விருந்து - ஒளித்தலும் வைத்தலும்

விருந்து உபசரித்தல் என்பது தமிழரின் வாழ்வியலில் முக்கியமான ஒன்று. புறநானூற்றில் மொத்தம் 12 இடங்களில் நேரடியாக 'விருந்து' எனும் சொல் இடம்பெற்றுள்ளது.
விருந்து - ஒளித்தலும் வைத்தலும்

விருந்து உபசரித்தல் என்பது தமிழரின் வாழ்வியலில் முக்கியமான ஒன்று. புறநானூற்றில் மொத்தம் 12 இடங்களில் நேரடியாக "விருந்து' எனும் சொல் இடம்பெற்றுள்ளது. அதில் 266, 316 ஆகிய இரு பாடல்களில் இடம்பெறும் தன்மையினூடாக அறியவரும் தமிழரின் விருந்தோம்பல் பண்பை எண்ணி வியப்படையலாம்.

266-ஆவது பாடல், சோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னியைப் பெருங்குன்றூர் கிழார் பாடியதாக அமைந்துள்ளது. புலவன், பொருள் வேண்டி அம்மன்னனிடம் செல்கிறான். அம்மன்னனும் அவனை வரவேற்று, வேளா வேளைக்கு என்னனென்ன வேண்டுமோ அனைத்தையும் பலநாள் தந்து உபசரிக்கிறான். ஆனால், அவன் வந்ததற்கான நோக்கத்தை மன்னன் அறியவில்லை. உடனே அப்புலவன், ""நான் உன்னிடம் உபசரிப்பு வேண்டி வரவில்லை என்பதை நீ என்னைக் கண்டதும் அறியவில்லை போலும். நான் என்னொருவனுக்கான ஆதாயத்தைத் தேடிவரவில்லை. நான் விருந்தினரை வரவேற்று உபசரிக்கும் பண்புடையவன். ஆனால், இப்பொழுது அவ்வுபசரிப்பினைத் தொடர என்னிடம் பொருள் இல்லை. அந்நிலையை நீ மாற்றுவாய் என்றுதான் இங்கு வந்தேன்'' என்கிறார்.

வல்லே களைமதி யத்தை யுள்ளி

விருந்துகண் டொளிக்கும் திருந்தா வாழ்க்கைப்

பொறிப்புண் ருடம்பின் தோன்றியென்

அறிவுகெட நின்ற நல்கூர் மையே (புறம். 266,10-13)

ஒருவரைக்கண்டு ஒருவர் ஒளிதலுக்கான பல்வேறு சமூகவியல் காரணங்கள் உண்டு. ஆனால், பெருங்குன்றூர் கிழார் சொல்வது கவனிக்கத்தக்கது. "நான் என்னை நாடிவரும் விருந்தினரை உபசரிக்கும் திறன் அற்றுப்போனதால் இங்கு வந்தேன். ஆனால், நீ என் ஒருவனை மட்டும் உபசரிக்கிறாய். என்நிலை அறியவில்லை நீ' என்கிறார்.

கள்ளிற்கடையத்தான் எனும் புலவர் மேலும் சற்று வித்தியாசமான விருந்து தரும் முறையினைப் பதிவு செய்துள்ளார். புறநானூறு 316-ஆவது பாடல், வெண்ணாகனார் மீது பாடியது. பாணன் ஒருவன் வெண்ணாகனாரிடம் பரிசில் பெற்றுத் திரும்புகிறான். எதிரில் வறுமையோடு இன்னொரு பாணர்க்குழு வருகிறது. அவர்களை எதிர்நோக்கி, "நாங்கள் வெண்ணாகனாரின் பாணர்கள். அவனிடம் பரிசில் பெற்றுத் திரும்புகிறோம். எனவே, நீங்களும் அவனிடம் சென்றால் பரிசில் பெறலாம்' என்கிறான்.

அதைக்கேட்ட பாணன் ""வெண்ணாகனார், வறுமையில் இருப்பவர் என்று ஏற்கெனவே தான் அறிந்தது' என்கிறார். உடனே அவன் ""ஆம் நீ சொல்வது சரிதான். இன்று வேற்று நாட்டின் மீது படையெடுத்து வெற்றி கண்டுள்ளான். அவ்வெற்றியால் அவன் கொணர்ந்த பொருள் ஏராளம். சரி, வறுமையில் இருக்கும் பொழுது அவன் உபசரிக்கமாட்டான் என்று உனக்கு யார் சொன்னது? அவன் வறுமையில் இருந்தபொழுது நம்மைப் போன்ற இரவலன் ஒருவன் வந்தான். அவ்விரவலனுக்குப் பரிசளிக்கப் பொருள் இல்லை. உடனே தன் பழைய இரும்பு வாளை அடகு வைத்து அதனால் பெற்றப் பொருளை அவ்விரவலனுக்கு ஈந்தான். அத்தகைய தன்மை படைத்தவன் எம் வெண்ணாகனார்'' என்கிறான்.

அப்பொழுதும் அவன் மனம் நம்ப மறுக்கிறது. உடனே தன் இருங்கோட்டு சீறியாழினை அவன் முன் நிறுத்தி, ""நான் இதுவரை சொன்னது உண்மையே. இதோ இந்த யாழின் மீது சத்தியம் செய்து சொல்கிறேன் (புறம். 316, 4-7)'' என்கிறான். என்னே! தமிழரின் விருந்தோம்பல் பண்பு!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com