கவைமக

தமிழர் தொன்று தொட்டே அறிவியல் புலமையுடன் செயல்பட்டு வந்திருக்கின்றனர் என்பதற்குச் சங்க இலக்கியம் நமக்குப் பல்வேறு ஆதாரங்களைத் தந்துகொண்டிருக்கிறது.
கவைமக
Updated on
2 min read

தமிழர் தொன்று தொட்டே அறிவியல் புலமையுடன் செயல்பட்டு வந்திருக்கின்றனர் என்பதற்குச் சங்க இலக்கியம் நமக்குப் பல்வேறு ஆதாரங்களைத் தந்துகொண்டிருக்கிறது. சங்கத் தமிழர் மருத்துவத் துறையிலும் தன்னிகரில்லாப் புலமையுடன் இருந்திருக்கின்றனர். இரட்டைக் குழந்தை சில நேரங்களில் ஒட்டிப் பிறப்பதுண்டு. அப்படிப் பிறக்கும் குழந்தைகளை இன்று நவீன அறுவை சிகிச்சை மூலம் பிரித்தெடுக்கின்றனர். ஆனால், ஆதி காலத்தில் அந்த வசதி இருக்க வாய்ப்பில்லை. அவர்கள் அப்படியேதான் வாழவேண்டும்.

சங்க இலக்கியத்தில் கவ்வை, கவை என்கிற இரண்டு சொற்களும் இடம்பெற்றுள்ளன. கவ்வை என்பது அலர், ஆரவாரம், துன்பம் என்கிற பொருளிலும், கவை என்பது பிளவு, இரட்டை, கிளை என்கிற பொருளில் ஆளப்பட்டிருக்கின்றன. நாட்டார் வழக்காற்றில் கவ்வாகோல் என்கிற ஒன்றுண்டு. பறவைகளை அடிக்க வேடர்கள் பயன்படுத்தும் உண்டிக்கோல் என்பது இக்கவ்வாக்கோலில்தான் செய்யப்படும். ஒரு கிளை இரண்டாகப் பிரிந்து வளர்வது என்பது இதன் அடிப்படை. பிறப்பின் வினோதங்களில் ஒட்டிப்பிறத்தல் என்கிற ஒன்று உண்டு. அப்படிப் பிறந்தவர்களைக் குறிக்கவே "கவைமக' எனும் சொல்லைப் பயன்படுத்தியுள்ளனர். குறுந்தொகையில் உள்ள கீழ்க்காணும் பாடலைப் பாடிய புலவரின் பெயர் கவை மகனார் என்பது. அக்கவை மகனாரின் பாடல் வருமாறு:

""கொடுங்கான் முதலைக் கோள்வ லேற்றை

வழிவழக் கறுக்குங் கானலம் பெருந்துறை

இளமீ னிருங்கழி நீந்தி நீரின்

நயனுடை மையின் வருதி யிவடன்

மடனுடை மையி னுயங்கும் யானது

"கவைமக' நஞ்சுண் டாஅங்

கஞ்சுவல் பெருமவென் னெஞ்ஞத் தானே''

(குறுந்.324)

தலைவன் இரவுக் குறியில் தலைவியைச் சந்திக்க வருகிறான். அவன் வருகின்ற வழியில் உள்ள நீர்நிலைகளைக் கடக்க வேண்டும். அந் நீர்நிலையில் கொடிய முதலைகள் இருக்கின்றன. அதையெல்லாம் நினைத்துத் தலைவி வருந்துகிறாள். அக்கொடிய வழியில் நீ வரவில்லையென்றாலும் வருந்துவாள். அதாவது நீ வரும் வழியை நினைத்து அத்தகைய கொடிய வழியில் வரவேண்டாம் என்றும் அஞ்சுகிறாள். அவன் தன்னைக் காண வரவில்லையென்றால் தனக்கு உண்டாகும் துன்பம் குறித்தும் ஏங்குகிறாள். இரண்டிற்கும் வருந்தும் தலைவியின் நிலை ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தையில் ஒன்று நஞ்சுண்டால், அக்குழந்தையைப் பெற்றவள் நஞ்சுண்ட குழந்தைக்கு மட்டும் தனியாக அழமுடியாது என்பதுபோல தலைவி வருந்துகிறாள் என்று தலைவனிடம் கூறுகிறாள் தோழி. இதனையே சற்று மாற்றி "இருதலைப் புள்ளின் ஓருயிர் அம்மே' (அகநா.12) என்பார் புலவர் கபிலர்.

ஒட்டிப்பிறந்த குழந்தையில் ஒன்று நஞ்சுண்டாலும் அது இருவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, அக்குழந்தையின் பெற்றோர் அதைக் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும், நஞ்சு அருந்திய ஒரு குழந்தைக்கு மட்டும் தாய் தனியே அழ முடியாது. அத்தைகய நிலையில் தலைவி இருப்பதாகக் கூறப்படுகிறது. சூழலுக்குத்தக அறிவியல் சிந்தனையைப் புலவர் எதார்த்த உவமையாகக் கையாண்டுள்ள தன்மை போற்றத்தக்கது.

இரட்டைக் குழந்தை பிறந்தால் சில நேரங்களில் அதில் ஒன்று ஆணாகவோ ஒன்று பெண்ணாகவோ இருக்கும். ஆனால், ஒட்டிப்பிறக்கும் குழந்தைகள் ஏதேனும் ஒரு தன்மையைச் சார்ந்ததாக இருக்கவே வாய்ப்பு அதிகம். அதனைக் குறிக்கவும் கவைமக எனும் சொல்லைச் சங்கத் தமிழர் பயன்படுத்தி இருக்கலாம். மருத்துவ அகராதியில் "ஒட்டிப்பிறந்த குழந்தையைக் கவைமக என்ற சொல்லால் அழைக்க வேண்டும்' என்பதை இனியேனும் இடம்பெறச் செய்ய வேண்டும்.

- முனைவர் சோ.ராஜலட்சுமி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com