமுக நகர்வியக்கம் / சமூகப் புலப்பெயர்வு
வெ.ஆனந்தகிருஷ்ணன் - மேல்நோக்கி இயங்குதல்/ விண்ணோக்கி ஏவுதல்
ஜனநேசன் - மேற்செல்லுதல்/ மேல்நிலை நோக்கிய நகர்வு
என்.ஆர்.ஸத்யமூர்த்தி - தகுதிமேற்செல்லல்/ தகுதி முன்னேற்றம்
உபேந்திரன் - மேல்நோக்கு நகர்வு
Upward Mobility என்பது சமுதாயப் படிநிலைகளில் மேல்நிலை நோக்கிய நகர்வாக இருக்கிறது. இது சமூகநிலையிலும் பொருளாதார நிலையிலும் சிறப்பான இடம் நோக்கிய நகர்வாக இருக்கிறது. எனவே, இதனை மேல்நிலைப் பெயர்ச்சி என்று தமிழில் சொல்லலாம்.
மேல்நிலைப் பள்ளி, மேல்நிலைத் தொட்டி போல வழங்குவதற்கும் இயல்பாக இருக்கும்.
Upward Mobility - மேல்நிலைப் பெயர்ச்சி
8-2-2015 தேடலுக்கான சொல் - Wi-Fi
15-2-2015 தேடலுக்கான சொல் - Vertical
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.