சங்ககாலச் சேர மன்னர்களுள் ஒருவன் பெயர் சேஎய். அரசனாயிற்றே? பெயரை வறிதே கூறலாமா? புலவர்களும் பிறரும் சிறப்புகளை அடுக்கிக் கூறினால்தான் தங்களுக்கும் அவனுக்கும் பெருமை என்று கருதிவிட்டார்கள். இச்சிறிய பெயரோடு அடைமொழிகள் சேர்த்து முழநீளத்திற்கு நீட்டிவிட்டார்கள். இந்த மெய்ம்மையைத் துருவித் துருவி ஆராய்ந்து கண்டுபிடித்துவிட்டார் திருக்குறள் உரையாசிரியர் பரிமேலழகர்.
""கோச்சேரமான் யானைகட்சேஎய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்றவழி அரசன் என்பதோர் சாதியும் சேரமான் என்பதொரு குடியும் வேழநோக்கினை உடையான் என்பதோர் வடிவும் சேய் என்பதோர் இயற்பெயரும் மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்பதோர் சிறப்புப் பெயரும் ஒரு பொருளின்கண் கற்பனையாக'' (குறள் 355) அமைந்துள்ளன என்பதே அவரது விளக்கம்.
அரசர்களை மட்டுமன்றிச் சிறப்புக்குரியர்களையும் அடைமொழி சேர்த்துக் குறித்துள்ளனர். மக்களில் சிலருக்கு மன்னர் முதலியோர் செய்யும் வரிசையாலும், தவம், கல்வி, குடி, உறுப்பு முதலியவற்றாலும் பெயர்கள் வந்துள்ளன. திருவள்ளுவருக்கு அமைந்த
தெய்வப்புலவர் என்பது கல்வி பற்றி அவருக்கு வந்த சிறப்புப்பெயர் என்கிறார் சேனாவரையர். அவர் குறிக்கும் பெருமைக்குரிய ஆசிரியர் ஒருவரின் பெயர் "ஆசிரியன் பேரூர்கிழான் செயிற்றியன் இளங்கண்ணன் சாத்தன்' என்பதாகும். இதில் "ஆசிரியன்' என்பது செய்யும் தொழிலாலும் "பேரூர்கிழான்' என்பது வாழும் இடத்தாலும் "செயிற்றியன்' என்பது புலமை பெற்றிருந்த நூலாலும் "இளங்கண்ணன்' என்பது கண்ணனுக்குத் தம்பி என்பதாலும் வந்த சிறப்புப் பெயர்களாகும்.
இன்றும் இம்மரபு தொடர்கிறது. "தேசிய கவி' பாரதியார், "புரட்சிக் கவிஞர்' பாரதிதாசன், "தனித்தமிழ்த் தந்தை' மறைமலையடிகள், "தமிழ்த் தென்றல்' திரு.வி.க., "சொல்லின் செல்வர்' ரா.பி.சேதுப்பிள்ளை, "பல்கலைச் செல்வர்' தெ.பொ.மீ. என்று அடைமொழிகளோடு குறிக்கப்படுவது காணலாம். காந்தியடிகளுக்கு "மகாத்மா' என்பது தாகூராலும், "தேசத் தந்தை' என்பது சுபாஸ் சந்திரபோஸாலும் தரப்பட்ட பட்டங்கள். இவை பட்டப்பெயர்கள்.
கிரிக்கெட் ஆட்டக்காரர் சுனில் கவாஸ்கரைச் "சன்னி' என்றும், ராகுல் திராவிடை "ஜம்மி' என்றும் அழைத்தனர். இவை செல்லப்பெயர்கள்.
ஆதித்யனை "ஆதி' என்றும், கலைவாணியை "வாணி' என்றும் குறிக்கிறோம். இவை குறுக்கப்பெயர்கள். (கோ. மன்றவாணன் தெரிவித்துள்ள குறும்பெயர் என்னும் சொல்லாலும் குறிக்கலாம்.)
"சாந்தி என்னும் தையல்நாயகி' என்றும், "சதீஷ் என்னும் சாமிநாதன்' என்றும் திருமண அழைப்பிதழ்களில் காண்கிறோம். இவை மாற்றுப்பெயர்கள்.
இதழ்களில் கலாரசிகன், சாருகேசி என்னும் பெயர்களைப் பார்க்கிறோம். இவை புனைபெயர்கள்.
Moniker என்பது இவற்றுள் எதனைக் குறிப்பது? நண்பர்கள் போட்டி போட்டுக்கொண்டு பல சொற்களைத் தெரிவித்துள்ளார்கள். க. அன்பழகன் விளையாட்டுப்பெயர், ஆசைப்பெயர், இணைப்பெயர், அங்கதப்பெயர் உள்ளிட்ட பதினான்கு சொற்களையும், ப. இரா.இராச அம்சன் மாறுபெயர், தனிப்பெயர் போன்ற எட்டுச் சொற்களையும், கோ. மன்றவாணன் குறிபெயர், குறும்பெயர் போன்ற ஏழு சொற்களையும் தந்துள்ளனர்.
சிலர் ஆகுபெயர், சுட்டுபெயர் ஆகிய சொற்களைக்கூடக் குறித்துள்ளனர். ஒன்றன் பெயர் பிறிதொன்றற்கு ஆகிவருவது ஆகுபெயர். "கட்டில் கத்துகிறது' என்றால் கட்டிலில் கிடக்கும் குழந்தை கத்துகிறது என்பது பொருள்; அவன், இவள், உப்பக்கம் என்பவை சுட்டுப்பெயர்கள். அவற்றை Moniker என்னும் சொல் குறிக்காது.
எம்.எஸ். இரணியநாதன், சாய்கிரிதர், உ.தேவதாசு, அ.கருப்பையா, சந்திரா மனோகரன் ஆகியோர் புனைபெயர் என்றும், கா.மு. சிதம்பரம், மன்றவாணன் ஆகியோர் பட்டப்பெயர் என்றும், ப. இரா. இராசஅம்சன், க. அன்பழகன் ஆகியோர் செல்லப்பெயர் என்றும் குறித்துள்ளனர்.
இந்தியில் துணைப்பெயர் (உபநாமம்) என்றும், மலையாளத்தில் இரட்டைப்பேர், பட்டப் பேர், பிறிதொரு பேர் என்றும் பொருள்கள் தரப்பட்டுள்ளன. இவ் ஆங்கிலச்சொல் சிறப்பால் வரும் எல்லாப் பெயரையும் குறிப்பதால் சிறப்புப்பெயர் என்பது தக்கதாக அமையும். அதனுள் பட்டப்பெயர், புனைபெயர், செல்லப்பெயர் அனைத்தும் அடங்கிவிடுமல்லவா?
அடுத்த வாரத்திற்குரிய சொல்
Trail blazer ( டிரெயல் பிளேஸர் )
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.