

பேச்சு மொழி வேறு; எழுத்து மொழி வேறு என்று எண்ணுவது தவறு. பேச்சு மொழியே எழுத்து மொழியாகவும் ஒரு காலத்தில் இருந்திருக்கிறது - இருந்திருக்க வேண்டும். எழுத்து மொழி எவ்வளவு காலம் ஆனபோதிலும் எழுதப்பட்ட நிலையில் அப்படியே நிலைத்து நிற்கிறது. ஆனால், பேச்சு மொழியோ காலத்துக்குக் காலம் இடத்திற்கு இடம் என்று மாறுபட்டுக்கொண்டே இருந்திருக்கிறது. மாற்றம் செய்கின்ற இந்த நிகழ்வுதான் எழுத்து மொழிக்கும் பேச்சு மொழிக்கும் உள்ள இடைவெளி.
நாம் அன்றாடம் பேசும் மொழியில் உள்ள தமிழ்ச் சொற்கள் அப்படியே அதன் பொருளும் வடிவமும் சிதையாது சங்க இலக்கியங்களில் காணக்கிடைக்கின்றன. கிராமத்து மக்கள் பேசும்போது பழந்தமிழ் இலக்கியங்களில் உள்ள சொற்களை அப்படியே பயன்படுத்தி வருகிறார்கள்.
கிராமங்களில் பிள்ளைச் செல்வங்களை "மக்கள்' என்று குறிப்பிடுவர். ""உனக்கு எத்தனை மக்கள் அப்பா?'' என்று கேட்பதையும், ""இத்தனை மக்களைப் பெற்று அவன் என்ன சுகத்தைக் கண்டான்'' என்று சலித்துக் கொள்வதையும் கேட்கிறோம். திருவள்ளுவரின் "மக்கட்பேறு' என்ற அதிகாரத்திற்கு, "புதல்வரைப் பெறுதல்' என்று பரிமேலழகர் தமது முன்னுரையில் எழுதியுள்ளார். புதல்வர் என்பதற்குப் பெண்பாற் பெயர் புதல்வி.
நளவெண்பாவில், நளனுக்கு இரண்டு பிள்ளைகள். ஒன்று ஆண் மற்றது பெண். புகழேந்தியார் இருவரையும் "மக்கள்' என்றே குறிப்பிடுகிறார். ""மக்களை முன்காணா'' என்றும், ""என்மக்கள் போல்கின்றீர் யார் மக்களாள் நீர் என்றான்'' என்றும் குறிப்பிடுகிறார். இலக்கியங்களில் குறிப்பிடப்படும் "மக்கள்' என்ற சொல் பிள்ளைச் செல்வத்தை குறிப்பிடுவதற்காகவே கிராம மக்களிடையே இன்றைக்கும் வழங்கி வருவது வியப்பளிக்கிறதல்லவா!
இதேபோல் "மாட்டு' என்றொரு இலக்கியச் சொல், பேச்சு வழக்கில் எப்படிப் பயன்படுகிறது என்று பார்ப்போம். ""மாட்டு மாட்டு மகளிர்தரத் தர'' என்று கலித்தொகையில் வருகிறது. மாட்டு என்றால், இடத்தில், அருகில் இருப்பது என்பது பொருள். ""பொருள்சேர் புகழ் புரிந்தார் மாட்டு'' என்று திருக்குறளில் வருகிறது. பொருள்சேர் புகழ் புரிந்தார் இடத்தில் என்பதை "மாட்டு' என்று குறிப்பிடுகிறார் வள்ளுவர். திருக்குறளில் பல இடங்களில் "மாட்டு' என்னும் சொல்லைப் பயன்படுத்தியுள்ளார்.
தேசிக விநாயகம் பிள்ளை, ""சீமாட்டியே உந்தன் கால்மாட்டிலே நின்று'' என்று கலைவாணியிடம் வேண்டுகிறார். கிராமங்களில் சாதாரணமாகப் பேச்சு வழக்கில், ""தலைமாட்டிலே தீப்பெட்டி இருக்கு; கால்மாட்டிலே செருப்பு கிடக்கு'' என்றெல்லாம் பேசுவார்கள்.
மற்றொரு சொல் தளைஞ்சி. கிராமங்களில், பசுமாடுகளில் பால் கறக்கும்போது சில மாடுகள் துள்ளும்; சில கால்களைத் தூக்கி அசைத்துக் கொண்டிருக்கும்; சில உதைக்கும். கால்களைத் ""தளைஞ்சிட்டு பால்கற, இல்லாவிட்டால் காலைத் தூக்கி பாலைக் கொட்டி விடும்'' என்றும், நாற்றுப் பறித்தவுடன் அவற்றை ""தளைஞ்சு போட்டு விடு'' என்றும் கூறுவார்கள். "தளைதல்' என்றால் ஒன்றோடொன்று கட்டுதல் என்பது பொருள். யாப்பிலக்கணத்தில் உறுப்பியலில் நான்காவதாக வருகிறது தளை. முதலில் எழுத்து, அடுத்தது எழுத்துகளாலான அசை, அசையோடு வரும் சீர், சீர்களை ஒன்றோடொன்று கட்டுவது தளை எனப்படும். ""தளை எனினும் பந்தமெனினும் ஒக்கும். தளை, பிணிப்பது - பிணித்தல்; பந்தம்}கட்டுதல் - கயிறு'' என்று யாப்பருங்கலக்காரிகை விளக்கம் தருகிறது. ""எல்லாத்தையும் தளைஞ்சு போடு'' - எல்லாவற்றையும் கட்டிப்போடு எனும் பொருளில் இன்றும் கிராமங்களில் பேசப்படுவது வியப்பாகவும், செவிக்கு இன்பமாகவும் இருக்கிறது!
இதே போன்று "கால்', "ஒருக்கால்', "காதவழி', "ஆய், ஆயி', "சுள்', "சோடை' முதலிய அருமையான பைந்தமிழ்ச் சொற்கள் இன்றைக்கும் கிராம மக்களின் பேச்சுவழக்கில் உலாவருகின்றன. பேச்சு மொழியே பைந்தமிழ் இலக்கியங்களை வாழவைத்துக் கொண்டிருக்கிறது.
-குடந்தை பரிபூரணன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.