அனலுக்குத் தாமரை மலருமா?

உலகம் அறிந்த மலர்களுள் ஒன்று தாமரை. இதுவே நம் நாட்டின் தேசிய மலர். தாமரை காலையில் மலரும். மாலை நேரத்தில் குவியும். பகல் நேரம் உண்டாவதற்குக் காரணமான ஒளியையும், வெப்பத்தையும் தருகிறான் கதிரவன்.
அனலுக்குத் தாமரை மலருமா?
Updated on
1 min read

உலகம் அறிந்த மலர்களுள் ஒன்று தாமரை. இதுவே நம் நாட்டின் தேசிய மலர். தாமரை காலையில் மலரும். மாலை நேரத்தில் குவியும். பகல் நேரம் உண்டாவதற்குக் காரணமான ஒளியையும், வெப்பத்தையும் தருகிறான் கதிரவன்.

கதிரவன் தரும் வெப்பத்தைப் போல, நெருப்பும் வெப்பத்தைத் தருகிறது. நெருப்பின் வெப்பத்தால் தண்ணீரைக் கொதிக்கவைத்து, அந்த வெந்நீரையே நெருப்பில் ஊற்றினால் நெருப்பு அணைந்துவிடுகிறது. "தண்ணீர் வெந்நீராயினும் நெருப்பை அணைக்கு மன்றோ?' என்பது பழமொழியாகும்.

குளிர்ச்சி இன்பத்திற்கும், வெம்மை துன்பத்திற்கும் உவமைகளாக்கப்படுகின்றன. கதிரவனின் வெம்மையால் எலும்பில்லாத புழுக்கள் இறந்துபடும் (குறள்-77) என்கிறார் திருவள்ளுவர்.

அப்படிப்பட்ட கதிரவன் வெம்மையால் தாமரை மலர்கள் மலர்கின்றன. தாமரை மலர்வதற்குக் காரணம் சூரியனின் வெம்மையே, ஆதலால் வெம்மையைத் தருகின்ற செந்நிற நெருப்பினைத் தாமரை மொட்டின் அருகில் கொண்டு சென்றால் அது மலருமா? மலராது; மாறாகக் கருகிவிடும். இது அறிவியல் உண்மை. சூரியனிடமிருப்பதும் வெம்மை; நெருப்பிலிருப்பதும் வெம்மை (சூடு). ஆனாலும் தாமரை சூரியனின் வெம்மைக்கே மலருகிறது. இந்த அறிவியல் உண்மையை ஆழ்வார்களுள் ஒருவரான குலசேகர ஆழ்வார், ஓர் உவமை மூலம் "பெருமாள் திருமொழி'யில் பாடியுள்ளார். மலைநாட்டுத் திருப்பதியான திருவித்துவக்கோடு என்ற திருத்தலத்தில் உள்ள திருமாலைப் பாடுங்கால்,

செந்தழலே வந்துஅழலைச் செய்திடினும், செங்கமலம்

அந்தரஞ்சேர் வெங்கதி ரோற்கு அல்லால் அலராவால்,

வெந்துயர்வீட் டாவிடினும் வித்துவக்கோட் டம்மா!உன்

அந்தமில்சீர்க் கல்லால் அகங்குழைய மாட்டேனே!

(5.6)

என்கிறார். என் துயரங்களைப் போக்கிக்கொள்ள உலகியல் வழிமுறைகள் பல இருப்பினும், அவற்றை நான் ஏற்கமாட்டேன். என் துன்பத்தை அளிப்பவரும் திருமாலே! ஆதலால் அவரே அதை நீக்க வேண்டும். எவ்வளவு துயரங்களுக்கு ஆட்பட்டாலும் திருவித்துவக்கோட்டுப் பெருமாளே! உங்களின் எல்லையில்லா அருங்குணங்களுக்கு அல்லாமல் வேறெதற்கும் என் நெஞ்சம் உருகாது. வானத்தில் ஒளிர்ந்து வெப்பம் தருகின்ற கதிரவனைக் கண்டு மலரும் செந்தாமரை மலர்போல், என் உள்ளத்தின் நிலை உள்ளது என்கிறார்.

-ம.நா.சந்தானகிருஷ்ணன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com