மகாபாரதத்தின் "பாவிகம்'!

வடநூலார், அணியை நூற்றுக் கணக்கான பிரிவுகளாக வகுத்து ஆய்ந்துள்ளனர். அக் கூறுபாடுகள் தமிழுக்கும் தேவை என்று உணர்ந்து அங்கிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
மகாபாரதத்தின் "பாவிகம்'!
Published on
Updated on
2 min read

வடநூலார், அணியை நூற்றுக் கணக்கான பிரிவுகளாக வகுத்து ஆய்ந்துள்ளனர். அக் கூறுபாடுகள் தமிழுக்கும் தேவை என்று உணர்ந்து அங்கிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. தண்டியலங்காரம், மாறன் அலங்காரம் என அவ்வகை நூல்கள், பொருளதிகாரப் பிரிவுக்குள் இருந்தவை, தனித்து அணி இலக்கணமாக விளங்குகின்றன. அவ்வுரைகளில் தகுந்த எடுத்துக்காட்டுச் செய்யுள்களோடு அச் செய்யுள்களுக்கான பொருளும் கூறப்பட்டுள்ளன.

தண்டி அலங்காரத்தே, அணி இலக்கணப் புறனடை கூறப்பட்டதன் பின்னே "பாவிகம்' என்ற அணி காட்டப்பட்டுள்ளது. இது, காட்டப்பட்ட அணிகளுக்கு எல்லாம் மாறுபட்டது. ஆதலின், புறனடைக்குப் பின்னாக இடம் பெறுகிறது. ""பாவிகம் என்பது காப்பியப் பண்பே'' (தண்டி, சூத்திரம் 90) என்கிறது தண்டியலங்காரம். ஒரு காவியத்துள் அடங்கியுள்ள, அஃதாவது அந்நூல் எழுவதற்கான நுண் பொருளை, அந்நூல் முழுவதும் படித்து இன்னதென்று காண்பதே பாவிக அணியாகும்.

மகாபாரதத்தின் பாவிகம்

வில்லி பாரதத்துள் ஆரணிய பருவத்தினுள் பஞ்ச பாண்டவர் திரெüபதியொடு வனம் உறைந்த வரலாறு சொல்லப்படுகிறது. அங்கு திரெüபதி ஓர் அரு நெல்லிக்கனியை மரத்தில் கண்டு, பறித்துத் தருமாறு வேண்ட, அருச்சுனன் தன் வில்லை வளைத்து அக்கனியைப் பறித்து, அவளிடம் தந்தான். அப்பொழுது அங்கு வந்த கண்ணன், இக்கனி இம்மரத்தின் அடியில் தவம் செய்யும் அமித்திரன் என்ற முனிவருக்கு உரியதாகும். அதனைக் கவர்ந்த குற்றத்தால், அவர் விழித்தால் பழி வந்து சேருமே என்றான்.

"அப்பழி வாராதிருக்க வழி காட்டுக' என்று அனைவரும் கண்ணனை வேண்ட, அவன் ஒவ்வொருவரும் தத்தம் மனத்துள் அடக்கிவைத்துள்ள கரவைத் தெரிவிப்பின் அப்பழம் மீண்டும் மரத்தில் பொருந்தும் என்றான். அதன்படிப் பாண்டவர் ஐவரும் தத் தம் மனக் கரவுகளைச் சொல்லச் சொல்லப் பழமும் கொஞ்சம் கொஞ்சமாக மரத்தை நெருங்கியது.

இறுதியாகத் திரெüபதி தன் மனக் கரவைச் சொல்லலானாள்.

""ஐம்புலன் களும்போல் ஐவரும் பதிகள்

ஆகவும் இன்னம்வே றொருவன்

எம்பெருங் கொழுநன் ஆவதற்கும் உருகும்

இறைவனே எனதுபேர் இதயம்

அம்புவி தனில்பெண் பிறந்தவர் எவர்க்கும்

ஆடவர் இலாமையான் அல்லால்

நம்புதற் குளதோ?'' என்றனள் வசிட்டன்

நல்லற மனைவியே அனையாள்

(வில்லிபாரதம்: பழம் பொருந்து சருக்கம், பா- 21)

திரெüபதியின் சொல்லால் நெல்லிக்கனி முற்றாக மரத்தொடு பொருந்தியது. திரளெபதிக்கு ஆறாவதாக அவள் மனம் கருதிய கொழுநனாக அமைந்தவன் எவன்?

1. குந்திதேவிக்குத் தலைமகனாம் கர்ணன் என்பார் ஒரு சாரார். 2. திரௌபதி முந்தைப் பிறவியில் ஒரு முனிவனுக்குப் பத்தினியாக இருந்துள்ளாள். அம்முனிவனே என்பார் ஒரு சாரார். 3. இவ்விருவரும் அல்லர் என்று மூன்றாவதாக ஒருவனைக் காட்டுவர். அவனையே திருக்குறளும் காட்டுகிறது என்பதுதான் வியப்பு!

