நலங்கிள்ளியின் சூளுரையும் நடைவீரமும்

நலங்கிள்ளி எனும் சோழ மன்னன் உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்து வந்தான். அதே சோழர் குலத்தில் தோன்றிய காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி என்னும் மன்னன் நலங்கிள்ளியின் மேல் படை எடுத்து வந்தான்.
நலங்கிள்ளியின் சூளுரையும் நடைவீரமும்

நலங்கிள்ளி எனும் சோழ மன்னன் உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்து வந்தான். அதே சோழர் குலத்தில் தோன்றிய காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி என்னும் மன்னன் நலங்கிள்ளியின் மேல் படை எடுத்து வந்தான். இதையறிந்த நலங்கிள்ளி, மிகவும் கோபங்கொண்டு போருக்கெழும்போது சூளுரைத்தான். புறநானூற்றில் ஒரு பாடல் நலங்கிள்ளியின் சூளுரைத்தலை விளக்குகிறது. சூளுரையில் நலங்கிள்ளியின் கொடை வீரம், படை வீரம், நடை வீரம் மூன்றும் விளங்குகின்றன.

""நெடுங்கிள்ளி, போர் தொடுத்ததற்குரிய காரணம், என் அரசைக் கவர்வதே அவன் கருத்தாக இருந்தால் அவன் படை எடுத்துவர வேண்டியதில்லை. அதனால் என்னரசைக் கவர முடியாது. அவன் மெல்ல வந்து என் நல்லடிகளைத்தொழுது "உன் நாட்டை ஈவாய்' என்று கேட்டால் மகிழ்ச்சியுடன் நாட்டைக் கொடுப்பேன். நாடு மட்டுமல்ல, என் இனிய உயிராயினும் கொடுப்பேன்'' என்று கூறினான்.

போர்க்களத்தில் பகைவர்க்கஞ்சாது போரிட்டு வெற்றி பெறுவதோ, வீரமரணம் அடைவதோ படைவீரம் என்று கூறுவர். ஆனால், தன்னிடம் வந்து பரிசு கேட்கும் புலவர்க்கோ, இரவலர்க்கோ தன்னிடம் உள்ள பொருளின் அளவையும் தன் எதிர்காலத்தையும் எண்ணாமல் - இல்லை என்று கூறாமல் கொடுப்பது கொடைவீரம் எனப்படும்.

தன் மேல் படை எடுத்து வந்த நெடுங்கிள்ளி பற்றி, ""என் வீரத்தையும் ஆற்றலையும் அறியாமல் என் வீரத்தை இகழ்ந்த அறிவில்லாத நெடுங்கிள்ளி உறங்கிக் கொண்டிருக்கும் புலியை இடறிய குருடன் எப்படிப் புலியிடமிருந்து தப்பிச்செல்ல முடியாதோ, அதுபோல் நெடுங்கிள்ளியும் அழிவது திண்ணம்'' என்று கூறினான். தன்னை உறங்கிக் கொண்டிருக்கும் புலியுடனும் நெடுங்கிள்ளியைப் புலியை இடறிய குருடனுடனும் ஒப்பிட்டுக் கூறினான் என்பதை, ""ஆற்ற லுடையோ'' என்ற பாடல் விளக்குகிறது.

ஒருவேளை நெடுங்கிள்ளியின் மேல் போர் புரிந்து அவனை அழிக்க முடியாவிட்டால், உள்ளத்தில் காதலில்லாமல் பொருள் மேல் உள்ள பற்றினால் காதல் கொண்டவர்கள் போல் அன்பு காட்டும் பொருட்பெண்டிரது பொருந்தாத புணர்ச்சி இடை என் மாலை துவள்வதாக என்ற கருத்தை,

""கழைதின் யானை காலகப் பட்ட

வன்றிணி நீண் முளை போலச் சென்றவன்

வருந்தப் பொரே னாயின் பொருந்திய

தீதி னெஞ்சகத்துக் காதல் கொள்ளாப்

பல்லிருங் கூந்தல் மகளிர்

எல்லா முயக்கிடை குழைகவென்றாரே''

என்ற பாடலடிகள் அவன் நடை வீரத்தை விளக்குகிறது. நடை என்றால் நடத்தை - ஒழுக்கம் என்னும் பொருள் தரும். நலங்கிள்ளியின் இப்பாடலில் அவன் நடைவீரம் விளங்குகிறது. இப்பாடலில் பொருட்பெண்டிருடன் சேர்வது ஆண்மைக்கே - வீரத்திற்கே மிகவும் இழிவு தரும் என்னும் நலங்கிள்ளியின் உள்ளக்கிடக்கை விளங்குகிறது.

இப்பாடல்களின் மூலம் கொடை வீரம், படை வீரம், நடை வீரத்துடன், புவியரசரான நலங்கிள்ளி கவியரசராகவும் விளங்கினார் என்பதை அறியலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com