சொல் தேடல் -33

பேச்சு பல வகை. நேரடியாகக் கருத்தை நறுக்குத் தெறித்தாற்போல் சொல்பவர் சிலர். தென்றலும் சிறுதுளியும்போல் இனிமையாகத் தெரிவிப்பவர் சிலர். வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல் குத்தலாகப் பேசுபவர் சிலர். புறமெங்கும் இன்பம் நிறைய நகைச்சுவையாக உரையாடுபவர் சிலர். பணிவும் தணிவும் தோன்றச் சொற்களைப் பயன்படுத்துபவர் சிலர்.
Published on
Updated on
2 min read

பேச்சு பல வகை. நேரடியாகக் கருத்தை நறுக்குத் தெறித்தாற்போல் சொல்பவர் சிலர். தென்றலும் சிறுதுளியும்போல் இனிமையாகத் தெரிவிப்பவர் சிலர். வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல் குத்தலாகப் பேசுபவர் சிலர். புறமெங்கும் இன்பம் நிறைய நகைச்சுவையாக உரையாடுபவர் சிலர். பணிவும் தணிவும் தோன்றச் சொற்களைப் பயன்படுத்துபவர் சிலர்.

திருமாலடியார் ஒருவர் மற்றொருவரைத் தம் இல்லத்திற்கு அழைக்கும் அழகே அழகு! ஒருவர் பெருஞ்செல்வர்; அரண்மனை போன்ற வீட்டில் வாழ்பவர். மற்றொருவர் வடகலையும் தென்கலையும் தேர்ந்த அறிஞர்; உபய வேதாந்தி குடிசை போன்ற சிறுவீட்டில் இருப்பவர். செல்வர் புலமையாளரைத் தம் இல்லத்திற்கு எப்படி அழைக்கிறார் தெரியுமா? ""தேவரீர் திருமாளிகையில் எல்லோரும் பாங்காக உள்ளார்களா? தாங்கள் அடியேன் சிறுகுடிலுக்கு எழுந்தருளிப் பெருமைப்படுத்த வேண்டும்'' என்கிறார். அறிஞரின் குடிசை திருமாளிகையாம்! செல்வரின் மாளிகை சிறுகுடிலாம்!

காவலர்கள் வீடுபுகுந்து திருடிய திருடனைக் கைதுசெய்து அழைத்துச் சென்றார்கள். அவன் எதைக் கேட்டாலும் வாயைத் திறக்கவே இல்லை. மறுநாள் திருடு கொடுத்தவரிடம் காவலர்கள் திருடு குறித்த எல்லாத் தகவல்களையும் தெரிவித்தார்கள். ""அந்தக் கல்லுளி மங்கனிடமிருந்து எப்படி உண்மையை வரவழைத்தீர்கள்?''

என்கிறார் பொருளைப் பறிகொடுத்தவர். ""லேசா ரெண்டு தட்டு தட்டினோம்; எல்லாத்தையும் கக்கிட்டான்'' என்கிறார்கள் திறமையான காவலர்கள். உண்மையில் அவனுக்கு நல்ல அடி உதை! ஆனால், அவர்களோ மென்மையாக இரண்டு அடி கொடுத்ததாகத் தெரிவிக்கிறார்கள்.

ஒருவர் வறுமை தாங்காமல் மும்பைக்குப் பிழைக்கச் சென்றார். மின்சாரக் கருவிகள் விற்கும் கடையில் வேலை செய்தார்; வணிக நுட்பங்களைத் தெரிந்துகொண்ட பின்பு தனியே கடையொன்று வைத்தார்; பெருஞ்செல்வரானார். அவர் தம் வளர்ச்சியைப் பற்றித் தெரிவிக்கும்போது, ""மும்பைக்குப் போனேன் நாலுகாசு சேர்ந்தது'' என்கிறார். அவர் பெருஞ்செல்வத்தை நாலு காசு என்று மிகக் குறைவாகச் சொல்கிறார்.

இப்படித் தாழ்த்திப் பேசும் பேச்சினை ஆங்கிலத்தில் Litotes என்பர். இதற்குரிய வேர்ச்சொல் தெளிவு, சிறிது, குறைவு என்று பொருள் தரும் Litotesஎன்னும் கிரேக்கச் சொல்லாகும். இஃது அணி வகைகளுள் ஒன்று. இதற்குத் தாழ்த்திப் பேசுவது, எதிர்மறைகளால் உடன்பாட்டை வற்புறுத்துவது என்னும் இருமுகங்கள் உள்ளன. மிக நன்று என்பதனை, மோசம் இல்லை என்றும், சிறந்த பாடகரை மோசமான பாடகர் அல்லர் என்றும் கூறுவது எதிர்மறையால் சொல்வதற்கு எடுத்துக்காட்டுகள்.

