களவு - வானவியல் - சிறைகாவல்

களவில் தலைவி, தலைவனைச் சந்திக்க முடியாமைக்குக் காரணமாக அமையும் தடை "சிறைகாவல்' எனப்படும். இதை இறையனார் களவியல் உரைகாரர் நக்கீரர் விளக்கும் பாங்கு (இறை.கள. நூற்பா-29 இன் உரை) கவனிக்கத்தக்கது.
களவு - வானவியல் - சிறைகாவல்

களவில் தலைவி, தலைவனைச் சந்திக்க முடியாமைக்குக் காரணமாக அமையும் தடை "சிறைகாவல்' எனப்படும். இதை இறையனார் களவியல் உரைகாரர் நக்கீரர் விளக்கும் பாங்கு (இறை.கள. நூற்பா-29 இன் உரை) கவனிக்கத்தக்கது.

"காப்பு கைமிக்குக் காமம் பெருகினும்' என்பது. காப்பு என்பது இரண்டு வகைத்து நிறைகாவல், சிறைகாவலென. அவற்றுள் நிறைகாவல் என்பது காப்பன காத்துக் கடிவன கடிந்து ஒழுகுமொழுக்க மென்றவாறு.

சிறைகாக்குங் காப்பெவன் செய்யு மகளிர்

நிறைகாக்குங் காப்பே தலை (குறள்.57)

என்பதாகலான். சிறைகாவல் என்பது தாய் துஞ்சாமை, நாய் துஞ்சாமை, ஊர் துஞ்சாமை, காவலர் கடுகுதல், நிலவு வெளிப்படுதல், கூகை குழறல், கோழி குரற்காட்டலென இவை என்று விளக்கிச் செல்கின்றார். இங்கு சொல்லப்படும் நிறைகாவல் என்பது கற்பு வாழ்க்கையில் தலைவி ஒழுகும் ஒழுக்கம் எனலாம்.

சிறைகாவல் என்பது களவில் தலைவி - தலைவன் இருவரும் சந்திக்க முடியாமைக்கான காவல். அது தலைவியின் வீட்டினராலோ, ஊரினராலோ, விலங்கினாலோ, இயற்கையினாலோ எனப் பலவற்றால் இயல்பாக அமைவன. சிறைகாவல் என்பது ஆண், பெண் ஆகிய இருவராலும் காக்கப்படுவது.

நிறைகாவல் என்பது தலைவி என்கிற ஒரு பெண்ணால் தன் குடியைக் காக்கும் காப்பாகும். இது பெண்ணின் பெருமையை மறைமுகமாக விளக்குவதாகும். அதிலும் ஊர்த் துஞ்சாமை என்பதற்கு நக்கீரர் தரும் மற்றொரு விளக்கம் கவனிக்கத்தக்கது. 16ஆவது நூற்பா உரையில், "ஊர் துஞ்சாமை என்பது - ஊர்கொண்ட பெருவிழா நாளாய்க் கண்படை யில்லையாமாக, அதுவும் இடையீடாம் என்பது. அவை, மதுரை ஆவணியவிட்டமே, உறையர்ப் பங்குனியுத்திரமே, கருவூர் உள்ளிவிழாவே என இவைபோல்வன. பிறவும் எல்லாம் அப் பெற்றியானபொழுதும் இடையீடாம் என்பது.' என்று விளக்குகிறார்.

இதில் அவர் குறிப்பிடும் விழாக்கள் கவனிக்கத்தக்கன. மதுரை ஆவணி அவிட்டம், உறையர் பங்குனி உத்திரம், கருவூர் உள்ளி விழா எனும் மூன்று விழாக்களுமே பூமி இயக்கத்தின் பாற்பட்டதாக, பெüர்ணமி நாளுடன் தொடர்புடையதாக இருக்கின்றன. இவை தமிழர்களின் வானவியல் அறிவைக் காட்டுவனவாக இருக்கிறது. அதாவது, கோள்களின் (கிரகங்களின்) இயக்கத்தைத் தன்வயப்படுத்தும் அறிவோடு தொடர்புடையதாக இருக்கிறது.

