இலக்கிய நோக்கில் யோகம்!

பதஞ்சலி முனிவர் வாக்கு, காயம், மனம் ஆகிய வற்றினால் உண்டாகும் குற்றங்களை நீக்குவதற்காக முறையே சப்த சாத்திரத்தையும், மருத்துவ சாத்திரத்தையும், யோக சாத்திரத்தையும் படைத்துள்ளார். இம்மூன்றினுள் யோக சாத்திரத்தையே தற்காலத்தார் யோகா (Yoga)  என்கின்றனர்.
இலக்கிய நோக்கில் யோகம்!
Published on
Updated on
2 min read

பதஞ்சலி முனிவர் வாக்கு, காயம், மனம் ஆகிய வற்றினால் உண்டாகும் குற்றங்களை நீக்குவதற்காக முறையே சப்த சாத்திரத்தையும், மருத்துவ சாத்திரத்தையும், யோக சாத்திரத்தையும் படைத்துள்ளார். இம்மூன்றினுள் யோக சாத்திரத்தையே தற்காலத்தார் யோகா (Yoga)  என்கின்றனர்.

"யோகம் என்றால் சமாதி அல்லது சேர்தல்' என்றும் கூறுகிறார் பதஞ்சலி முனிவர். அதாவது ஜீவாத்மா பரமாத்மாவுடன் ஒன்றுபடுதல் என்று கூறுவர். யோகம் என்பதற்குச் சித்தமாகிய மனத்தில் இருக்கின்ற எண்ணங்கள் அடங்குவது என்று பிறிதொரு பொருளையும் அறிஞர் உரைப்பர். சித்தமாகிய எண்ணங்கள் அடங்கினால் ஆன்மாவாகிய புருடன் தன்நிலையில் இருப்பான்.

பதஞ்சலி முனிவர் சித்தம் ஐந்து படிகளை உடையது என்பார். அவற்றுள் முதல் படிக்குச் சிப்தம் (சஞ்சலமான நிலை) என்றும், இரண்டாம் படிக்கு மூடம் (ஒன்றும் அறியாத நிலை) என்றும், மூன்றாம் படிக்கு விப்தம் (சொற்ப காலம் சஞ்சலம் மிகுகாலம் சஞ்சலம் இல்லை) என்றும், நான்காம் படிக்கு ஏகாக்கிரம் (கடவுள் பொருளையே கருதியிருப்பது) என்றும், ஐந்தாம் படிக்கு நிருத்தம் (விருத்தி சூனியமான நிலை) என்றும் பெயர் வைத்துள்ளார். இவ்வைந்தினுள் முதல் மூன்று படிகளைத் தாண்டிய நிலையில் பின்னே உள்ள இரண்டு படிகளைச் சார்ந்திருப்பது யோகம்.

தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் புறத்திணையியலில் வாகையின் சிறப்பிலக்கணத்தைப் பொது நிலையில் கூறுகின்ற நூற்பாவில் (75) "நாலிரு வழக்கின் தாபத பக்கமும்' என்ற பகுதிக்கு உரையாசிரியர் நச்சினார்க்கினியர் எழுதியுள்ள உரை எண்வகை யோகங்களை உணர்த்துமாறு உள்ளது. நச்சினார்க்கினியரின் உரைச்சாரம் வருமாறு:

"அறிவர் கூறிய ஆகமத்தின் வழிநின்று வீடுபெற முயல்வாருக்கு உரியவாகிய எண்வகை மார்க்கத்துத் தவம் புரியும்' என்று எழுதிவிட்டு, "வழக்கு என்றதினால் இந்நாலிரண்டும் தவம் புரிவார்க்கு உரியனவும், தவம் செய்து யோகம் செய்வார்க்கு உரியனவும்' என இரு பிரிவாகப் பொருள் கொண்டுள்ளார். நச்சினார்க்கினியர் உரைத்த இரண்டு பிரிவுகளுள் இரண்டாம் பிரிவாகிய யோகம் செய்வார்க்கு உரியன எட்டாகும்.

