சில நேரங்களில் சில உண்மைகள்

காதலும் வீரமும் தமிழர்க்கான தனி அடையாளங்கள். அவை உலகளாவியவை ஆனாலும் அவற்றில் தனித்த முத்திரை பெற்ற பெருமை தமிழருக்கே உண்டு. இந்த அடிப்படையில் வரையப்பட்டதுதான் தொல்காப்பியப் பொருளதிகாரம்.
சில நேரங்களில் சில உண்மைகள்
Updated on
2 min read

காதலும் வீரமும் தமிழர்க்கான தனி அடையாளங்கள். அவை உலகளாவியவை ஆனாலும் அவற்றில் தனித்த முத்திரை பெற்ற பெருமை தமிழருக்கே உண்டு. இந்த அடிப்படையில் வரையப்பட்டதுதான் தொல்காப்பியப் பொருளதிகாரம்.

வாழ்க்கைக்குப் பொருள் (Wealth) தேவை என்பது போல வாழ்க்கையும் பொருளுடையதாக (Meaning)  இருக்க வேண்டும் என்பார் தமிழ் மாமுனிவர் குன்றக்குடி அடிகளார். இந்த வாழ்க்கை வரம்பான இலக்கண மகுடம், தமிழுக்கன்றிப் பிற எந்தச் செம்மொழிக்கும் இல்லை என்பதே பேருண்மை.

இந்த அடிப்படையிலான வாழ்க்கை வரம்பில் தமிழரின் இல்லற நெறியானது - களவில் முகிழ்த்துக் கற்பில் மலர்ந்து மக்கட் பேறாம் மகரந்தச் சேர்க்கையில் வழி வழி குடும்ப வாரிசு தழைப்பதற்கான பழம் பழுக்கும் பண்ணையே என்றால் மிகையில்லை.

அந்தப் பின்னணியில் ஒருவனும் ஒருத்தியும் சந்திக்கிறார்கள். உள்ளம் ஒன்றுகிறார்கள். புரிதல் உணர்வோடு மணம் முடித்துக்கொள்ளத் தடையேற்படுங்கால் அறத்தொடு நிற்றல், உடன்போக்கு என்ற சில முயற்சிகள் ஏதுவாக அமையும். இங்ஙனமாகக் காதல் வேட்டையில் எய்யப்படும் ஓர் அம்புதான் அறத்தொடு நிற்றல். இதற்கான சான்றுப் பாடல்கள் செம்மொழி இலக்கியப் பரப்பில் பல இருப்பினும் பத்துப் பாட்டுள் ஒன்றான

கபிலரின் குறிஞ்சிப் பாட்டைத் தலையாயதாகக் கொள்ளலாம்.

மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள் ஒன்றான கந்தருவத்தோடு தமிழ்க் களவு தொடர்புடையதாகத் தொல்காப்பியர் கூறினாலும் அது முழு உண்மையன்று, ஒரோ வழி (சிறுபான்மை) ஒத்தும் ஒரோ வழி ஒவ்வாமையும் உடையது. காதலித்த இருவரும் பிரிந்து வேறொருவரைக் காதலிக்கலாம். இது பற்றிய வருத்தமோ குறையோ அவர்கட்கு இல்லை. இது போன்றதன்று தமிழர் களவு. இவ்வுண்மையைத்தான் நச்சினார்க்கினியர், ""இது (களவு) கந்தருவர்க்குக் கற்பின்றி அமையவும் பெறும், ஈண்டு (தமிழ்)க் கற்பின்றிக் களவே அமையாது'' என்றார்.

ஆக, ஒருவனுக்கு ஒருத்தியாக மணந்து கொள்ளும் அறத்தொடு பட்ட தமிழ்க் களவுக்கு மாறானது கந்தருவக் களவு என்பதால் இந்த உண்மையையே கபிலர் பிரகத்தனுக்கு உணர்த்தினார். எனவே, கந்தருவத்தின் ஒரோ வழி தமிழ்க் களவன்றி அதன் முழுமையானதன்று என்பதோடு அதனினும் பண்பாட்டுச் சிகரமானது தமிழ்க் களவாகும் என்பது அறத்தொடு நிற்றலாலும் ஆரிய அரசனுக்குக் கபிலர் வேறுபாட்டைப் பிரித்து உணர்த்தியதானும் நச்சினார்க்கினியரின் உண்மை விளக்கத்தாலும் உணரலாம்.

இதுபோன்றதாகவே புறத்துறையில் ஏறு தழுவுதலாகிய வீர விளையாட்டையும் செம்மொழி இலக்கியச் சிகரமாக உணரலாம். வெளிநாட்டின் சல்லிக்கட்டைப் போன்றதன்று தமிழரின் ஏறு தழுவல். அங்கே மிருக வதையோடு கூடியது, இங்கே பொழுதுபோக்கான வீர விளையாட்டு. முல்லைத் திணையின் செயல்களுள் ஏறு தழுவுதல் ஒன்று. அது போட்டிக்கானதும் அன்று. காளையை அடக்கினால்தான் மகளைத் தருவேன் என அறைகூவல் செய்வது தமிழர் அறமன்று. அது வடவர் அறம்.

வில்லை முறித்தால், இசையில் வெற்றி பெற்றால் என வரம்பிடும்போது வெற்றி பெறுவோர் பெண்ணுக்கேற்ற வயதினராக இருப்பர் எனக்கூற முடியாது. ஒத்த கிழவனும் கிழத்தியும் என்பதே தமிழர் அறம். இது "பிறப்பே குடிமை' என்ற தொல்காப்பிய நூற்பாவால் வரம்பிடப்பட்டதாகும். இந்நிலைக்கு மாறுபட்டதாக அமையும் என்பதால்தான் "போட்டி அறிவிப்பால்' மணத்தல் தமிழில் இல்லை.

இந்த உண்மையையும் நச்சினார்க்கினியரே கலித்தொகைப் பாடலில் தெளிவுறுத்தும்போது ""இது அசுரம் என்ற வடவரின் எட்டு மணத்துள் ஒன்றின்பாற்பட்டது'' என்கிறார். ஓரிரு பாடலில், முன்பே காதல் வயத்தால் உள்ளம் ஒன்றியவர்கள் ஏறு தழுவுதலில் வீரம் காட்டி மணந்து கொண்டதாக உள்ளனவேயன்றிப் போட்டி அறிவிப்பாலன்று.

மிருக வதையான சல்லிக்கட்டுக்கு மாறுபட்டது ஏறு தழுவுதல் என்பதோடு, அது வடவரின் போட்டியால் வென்று பரிசு பெறுதற்கும் மாறுபட்டதென்பதே உண்மையாகும்.

மேலும், இந்த வீர விளையாட்டுதான் காலப்போக்கில் மஞ்சு விரட்டு என்ற பெயரை இலக்கண வகையில் பெற்றது. ஏறு தழுவலாம் மஞ்சுவிரட்டுக்கும் மணமுடிப்பிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதே தமிழ் அறம்!

எனவே, சில நேரங்களில் சில உண்மைகள் வெளிச்சப்பட்டால் செவ்வியல் தமிழின் அறம் ஓங்கி ஒளிரும் என்பதில் ஐயமில்லை.

-தமிழாகரர் தெ.முருகசாமி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com