தம் தோற்றப் பொலிவாலும் நேரிய வாழ்க்கையாலும் புலமை நலத்தாலும் பலருக்கு வழிகாட்டியாக அமைந்தவர் எங்கள் பேராசிரியர் "கோவை ஆசான்' ப.சு. மணியம். அவர் "மறைமலையடிகள் வாழ்க' என்று கையில் பச்சை குத்திக்கொண்டிருந்தவர். அவருக்குத் திருக்குறளிடத்தும் பரிமேலழகரிடத்தும் அளப்பரிய ஈடுபாடு. அவரைச் சந்திக்கும்போது என் ஐயங்களைத் தெரிவித்து தெளிவு பெறுவது வழக்கம்.
""மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்று'' (941) என்னும் குறளுக்கு, ""மருத்துவ நூலோரால் வகுக்கப்பட்ட ஊதையும் பித்தமும் கோழையும் ஆகிய மூன்றும் ஏற்ற அளவில் இல்லாமல் மிகினும் குறையினும் நோயை உண்டாக்கும்'' என்பதே இந்நாளைய அறிஞர் பலரும் கூறும் பொருள். ஆனால், உணவும் செயல்களும் ஒருவன் உடம்பின் அளவிற்கு ஏற்ப அமையாமல் மிகுந்தாலும் குறைந்தாலும் ஆயுள்வேத நூலோரால் வாதம் முதலாக எண்ணப்பட்ட மூன்றும் நோயைச் செய்யும் என்பது பரிமேலழகர் உள்ளிட்ட பழைய உரையாசிரியர்கள் கண்ட உரை.
""ஐயா, மிகினும் குறையினும் என்பதற்கு நூலோரால் எண்ணப்பட்ட மூன்று என்பது எழுவாயாக அமைந்திருக்கப் பழைய உரைகாரர்கள் இக்குறளில் இல்லாத உணவு செயல்கள் என்பதனை ஏன் தோன்றாத எழுவாயாக வருவித்துக் கொள்கிறார்கள்'' என்றேன். ""அவர்கள்தான் சோறு தின்றவர்கள்'' என்றார். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. அஃதாவது அவர்களே பயனுற வாழ்ந்தவர்கள், பிறர் எல்லாம் தண்டச்சோறு என்றார். ""நோய்க்கு முதற்காரணம் உணவும் செயல்களும்தான். அவற்றால் ஊதையும் பித்தமும் கோழையும் மிகுந்து நோய்களை உண்டாக்குகின்றன'' என்று விளக்கினார். இவ்வதிகாரத்தின் அடுத்த ஆறு குறட்பாக்கள் உணவு உண்பது பற்றியே பேசுவதால் இக்குறளும் உணவும் செயலும் பற்றியே பேசுவதாகக் கொள்வதே பொருத்தம் என்று தெளிந்தேன்.
இந்த வாரச் சொல்லின் தமிழாக்கம் குறித்து எண்ணியபோது இந்த நிகழ்ச்சிதான் நினைவுக்கு வந்தது. நம் நாட்டில் நல்ல வேலைவாய்ப்பு மறுக்கப்படும் அறிவாளிகள் அமெரிக்கா போன்ற நாடுகளுக்குப் பறந்து செல்கிறார்கள். கை நிறையப் பொருள் ஈட்டிக் கையூட்டும் ஊழலும் இல்லாத அந்நாடுகளிலேயே கூடு கட்டிக்கொண்டு கண்ணியமாக வாழத் தொடங்குகிறார்கள்.
ஆயினும், அவர்களால் பிறந்த பொன்னாட்டையும், பெற்றோரையும் உற்றார் உறவினரையும் மறக்க முடிவதில்லை. ஆசை ஆசையாய் ஆண்டிற்கு ஒருமுறையோ இரண்டாண்டிற்கு ஒருமுறையோ குடும்பத்தோடு ஒருமாத விடுப்பில் வருகிறார்கள். சிலநாள்கள் மகிழ்ச்சியாக இருந்துவிட்டு ஏக்கத்தோடு திரும்புகிறார்கள். ஆனால், பயணத்தின் விளைவாக முதல் நான்கைந்து நாள்கள் பகலில் உறங்கியும் இரவில் விழித்தும் துன்பப்படுகிறார்கள்.
நெடிய விமானப் பயணம் மேற்கொள்ளும்போது, பல்வேறு நேர மண்டலத்தைக் குறுகிய காலத்தில் கடப்பதால் உடலியற்கைக்கும் செயலொழுங்கிற்கும் ஊறு நேர்கிறது. இயற்கைக்கு மாறாக நடக்கும்போது உடம்பு ஒத்துழையாமைப் போராட்டம் செய்கிறது. பகலில் உறக்கம், இரவில் விழிப்பு, தலைவலி, அமைதியின்மை, பசியின்மை வயிற்றோட்டம் போன்றவை உண்டாகின்றன. இப்படி மாறுபட்ட செயலால் உண்டாகும் உடற்சோர்வைக் குறிக்கும் சொல்லே Jet lag.
கோ.மன்றவாணன் 42 சொற்களையும், க. அன்பழகன் 25 சொற்களையும் தெரிவித்துள்ளனர். நண்பர்களின் சொற்களில், "செலவுழித் தகவிழைப்பு' (கா.மு. சிதம்பரம்) செழுமையான சொல். ஆனால் வழங்குவதற்குக் கடுமையானது. "சூழல் இட நேர மாற்ற உடல் உளப் பிறழ்வு' (ப.இரா.இராசஅம்சன்), "நெடுவளிப் பயணக் களைப்பு' (தெ. இராசாமணி),
"நெட்டாங்குப் பயண அயர்ச்சி', "நேர வலய அயர்ச்சி' (சாயி கிரிதர்) ஆகியவை செறிவானவை. எனினும் நீளமானவை. "காலச் சோர்வு', "நேரச் சோர்வு' (செ. லோகநாதன்) என்பவற்றில் விமானம் பற்றிய குறிப்பு இல்லை. "விண் சுணக்கம்' (என்.ஆர்.ஸத்யமூர்த்தி) சோர்வுக்குரிய காரணம் தெளிவாக இடம் பெறவில்லை. இச்சொல்லின் தமிழாக்கத்தில் வான்பயணம், உடற்சோர்வு பற்றிய குறிப்பு இருத்தல் சிறப்பு. அந்த வகையில் பார்க்கும்போது, சந்திரா மனோகரன், கோ.மன்றவாணன், சி.இராமச்சந்திரன்ஆகிய மூவரும் குறித்துள்ள விமானப் பயணக் களைப்பு, விண் பயணக் களைப்பு என்பவை பொருத்தமாக அமைகின்றன. இவ்விரண்டனுள் பின்னது எழுத்துச் சுருக்கம் உடையது. ஆதலின் Jet lag என்பதனை விண்பயணக் களைப்பு அல்லது விமானப் பயணக் களைப்பு எனலாம்.
Jet lag - விண்பயணக் களைப்பு அல்லது விமானப் பயணக் களைப்பு.
அடுத்த வாரத்திற்குரிய சொல் :
தகரப்பெட்டியின் மூடியைத் திறந்தால் உள்ளே பாதுகாப்பாக இருக்கும் இன்னொரு மெல்லிய
தகட்டினைSeal என்கிறோம்.இதன் தமிழ்ச்சொல் என்ன?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.