 அவ்வெட்டாவன: இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி. மேலும், நச்சினார்க்கினியர் இயமம், நியமம் முதலிய எண்வகை யோகங்களின் விளக்கத்தை உரைச் சூத்திரத்தால் விளக்கி, அத்துடன் அவ்வெட்டுள் பிராணாயாமம் என்பதற்கு வழிநிலை என்றும், பிரத்தியகாரத்திற்குத் தொகைநிலை என்றும், தாரணைக்குப் புரைநிலை என்றும், தியானத்திற்கு நினைவு என்றும், நல்ல தமிழ்ப் பெயர்களைக் குறித்துள்ளார். இவற்றுள் பிராணாயாமம் என்பதை வாயுவை அடக்கல் என்ற புதிய தமிழ்ச் சொல்லாலும் அழைக்கலாம்.

கோரக்கநாதரின் சீடராகிய ஸ்ரீவாத்மாராம யோகீந்தீரர் அருளிச்செய்த நூல் ஹடயோகப் பிரதீபிகையாகும். இந்நூலினுள் யோக விளக்கமும் ஆசனங்களின் வகைகளும், செயல் முறைகளும் கூறப்பெற்றுள்ளன. வசிட்டர், மச்சேந்திரர் ஆகிய ஞானிகள் எண்பத்து நான்கு வகையான ஆசனங்களை ஏற்றுக் கொண்டுள்ளனர் என்பதையும், நூற்றி இருபத்து நான்கு ஆசனங்களையும் இந்நூல் வகைப்படுத்தியுள்ளது.

அட்டாங்க யோகம் எட்டுள் இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம் ஆகிய ஐந்தைப் புறப்பகுதியாகவும், தாரணை, தியானம், சமாதி ஆகிய மூன்றை அகப்பகுதியாகவும் அறிஞர் கொள்வர். இக்குறிப்பிட்ட அகப்பகுதி மூன்றுமே மிகமிகச் சிறந்த பகுதியாகும்.

திருமூலர் மூன்றாம் தந்திரத்தில் "அட்டாங்கயோகம்' என்ற தலைப்பில் இயமம் முதலிய எண்வகை யோகங்களை விரிவாகக் கூறியுள்ளளார். நச்சினார்க்கினியர் பொருளதிகார உரையில் உரைச்சூத்திரம் வாயிலாக எண்வகை யோகங்களைக் கூறியுள்ளார். திவாகர முனிவர் திவாகர நிகண்டில் அட்டாங்க யோகத்தில் இயமம், நியமம் முதலிய எட்டினையும் கூறி இயமம், நியமம் ஆகிய இரண்டினை மட்டும் விவரித்துள்ளார். ஏனைய ஆறு யோகங்களைக் கூறும் நூற்பா இருந்து அழிந்தன போலும்! ஆனால், பிங்கல முனிவர் பிங்கல நிகண்டில் எட்டுவகை யோகங்களைக் கூறி எட்டினையும் விவரித்துள்ளார்.

சிவப்பிரகாசர் அருளிய "பெருந்திரட்டு' என்னும் ஞானநூல் "யோகப்பணை' என்னும் தலைப்பின்கீழ் எட்டுவகை யோகங்களைக் கூறியுள்ளது. அவ்வெட்டுவகை யோகங்களின் பெயர்கள் மற்ற யோக நூல்களின் பெயர்களிலிருந்து மாறுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பதஞ்சலி முனிவர் அருளிய (பதிப்பு-1924) யோக சூத்திரம் என்னும் ஞானநூலின்கண் அரிய பல நுணுக்கமான செய்திகள் உள்ளன. கோரக்கநாதரின் சீடராகிய ஸ்ரீவாத்மா ராமயோகீந்திரர் அருளிச் செய்த "ஹடயோகப் பிரதீபிகை' என்னும் நூலும் அரிய பல செய்திகள் அடங்கிய யோக நூலாகும்.

-முனைவர் அ.சிவபெருமான்

இன்று சர்வதேச "யோகா' தினம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com