கவிராயர் தந்த கணக்கு

ஒருமுறை குரிச்சிக் குளம் சிதம்பரக் கவிராயர் தம் மாணவராகிய சிவக்கவிராயரிடம், தம்மைக் காண ஏன் வரவில்லை? எனப் பாட்டாலே வினவினார்.

ஒருமுறை குரிச்சிக் குளம் சிதம்பரக் கவிராயர் தம் மாணவராகிய

சிவக்கவிராயரிடம், தம்மைக் காண ஏன் வரவில்லை? எனப் பாட்டாலே வினவினார்.

""காலிரண்டும் ஊனலையோ? கையிரண்டும் சேரலையோ?

நாலிரண்டும் அறியாயோ நற்கவியே?; ஓரெட்டில்

கூழ் குடித்துத் தமிழ் பாடக் குரிச்சிக் குளம் வாராது

தாழடைத்து இருந்தாயோ தனித்து?''

இதன் பொருளாவது: "உனது இரு கால்களும் ஊன்றி நடக்க முடியாதோ? இல்லை, உமது கைகள் இரண்டும் சேர என்னை வணங்க மாட்டாயோ? நாலடியாரும் திருக்குறளும் நீ படிக்கவில்லையோ? கவிராயரே! ஓரெட்டில் நடந்து வந்து எமது வீட்டில் கூழ் குடித்துக் கவி பாடி மகிழக் குரிச்சிக் குளம் நகருக்கு வாராமல், உமது வீட்டின் தாழ்ப்பாளைப் பூட்டிக் கொண்டு தனித்து இருந்து விட்டீரோ?' என்பதாகும்.

இதன் சிலேடை நயமிக்க மற்றுமொரு பொருளாவது, "உமது வீட்டின் கால்கள் (தூண்கள்) இன்னும் ஊன்றப்படவில்லையோ? உத்தரத்தில் போடப்படும் (வலை) கைகள் ஒன்றோடொன்று சேரவில்லையோ? நாலிரண்டு எட்டு என்று நீ அறியாயோ? வீட்டில் ஓர் எட்டு முழக்கை பொருத்த வேண்டும் என்பதும் நீ அறியவில்லையோ? பின்னை, நீ யாது காரணமாக வரவில்லை?' என்பதாகும்.

சிதம்பரக் கவிராயர் பாடிய இப்பாடலுக்கு மாற்றுக் கவியாக சிவக்கவிராயர் பாடியது.

""முக்காலுணர்ந்த தமிழ் முதலே சிதம்பரமே!

நாக்காலுன்னாமம் நான் பாடத் தில்லையிலே

ஒருக்காலிருக்காது உடனே நீ வந்தக்கால்

உயிர்பெறுமென் காலிரண்டே!''

இப்பாடலின் பொருளாவது: "முக்காலமும் உணர்ந்தவரே! தமிழுக்கு வித்தானவரே! சிதம்பரப் புலவரே! (தில்லை நடராசரே!) எனது நாவால் உமது திருப்பெயரைப் பாட முடியாமல் வாத நோயினால் அவதியுற்று எழுந்து நடக்க முடியாமல் வருந்துகிறேன். வைத்தியராகிய நீவீர் வந்தால் என் கால்கள் குணமாகி நான் எழுந்து நடப்பேன்!' என்பதாகும். அது மட்டுமல்லாது, இப்பாடலில் கணக்கொன்றைச் சிலேடை நயத்துடன் பாடியுள்ளார்.

""முக்காலுணர்ந்த தமிழ் முதலே சிதம்பரமே தீ = தீ

நாக்காலுன்னாமம் நான் பாடத் தில்லையிலே 4 ஷ் டீ = 1

ஒருக்காலிருக்காதுடனே நீ வந்தக் கால் 1 ஷ் டீ = டீ

உயிர்பெறுமென் காலிரண்டே! 8 ஷ் டீ = 2

சிதம்பரப் புலவருக்குக் காது கொஞ்சம் மந்தம். ஆதலால், இருக்காது (இரு காது) இரு காதிலும் கேட்பாய் என்ற பொருள் வைத்துப் பாடியுள்ளார். சிதம்பரத்திலிருக்கும் நடராசர் ஆடியபாதராக ஒற்றைக் காலில் இருப்பதால் ஒருக்காலிருக்காது (ஒற்றைக் காலில் நில்லாது) இருகால்களுடன் விரைந்து வந்து அருள் செய்தால், எனது கால்களிரண்டும் குணமாகும் என்றும், முக்கால், நாக்கால் ஒருக்கால் இவை யாவும் கூட்ட எண் கால் (8 ஷ் டீ) = 2 எனவும் பாடியுள்ளார். 8 என்பது சைவ சித்தாந்தத்தில் உயிர் (ஆன்மா). இதனை "அ' என்ற எழுத்தால் குறிப்பர். (அ = 8).

கா. காளிதாஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com