கற்பனை நயம்

"அழகுக்கு யாரே அழகு செய்வார்' என்று கூறுவதுண்டு. அழகுக்கு அழகைக் கூட்டினால் இன்னும் மெருகேறும் அவ்வழகு. அத்தகு அழகுமிக்க தலைவி ஒருத்தி, தன் தலைவனைக் காண வனம் வருகிறாள்.
கற்பனை நயம்

"அழகுக்கு யாரே அழகு செய்வார்' என்று கூறுவதுண்டு. அழகுக்கு அழகைக் கூட்டினால் இன்னும் மெருகேறும் அவ்வழகு. அத்தகு அழகுமிக்க தலைவி ஒருத்தி, தன் தலைவனைக் காண வனம் வருகிறாள்.

அவள் கண்களோ வேலினை வெல்வதாக உள்ளன; அவை மீனையும் நினைக்கத் தோன்றுகின்றன. வாய் இதழ்களோ சிவந்த கொவ்வைக் கனிக்கு ஒப்பானவையாய்க் கண்ணுக்கு விருந்தாய் இருக்கின்றன.

வனத்தில் தலைவியைக் கண்ட தலைவன் வியப்பில் ஆழ்ந்து, ""உடல்முழுமையும் நல்லணிகலன்களை அணிந்துள்ளாய். அவ்வாறிருக்க, மூக்கில் மட்டும் கருநிறங் கொண்ட குறையுடைய குன்றிமணியை அணிந்துள்ள காரணம் என்னவோ? எனக்குச் சொல்வாயாக'' என்று கேட்கிறான்.

தலைவி முறுவலித்து நாணங்கொண்டு தன்னொரு கையால் கண்களை மறைக்கிறாள். மற்றொரு கையால் தன் வாயை மறைக்கிறாள். ""இப்பொழுது பாருங்கள்; ஒளிமிக்க வெண்முத்தையல்லவா யான் அணிந்திருக்கிறேன்'' என்கிறாள்.

தலைவி கூற வந்த கருத்து இதுதான்: கண்களில் கருநிற மை பூசியதால் முத்தின் மேல்பாகம் கருப்பாகக் காட்சியளிக்கிறது. சிவந்த வாயிதழ்களின் சிவப்பை முத்தின் கீழ்பாகம் பிரதிபலிக்கிறது. எனவே, மூக்கானது குன்றிமணியை அணியாகக் கொண்டுள்ளது போலுள்ளது.

என்னே புலவரின் கற்பனை நயம்! இத்தகைய கற்பனை வளம் மிக்கப் பாடலை வழங்கிய புலவரின் பெயர் தெரியாமலே பாடலை மட்டும் எடுத்துக் கொண்டது, "விவேக சிந்தாமணி' எனும் நூல். பாடல் வருமாறு :

""கொல்உலை வேல்க யல்கண்

கொவ்வையங் கனிவாய் மாதே!

நல்லணி மெய்யில் பூண்டு

நாசிகா பரண மீதில்

சொல்லரில் குன்றி தேடிச்

சூடியது என்னோ என்றான்

மெல்லியல் கண்ணும் வாயும்

புதைத்தனள் வெண்முத் தென்றாள்.''

-இரெ. இராமமூர்த்தி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com