திரௌபதி முந்தைப் பிறவியில் அரசிளங்குமரியாக நளாயினியாக இருந்தனள். அப்பொழுது, மெüற் கல்யன் என்ற முனிவர் அரசனிடம் தனக்கு நளாயினியை மனைவியாக்கித் தரும்படி வேண்டினன். வயதாலும் அறிவாலும் தவசித்தியாலும் முதிர்ந்த அவருக்கு எப்பதில் சொல்வது என்று தயங்கி, பின் தன் மகளின் விருப்பப்படியே நளாயினியை அம்முனிவருக்குத் தாரை வார்த்துக் கொடுத்தான் அரசன். ஆனால், மணவிழாவில் இவர் கிழ முனிவராகவே இருந்தார். இதில் ஏதோ நுட்பம் இருக்கிறது என்ற கருத்து உள்ளவளாக, நளாயினி தன் கணவருக்குரிய சேவை செய்வதில் சிறந்தே விளங்கினாள்.

மெüற் கல்யன், குஷ்டரோகியாக மாறினார். அப்போதும் அவள், அவரது உடல் புழுக்களைக்கூட யாதோர் அருவருப்போ வெறுப்போ இன்றிச் செவ்வையாக நீக்கித் தகுந்த பணிவிடை செய்தாள். இறுதியில் அவளிடம், "என் சோதனையில் நீ வென்றாய்' என்று பாராட்டி நல்லுடல் நிலைக்கு மாறினார். அப்போது அவர் ஐமுகத்தை யுடையராய் ஒளிர்கின்ற முனிவராகத் தோன்றினார். அதன்பின் இருவரும் நாள் முழுவதும் போகம் துய்த்தனர்.

நளாயினிக்கு இறுதி வந்தது. இறந்தபின் அடுத்த பிறவியில் இந்திர சேனையாகப் பிறந்தாள். முன்னைச் சொந்தம் காரணமாக அவரையே தனக்குக் கணவராக அமையுமாறு வேண்டினாள். ஆனால், அவரோ "நாம் இருவரும் அளவுக்கு மீறிப் போகம் துய்த்துவிட்டோம், அதனால் நின்னை இப்பிறவியில் மனைவியாகக் கொள்ளேன்' என்று மறுத்துவிட்டார்.

இந்திரசேனை அம்முனிவரையே கணவராக அடைவதற்காகக் கடுந்தவம் செய்தாள். அத்தவத்தின் பயனால் அடுத்த பிறவியில் திரௌபதியாகவும், அவ்வைந்துமுக முனிவர் பாண்டவர் ஐவராகவும் பிறந்தனர். அவளது முன் பிறப்பின் தவ நிறைவால் திரௌபதிக்குக் கணவராக ஐவரும் அமைந்தனர். (வில்லிபாரதம் திரௌபதி மாலையிட்ட சருக்கம்). எனவே, திரௌபதி, நளாயினியாம் பிறவியில் உற்ற கணவரையே இப்பிறவியில் உற்றுள்ளனள் ஆதலின், அம் முனிவனைக் கருதினள் எனல் பொருந்துவதன்று.

ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயம்இன்றே

மெய்யுணர்வு இல்லா தவர்க்கு

(அதி.36 மெய்யுணர்தல்: குறள்-354)

இக்குறளின்படி ஐயுணர்வும் என்பதியர் (கணவன்மார்) என்கிறாள் திரௌபதி, ஆயினும் மெய்யுணர்வு எய்தினால் அல்லவா அவளுக்குப் பயன் ஏற்படும்? அத்தகை மெய்யுணர்வு நாயகனாக அவளுக்கு அமைபவன் கண்ணனே!

கண்ணன் அவளுக்கு அண்ணன் முறையினன் ஆவனே! அவ்வாறு இருக்க, அவள் அவனைக் கருதினள் என்பது பொருந்துமா? அவன், அவளுக்கு மெய்யுணர்வு நாயகன் ஆவன். மெய்யுணர்வின் நாயகன் என்பவன் மலிந்த மனித இச்சைக்கு உரியன் அல்லன். மேலான ஆன்மிக ஒன்றுதலுக்கு உரியனாம். அத்தகைய நாயகனாகக் கண்ணன் இருந்தபடியால்தான் அமித்திரன் பழி இவர்களுக்கு நேராதபடி நெல்லிக்கனி மீண்டும் மரத்தில் பொருந்துவதற்கு ஏற்ற வழிகாட்டினான் கண்ணன்.

மகாபாரதத்தில் அனைத்திற்கும் காரணனான சூத்திரதாரியாகவே கண்ணன் அமைகிறான்.

திரெüபதியின் சபத நிறைவேற்றமே மகாபாரதம். நிறைவேறச் செய்வித்தவன், அவளுக்கு மெய்யுணர்வு நாயகனாகும் கண்ண பெருமானே. மேற்குறிப்பிட்ட குறள் (354) மகாபாரதத்தின் பாவிகமாக அமைந்து நலம் செய்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com