ஆவணி அவிட்டம் என்கிற சொல் நேரடியாக சங்க இலக்கியத்தில் எங்கும் வரவில்லை. மற்ற இரு விழாக்கள் குறித்த பதிவுகள் அகநானூற்றில் உள்ளன. பங்குனி முயக்கம் அல்லது உத்திரம் என்பது பங்குனி மாதத்தில் வரும் பெüர்ணமியன்று; முருகன் கோயிலில் நடக்கும் விழாவினைக் குறிக்கிறது. அப்பொழுது உள்ளி விழா என்பது எது? மதுரை, உறையூர், கருவூர் என்னும் மூன்று ஊர்ப்பெயரும் இணைத்து நோக்கத்தக்கது. மருதன் இளநாகனார் பாடலில்,

..... கொங்கர்

மணிஅரை யாத்து அறுகின் ஆடும்

உள்ளி விழவின் அன்ன

அலர்ஆ கின்று அதுபலர்வாய்ப் பட்டே

(அகம். 368)

என்று இடம்பெற்றுள்ளது. கொங்கர் தங்கள் இடையிலே மணிகளைக் கட்டிக்கொண்டு ஆடும் விழாவே உள்ளிவிழா என்கிறது. மேலும், உள்ளிவிழாப் போல அலர் ஆகியது களவு ஒழுக்கம் என்று இணைத்து விளக்கியிருக்கிறார். இது எல்லா விழாக்களுக்குமான பொது மரபாக இருந்திருக்கக்கூடும். இதனைக் கொங்குவேளிர் என்கிற இனமக்களின் விழாவாக அடையாளப்படுத்துகிறார் நக்கீரர்.

உள்ளி விழா வளமை சார்ந்த விழா. மக்கள் மழைவேண்டி தெருக்களில் ஆடிப்பாடும் ஒயிலாட்ட நிலைப்பட்டதாக இருக்கலாம் என்பர் சிலர். அத்தகைய விழாவின் போதும் தலைவி தலைவன் சந்திப்பு தடைபட்டிருக்கிறது. அவ்வாறே அகம். 137ஆவது பாடலில் (உறையர் முதுகூத்தனார்), பங்குனி முயக்கம் கழிந்த வழிநாள் என்று உறையூரில் பங்குனி விழா முடிந்த காட்சியை விளக்குகிறார். பங்குனி, ஆவணி ஆகிய இரு மாதங்களில் பெüர்ணமி அதாவது முழு நிலவின் ஒளி திடமாக வெளிப்படும் மாதங்கள் என்பதைத் தமிழர் இனங்கண்டே அன்றைய தினத்தில் அவ்விழாவினைக் கொண்டாடி இருக்கின்றனர்.

கொங்கர்களால் நிகழ்த்தப்பட்ட உள்ளி விழா என்பது ஓர் இனத்தின் விழாவா அல்லது தமிழர்க்கான பொது விழாவா என்பது தெரியவில்லை. அதே சமயம் வளமை வேண்டி நிகழ்த்தப்பட்ட விழாவாக இருப்பதால் பங்குனி மாதத்திற்கும் ஆவணி மாதத்திற்கும் இடைப்பட்ட ஒரு மாதத்தில் கொண்டாடப் பட்டிருக்கலாம். அநேகமாக சித்திரை மாதமாக இருக்கலாம். எல்லா மாதங்களிலும் முழுநிலவு வரும். ஆனால், குறிப்பிட்ட சில மாதங்களில் வரும் முழுநிலவின் (பெüர்ணமி) வெளிச்சம் கூடுதலாக இருக்கும். அதாவது, கோள்களின் இயக்கத்தைக் கணக்கிட்டு ஒரு கோள் மற்றொரு கோளைக் கடத்தல் மற்றும் அதன் நிலை ஆகியவற்றைக் கணித்து அதற்குத்தக விழா எடுத்தால், அவை நன்மை செய்யும் என்பதோடு அவற்றைக் கட்டுபடுத்தும் நிலையையும் அறிந்திருக்கின்றனர் என்பதை அறியமுடிகிறது.

அத்தகைய நாள்களில் நடைபெறும் விழா இரவு முழுவதும் நடைபெறும்; ஊரே விழித்திருக்கும். எனவே, களவில் ஒழுகும் தலைவன் - தலைவி இருவரும் இரவுக்குறியில் சந்திக்க முடியாத சூழல் இயல்பாகவே அமைந்துவிடும். இது இயற்கையாக உருவான தடையாக இருக்கிறது. அதே சமயம், தமிழர் வானவியல் அறிவுடன் இயைந்து தங்கள் வாழ்வியலை நோக்கும் திறம் போற்றத்தக்கது.

-முனைவர் சோ.ராஜலட்சுமி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com