

பாம்புக்குக் காதுகள் இல்லை; எனினும் அது, அதிர்வினை அறியும் உணர்விகளை (Receptors) உடையது என்பர் விலங்கியலார். இதற்கு மாறாகப் பாம்பினது கண்ணே செவியாகவும் செயல்படுகிறது என்னும் நம்பிக்கை பரவலாகவுள்ளது. இதனடியாகக் "கட்செவி' என்னும் பெயர் ஏற்பட்டதை இலக்கியங்களில் காண்கிறோம். இப்பெயர் வழக்கு எப்போது, எந்த நூலில் முதலில் இடம்பெற்றது என்று தெரியவில்லை. சங்க நூல்களிலோ, சிலம்பு, மணிமேகலை போன்ற காப்பியங்களிலோ "கட்செவி' என்னும் பெயர் காணப்படவில்லை. கம்பனிலும் (6:19:42) கலிங்கத்துப் பரணியிலும் (5:4) கட்செவி இடம் பெற்றுள்ளது.
""கட்செவிப் பகுவாய்ப்
பணம்விரி துத்திப் பொறிகொள்
வெள்ளெயிற்றுப்
பாம்பணி பரமர்தங் கோயில்''
என்பது கருவூர்த்தேவரின் திருவிசைப்பா. கட்செவியெடுத்தாட்டலாம் என்பது தாயுமான சுவாமிகளின் பாடல் (தேசோமயானந்தம், பா. 8) அடி. இப்படிக் கட்செவி என்று வருமிடங்களிலெல்லாம், கண்ணையே காதாகவுடைய பாம்பு என்றே பொருள் கூறப்பட்டுள்ளது.
எனினும், பாம்புக்குச் செவிகள் இல்லை என்று தெரிந்து அதனைப் பேயாழ்வார் தம்பாடலில் பதிவு செய்திருப்பதாகத் தோன்றுகிறது. அவரின் மூன்றாம் திருவந்தாதிப் பாசுரம் (31) ஒன்றில்
செவி தெரியா நாகம் என்றொரு தொடர் காணப்படுகிறது. குருடனைக் கண் தெரியா (இல்லா) தவன் என்று கூறுவது போலப் பாம்புக்குக் காதுகள் இல்லை என்பதை உணர்த்தும் தொடர் இது. "கண்ணே செவியாகச் செயல்படும்' என்னும் கருத்துக்கு இங்கே சிறிதும் இடமில்லை. ஆயினும், இதற்கு உரை கூறியவர்கள் வழிவழியாகச் சொல்லப்பட்டு வந்த பழைய நம்பிக்கையின் அடிப்படையில், ""கண்ணையே காதாகக் கொண்ட பாம்பு'' என்றே எழுதியுள்ளனர். ""கண்ணாலே காண்பதும் செய்து, கேட்பதும் செய்யா நின்றது'' என்று திருவாய்மொழி (ஈடு.பி.3:8:1) உரையும் குறிப்பிடுகிறது.
நாட்டார் மரபில் அழுந்தப்பதிந்த ஒரு நம்பிக்கை, எழுத்திலக்கியத்தில் இடம்பிடித்துக் காலவோட்டத்தில் நீங்காமல் நிலைபெற்று விடுகிறது என்பதற்கு - ஒரு சோற்றுப் பதமான உதாரணம் இது.
பாம்பு, அரவம் முதலான சொற்களைப் போலக் "கட்செவி' என்பது இன்று வழக்கில் இல்லை. பழைய நூல்களுக்குள்ளேயே அது முடங்கிவிட்டது. ஆயினும், இன்றைய அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் அடையாளமாக உருப்பெற்றுள்ள "வாட்ஸ்அப்' (WhatsApp) என்பதைக் குறிப்பதற்குக் "கட்செவி அஞ்சல்' என்னும் சொல்லை "தமிழ்மணி' பகுதியில் (சொல் புதிது-34) தந்து, அதையே தினமணி தொடர்ந்து கையாள்வது குறிப்பிடத்தக்கது.
கண்ணால் பார்த்தும் செவியால் கேட்டும் அறியத்தக்க செய்தியை உணர்த்துதற்குச் இச்சொல் மிகவும் பொருத்தமானதே. உண்மைக்கு மாறாகவுள்ள பழைய பொருண்மையைக் கைவிட்டுக் காலத்திற்கேற்ப புதுப் பொருண்மையில் இச்சொல் எடுத்தாளப்பெறுவது வரவேற்கத்தக்கது.
-முனைவர் ம.பெ.சீனிவாசன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.