

மன்னர்கள் ஆட்சி செய்த காலத்தில் மன்னருக்கு வாரிசு இல்லையென்றால், புதிய மன்னரைத் தேர்ந்தெடுக்க யானையிடம் மாலையைக் கொடுத்து வீதி வழியே அழைத்துச் செல்வர். அப்படிச் செல்லும்போது, யானை யாருக்கு மாலை போடுகிறதோ அவரையே புதிய மன்னராக ஏற்றுக்கொள்வது
வழக்கம். தேர்வு செய்ய வேண்டியவரைத் தேர்வு செய்யும் முறையில் இது ஒரு முறையாகும்.
இதேபோன்று தகுதியான பல நபர்களிலிருந்து ஒரே ஒரு நபரைத் தேர்ந்தெடுக்க வேண்டுமானால் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுப்பது இப்போதைய வழக்கம். இதற்கு எடுத்துக்காட்டாக, தமிழ்நாடு அரசு முன்பு நடத்திய "பரிசுச் சீட்டை'க் கூறலாம். ஒரு லட்சாதிபதியைத் தேர்ந்தெடுக்க விற்பனை செய்யப்பட்ட பரிசுச் சீட்டு எண்களை எல்லாவற்றையும் கணக்கில் எடுத்துக்கொண்டு, குலுக்கல் முறையில் ஒரு எண்ணைத் தேர்ந்தெடுத்து அந்த எண்ணுக்கு உரியவரை "லட்சாதிபதி' என அறிவித்தனர்.
மற்றொரு எடுத்துக்காட்டு, சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் முதலிய நிறுவனங்களில் வீடுகள், வீட்டுமனைகள் போன்றவற்றை ஒதுக்கீடு செய்யும்போது பொதுமக்கள், மத்திய அரசு ஊழியர்கள், மாநில அரசு ஊழியர்கள் என எல்லாப் பிரிவினரிடமிருந்தும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவை பரிசீலிக்கப்பட்டு, குலுக்கல் நடத்தி, வீடுகள் ஒதுக்கீடு செய்வது.
இக்குலுக்கல் முறையைக் கண்டுபிடித்தவர் சங்ககாலத் தமிழர். ஆனால், அப்பொழுது இம்முறைக்குக் குலுக்கல் முறை என்ற பெயர் இல்லை. "குடவோலைச் சீட்டு' என்ற அழகான பெயர் இருந்துள்ளது. இதனை அகநானூற்றில் "மருதன் இளநாகனார்' என்ற புலவர் தலைவன் கூற்றாகப் பாடிய பாடலில் எடுத்துக் கூறுகிறார்.
குடிபதிப் பெயர்ந்த சுட்டுடை முதுபாழ்க்
கயிறுபிணிக் குழிசி ஓலை கொண்டார்,
பொறிகண்டு அழிக்கும் ஆவண மாக்களின் (அகநா.பா-77: 6-8)
ஊர்ச் சபைக்குத் தலைவரைத் தேர்வு செய்ய வேண்டுமானால் ஊரில் எவரையும் ஒதுக்கிவிட முடியாது. எல்லோருடைய பெயரையும் சேர்க்க வேண்டும். எனவே, பெயர்கள் எழுதிய ஓலைகளை ஒரு குடத்தில் இட்டு, பின்னர் குடத்தில் இருந்து ஓர் ஓலையைக் கையால் எடுத்து அவ்வோலையில் உள்ள பெயருக்கு உரியவரையே தலைவராக அறிவிப்பர். இதுவே குடவோலைச் சீட்டு முறை. இக்கருத்தையே புலவர் எடுத்துக் கூறியுள்ளார். எனவே, சங்ககாலத் தமிழரால் உருவாக்கப்பட்ட "குடவோலைச் சீட்டு' முறையே பெயர் மருவி, தற்போது "குலுக்கல் சீட்டு' என்ற பெயரில் வழங்கி வருகிறது.
-மு. நக்கீரன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.