சிலர் கருதுவதுபோல் இது வசைச்சொல்லோ அவப்பேச்சோ அன்று. இதனை வஞ்சப்புகழ்ச்சி அணியாகவோ உருவக அணியாகவோ கொள்ளவும் இயலாது. சந்திரா மனோகரனும் வேறு சிலரும் தாழ்த்திப் பேசுவது என்பதை முதன்மையாகக் கொண்டு இதனைக் குறைவு நவிற்சி என்றும், ப. இரா. இராசஅம்சன் தாழ்த்திக் கூறல் என்றும், தமிழ்க்கூத்தன் முரணடக்கி(இ)ணக்கி உரை, எதிரிணக்கவுரை என்றும் குறிக்கலாம் என்கின்றனர். சொற்களில் தாழ்வும் குறைவும் இருந்தாலும் உணர்த்தும் பொருளில் தாழ்வு இல்லை; எதிர்நிலையே உள்ளது. ஆதலின் இதனினும் பொருத்தமான சொல்லைச் சிந்திக்கலாம். தண்டியலங்காரம் பழிப்பதுபோன்று மேன்மை புலப்படும்படி சொல்வதனைப் புகழாப் புகழ்ச்சி என்கிறது. அதுபோலத் தாழ்ச்சி போன்ற பான்மையில் அமைந்த சொற்களால் தாழாத தன்மையைப் புலப்படுத்துவதால் இதனைத் தாழாத் தாழ்ச்சி என்று குறிக்கலாம்.

இச்சொல்லின் இன்னொரு முகமான எதிர்மறை வாய்பாட்டால் கூறுவது என்பதனைக் கருத்தில் கொண்டு கா.மு. சிதம்பரம் எழுதியுள்ள குறிப்பு அழகானது; பொருத்தமானது. ""தமிழில், படிக்க என்று கூறுவதை விதிமுகக் கூற்று என்றும், படியாமல் இராதே என்று கூறுவதை எதிர்முகக் கூற்று என்றும் உரையாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். தமிழ் இலக்கியங்களில் இத்தகை எதிர்முகக் கூற்றுச் சொற்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. சான்றாக, தீது என்பதனை நன்றன்று என்றும் நல்லவள் என்பதனைத் தீதிலள் என்றும் குறிப்பிட்டுள்ளதைக் குறிப்பிடலாம்'' என்கிறார். இது சரியே. எதிர்மறைக் கூற்றாக அமைவது Litotes ஆகும். ஆனால், எல்லா எதிர்மறைக் கூற்றுகளும் Litotes ஆகா. உடன்பாட்டுப் பொருளை மிகவும் வற்புறுத்தும் வகையில் அமைவனவே அதில் அடங்கும். சிலம்பில் கோவலன் மாதவியின் இரண்டாவது கடிதத்தைப் பார்த்தவுடன் "தன் தீதிலள்' என்கிறான். அக்கூற்று கோவலன் அவளைப் பிழையற்றவள் என்று கருதுவதாகக் காட்டுகிறதேயன்றி மிகச் சிறந்தவள் என்று பாராட்டுவதாகக் காட்டவில்லை. அஃது எதிர்முகக்கூற்று; ஆனால் Litotes என்று கொள்ள இயலாது.

இதனைக் கா.மு.சிதம்பரம் எதிர்மறைமுகக் கூற்று, எதிர்முறை மொழி என்றும், மன்றவாணன் எதிர்நவிற்சி, எதிர்முரண் நவிற்சி என்றும், என்.ஆர்.ஸத்யமூர்த்தி ஈரெதிர் நவிற்சி என்றும் குறிக்கலாம் என்கின்றனர். இம்மூவர் தந்துள்ள தமிழாக்கங்களும் சொல்லின் பொருளைப் பெரிதும் உணர்த்துவன. எனினும், ஈரெதிர் நவிற்சி என்பது அதன் அமைப்பை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளதால் பொருத்தமாகத் தோன்றுகிறது. கூற்று என்பதனினும் நவிற்சி செவிக்கினிமையாக உள்ளது.

Litotes - தாழாத் தாழ்ச்சி அல்லது ஈரெதிர் நவிற்சி

அடுத்த வாரத்திற்குரிய சொல் : Palindrome

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com