தமிழ் நெடுங்கணக்கில் ஸ, ஷ, ஜ, க்ஷ, ஹ ஆகிய ஐந்து எழுத்துகளைச் சேர்த்துக் கொள்வதா? வேண்டாமா? என்ற விவாதம் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. பாலைவனத் தீக்கோழி தன்னைத் துரத்தி வருபவர்களிடமிருந்து தப்பிக்க, தன் தலையை மணலில் புதைத்துக்கொண்டு, தான் அவர்களிடமிருந்து தப்பிவிட்டதாக நினைத்துக் கொள்ளுமாம். அதுபோலத்தான் இருக்கிறது தமிழறிஞர் சிலரின் கடும் தமிழ்ப்பற்று!
தொல்காப்பியர் தமிழ் மொழியின் தூய்மையைக் காக்க, தொல்காப்பிய நூற்பா - "வடசொற்கிளவி- 884'லின் மூலம் விதி வகுக்கக் காரணம் என்ன? அப்போதே வடமொழிச் சொற்கள் தமிழர்களின் பேச்சு வழக்கில் கலக்கத் தொடங்கிவிட்டன என்பதை உணர்ந்து தமிழின் தனித்தன்மையைக் காக்க வடசொற்களைத் தமிழ் ஒலி வடிவுக்கேற்ப மாற்றி, தமிழ் வடிவாக்கி இலக்கியம் படைக்க வேண்டும் என்று விதி வகுத்தார் என்றுதான் கொள்ள வேண்டும்.
இம்மரபு 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை, பலரால் தமிழ்ச் செய்யுள் வடிவில் இலக்கியம் படைத்த காலக்கட்டம் வரை காப்பாற்றப்பட்டு வந்துள்ளது. சுருக்கமாகச் சொன்னால், எப்பொழுது தமிழில் இலக்கியப் படைப்பு செய்யுளிலிருந்து உரைநடைக்கு மாறிற்றோ அன்றிலிருந்து மேற்கூறிய ஐந்து எழுத்துகளும் சரளமாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.
இப்படி, சம்ஸ்கிருதம் போலவும் ஆங்கிலம் போலவும் தமிழில் புதிய ஒலி வடிவங்களுக்கேற்ப எழுத்துகளை மாற்ற முற்பட்டால், க, ச, ட, த, ப முதலான எழுத்துகளுக்கு, வர்க்கங்களையும் (ஓ, எ, எட்) உருவாக்க வேண்டிய நிலை ஏற்படும். அம்மாதிரி உருவான எழுத்துகளோடு தமிழ் எழுதப்பட்டால், வடுகு
தெலுங்கானது போல், ஹளகன்னட புதுக் கன்னடம் ஆனது போல், சேரலர் நாடு கேரள நாடாகி அங்கு பேசிய தமிழ் மலையாளம் ஆனது போல் தமிழும், பழைய தமிழ், புதிய தமிழ் என்று ஒன்று இரண்டாகப் பெருகி வளரத் தலைப்படும்.
ஏற்கெனவே தமிழ்நாட்டில் வளர்ந்த இசைத் துறை கர்னாடக இசை என்று மாறிவிட்டது. காரணம், 72 மேளகர்த்தா இராகங்களுள் பலவற்றைத் தமிழ் நெடுங்கணக்கில் (ஸ, ஷ, ஜ, க்ஷ, ஹ நீக்கி) எழுத முடியாது.
அதேபோல் அறிவியலில் பல புதுமைகள் ஒவ்வொரு நாளும் நிகழ்ந்த வண்ணமுள்ளன. இவற்றை அடுத்தத் தலைமுறைக்குக் கொடுப்பது எப்படி என்று ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டிய நேரம் இது.
-சுப. தனுஷ்கோடி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.