கோதைக் கும்மி

திருநெல்வேலியில் சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர் அழகிய சொக்கநாதப் பிள்ளை. இவர் சிவ பக்தராக இருந்தாலும், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் மீது "கோதைக் கும்மி' என்ற பெயரில்
கோதைக் கும்மி

திருநெல்வேலியில் சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர் அழகிய சொக்கநாதப் பிள்ளை. இவர் சிவ பக்தராக இருந்தாலும், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் மீது "கோதைக் கும்மி' என்ற பெயரில் சிறு நூல் ஒன்று இயற்றியிருக்கிறார். இந்நூல் அவரது காலத்தில் ஒரே ஒரு பதிப்புதான் வெளிவந்துள்ளது. ஆனால், அறிஞர் பி.ஸ்ரீ. இந்நூலைத் தேடி எடுத்து, ஒரு கட்டுரையாக (50 ஆண்டுகளுக்கு முன்பு) வெளியிட்டிருக்கிறார். நூலின் காப்புச் செய்யுள்களாக நான்கு பாடல்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று:

""சுந்தரம் சேர், மன்னார் சிந்தை மகிழ்ந்திடச்

சூடிக் கொடுத்தாள் மேல் பாடுகின்ற

பைந்தமிழ்க் கும்மிக்கு நம் தம் குருகைப்

பராங்குசன் சொற்பதம் காப்பாமே.''

இவ்வாறு தொடங்கும் இச்சிறு நூலில், தலைவியாகிய நாகவல்லி கோபுர வாசலைக் கண்டதும், கோதை சந்நிதியில் கும்மி அடிப்போம் என்கிறாள். மற்றப் பெண்களுடன் சேர்ந்து தலைவி பாட, எல்லாரும் கூடி நின்று கும்மி அடிக்கிறார்கள். சேனையர்கோன், இராமானுஜர், நம்மாழ்வார், பெரியாழ்வார் ஆகியோரை வணங்கிவிட்டு, இச்சிறு நூலைத் தொடங்கியுள்ளார் புலவர்.

நாகவல்லி, கும்மி அடிக்கும் பெண்களின் கூட்டத்திற்குத் தலைமை வகிக்கிறாள். "கோபுரத்தைக் கண்டு நம் கலி தீரக் கும்மி அடிப்போம்' என்கிறாள். எல்லாரும் சேர்ந்து இசைந்து கைகொட்டிக் கும்மி அடித்ததும், தலைவி மங்கள இசையுடன் பாடத் தொடங்குகிறாள். எப்படிக் கும்மி அடிக்க வேண்டும் என்ற இலக்கண விதிகளும் கூறப்பட்டுள்ளன:

""எல்லோரும் ஒன்றுபோல் பாடுவோம், இசைந்து

இட்டமாய் வட்ட மிட் டாடு வோம்

பொல்லாங்கு நீக்கிடும் வில்லிபுத்தூர் நங்கை

பொன்மலர்த் தாள்முடி சூடுவோம்...''

இப்படி ஒவ்வொரு பகுதியாக வர்ணித்துப் பின், தீர்த்தம், தலம் என்ற முறைமையில் நூலை எழுதிச் செல்கிறார் புலவர். "மாடங் கொள் மேல்நிலைக் கோபுரமும் உயர் - மாமதிலும் திருமாளிகையும் - நீடும் பொன் ஆலயம் மேவிய கோதையை நேர்ந்து கும்மி அடிப்பமடி' என்று பாடிவிட்டு, திருவரங்கத்திற்குப் பல்லக்கில் பெரியாழ்வார் அழைத்துச் செல்வதையும், கோதையைப் பல்லக்கிலிருந்து இறங்கி, அரங்கநாதனின் சந்நிதியில் சேர்க்க வேண்டும் என்ற ஆழ்வாரின் கருத்தையும் குறிப்பிட்டுள்ளார்.

புலவர், மூன்று கும்மிப் பாடல்களில், கும்மியடிக்கும் பெண்களின் அதிசய உணர்ச்சியோடு கூடிய பக்தியைப் பாடுகிறார்.

""பைவாய் அனந்தன் முடிமேல் நின்றருள்

பார்மாதை வில்லிபுத்தூர் மாதை

மெய்வாய் கண் மூக்குச் செவி கொடுத்து ஆண்டாளை

வியந்து கும்மி அடிப்பமடி''

கும்மிப் பிரபந்தத்தை நிறைவாக அழகான வாழ்த்துடனும், சோபனத்துடனும் (சோபனம்-மகிழ்ச்சியின் எல்லை) நிறைவு செய்துள்ளார். "வரம் அளித்தருளும் கோதை நாச்சியார் வாழி, ஆழ்வார்களும் வாழிய, பரம பாகவதர் திருக்கூட்டமும் பல்லாண்டு பல்லாண்டு வாழியவே' எனக் கும்மியடிக்கும் பெண்கள் இப்படி எல்லாரையும் வாழ்த்திவிட்டு, அழகிய சொக்கநாதரையும் வாழ்த்துகிறார்கள். "பழகிய அருட் கோதைப் பிராட்டி மேல் பைந்தமிழால் கும்மிப்பாடல் செய்த அழகிய சொக்கநாதன் சொல் வாழி என்று ஆனந்தக்கும்மி அடிப்பமடி'.

ஆண்டாளுக்கும், அவள் காதலனுக்கும் சோபனம் சொல்லி நூலை நிறைவு செய்திருக்கிறார் புலவர். இந்த அற்புதமான நூல் இன்று எங்கும் கிடைக்கவில்லை; மறுபதிப்பும் வெளிவரவில்லை!

-அவினாசி முருகேசன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com