ஆன்மிகம் வேறு; ஆன்மீகம் வேறு!

சொல் அறிவோம் பகுதியில் 'ஆன்மீகம் அல்ல, ஆன்மிகமே! ஆன்மீகம் என்று எழுதுவது தவறு' என்று கட்டுரையாளர் குறிப்பிட்டிருந்தது சரியல்ல. ஏனெனில், ஆன்மிகம் வேறு;
ஆன்மிகம் வேறு;  ஆன்மீகம் வேறு!
Updated on
1 min read

சென்றவாரம், "சொல் அறிவோம்' பகுதியில் "ஆன்மீகம் அல்ல, ஆன்மிகமே! ஆன்மீகம் என்று எழுதுவது தவறு' என்று கட்டுரையாளர் குறிப்பிட்டிருந்தது சரியல்ல. ஏனெனில், ஆன்மிகம் வேறு; ஆன்மீகம் வேறு. ஆன்மிகம் என்ற சொல், ஆன்ம + இகம் என்றும், ஆன்ம + இயம் என்று பிரிக்கப்பட்டு ஆன்மக் கொள்கைகளின் பிழிவுச்சாரம் எனப் பொருள் கோடல் சரியே! ஆனால், இவை இரண்டும் வேறு என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஆன்மீகம் என்ற சொல்லானது, ஆன்மாவின் மீட்சி; ஆன்மா மீண்டெழும் நிலை; ஆன்மாவின் மீட்டெடுப்பு; ஆன்மா மீக்குயர்தல் (மிக்கூர்தல்-அதிகமாகுதல், மேம்படல்); ஆன்மா மேலெழுதல் என்றவாறு பொருள் தரும். எவ்வாறெனில், உலகில் ஒவ்வொரு ஆன்மாவும், தாம் செய்த வினைகளுக்கு ஏற்ப, பல்வேறு பிறவிகளாக இறைவனால் மண்ணில் தோற்றுவிக்கப் பெறுகின்றன. இதில் ஓரறிவு முதல் ஆறறிவு வரை அடங்கும். இதன் நோக்கம் இந்த ஆன்மாக்கள், பிறவி எடுத்தலில் இருந்து மீண்டு, மீண்டும் பிறவாத நிலை பெறுவதற்கே ஆகும்.

இவ்வாறு ஆன்மாக்கள் பிறவாத நிலைமையைப் பெறவேண்டுமானால், அவ்வான்மாக்கள் இவ்வுலக வாழ்வில் பொய்மையையும் நிலையாமையையும் அறிந்து உணர வேண்டும். ஆன்மாக்களுக்குக் கிடைத்துள்ள இவ்வுலக வாழ்வு நிலையற்றது. அது இந்த நிமிடமே அழிவதும், நாளை நின்று வாழ்வதும் இறைவன் கையிலேயே இருக்கிறது. இவை அனைத்தும் தெரிந்திருந்தும், தெரியாத நிலையிலேயே ஆன்மாக்கள் இவ்வுலக வாழ்வில் பலவிதமான இச்சையுற்று ஆசைக்கடலில் சிக்கித் தவிக்கின்றன.

""ஆசைக்கடலில் அகப்பட்டு அருளற்ற அந்தகன் கைப்

பாசத்தினால் அல்லல் பட இருந்தேனை''

என்பது அபிராமிபட்டரின் அருட்புலம்பல். இவ்வாறு ஆன்மாக்கள் அறியாமையில் அழுந்தி மறைப்புண்டு இருப்பதையே உலக மாயை என்றும், மாயையில் சிக்கி ஆன்மாக்கள் அல்லல் உறுகின்றன என்றும் ஞானிகள் சொல்லிச் சென்றுள்ளனர்.

இவ்வாறு உலக மாயையால் மறைக்கப்பட்டிருக்கும் ஆன்மாவானது இறைவனால் அவற்றிற்குத் தரப்பட்ட பகுத்தறிவைக்கொண்டு சிந்தித்து, உண்மை உணர்ந்து, பேரறிவாகிய - பேரறிவாளனாகிய இறைவனையும் அவன் செயலையும் உணர்ந்து, தன்முனைப்பற்று, இவ்வண்டம் முழுவதையும் இயக்குவது இறைவன் திருவருளே என்பதை முற்றிலும் உணர்ந்து நன்மை-தீமையை சமமாகப் பாவித்து, இன்ப-துன்பமற்று இருக்கும் நிலையை ஆன்மா பெறவேண்டும். அதற்காகவே ஆன்மாக்கள் மீண்டும் மீண்டும் பிறவிகளைப் பெறுகின்றன. இதுவே சைவ சித்தாந்தம் கூறும் உண்மையுமாகும்.

எனவே, உலக மாயையில் இருந்து விடுபட்டு, மெய்யுணர்வு பெறுதலையே "ஆன்மீகம்' எனும் சொல் குறிக்கிறது. அதாவது, ஆன்மாவானது மீட்சியடையும் நிலையையே - ஆன்மாவின் மீட்சியையே ஆன்மீகம் என்ற சொல் குறிக்கிறது. எனவே, ஆன்மிகம் வேறு; ஆன்மீகம் வேறு! என்று தெளிக!

-அ.ச.தமிழ்ச்செல்வி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com