இந்தவாரம் கலாரசிகன்

தமிழுக்கும், தமிழினத்துக்கும் பெருமை தேடித் தந்த, உலகத்தைத் தமிழகத்தின் பெருமைகளை அண்ணாந்து பார்க்க வைத்த ஜப்பானியத் தமிழ் அறிஞர் நொபுரு கரஷிமா கடந்த வியாழக்கிழமை ஜப்பானில் காலமானார். நியாயமாகப் பார்த்தால், தமிழகத்திலிருந்து
இந்தவாரம் கலாரசிகன்

தமிழுக்கும், தமிழினத்துக்கும் பெருமை தேடித் தந்த, உலகத்தைத் தமிழகத்தின் பெருமைகளை அண்ணாந்து பார்க்க வைத்த ஜப்பானியத் தமிழ் அறிஞர் நொபுரு கரஷிமா கடந்த வியாழக்கிழமை ஜப்பானில் காலமானார். நியாயமாகப் பார்த்தால், தமிழகத்திலிருந்து வெளிவரும் எல்லா நாளிதழ்களிலும் வெள்ளிக்கிழமை தலைப்புச் செய்தியாக இல்லாவிட்டாலும் முதல் பக்கச் செய்தியாக இடம் பெற்றிருக்க வேண்டிய நொபுரு கரஷிமாவின் மறைவு, பல பத்திரிகைகளில் (இதில் தினமணியும் அடக்கம்) வெளிவரவில்லை. அந்தச் செய்தியை பிரசுரித்த ஓரிரு பத்திரிகைகளுக்கு எனது நன்றியுடனான தமிழ் வணக்கம்!

தனது 82-ஆவது வயதில் காலமான நொபுரு கரஷிமாவின் தமிழ்ப் பயணம், 55 ஆண்டுகளுக்கு முன்னால் சோழர்கள் பற்றிய கல்வெட்டுகள் குறித்த அவரது கட்டுரையிலிருந்து தொடங்கியது. பெளத்த மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்குத் தனது கல்லூரி நாள்களில் இந்தியா குறித்து ஏற்பட்ட ஈர்ப்பு தென்னிந்தியாவை அறிமுகப்படுத்தியது. டோக்கியோ, டாய்சோ பல்கலைக்கழகங்களில் கிழக்காசிய வரலாற்றுத் துறை பேராசிரியராகப் பணியாற்றிய அவருக்குத் தெற்காசியா பற்றியும், குறிப்பாகத் தென்னிந்தியா பற்றியும் இருந்த புரிதல் அளப்பரியது.

நொபுரு கரஷிமாவின் முதல் கட்டுரையே, காவிரி டெல்டா பகுதியிலுள்ள அல்லூர், ஈசானமங்கலம் கிராமங்கள் குறித்த சோழர் காலக் கல்வெட்டுகள் குறித்ததாக இருந்தது. அதற்குப் பிறகு, அவர் கல்வெட்டு ஆராய்ச்சியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். விஜயநகரப் பேரரசின் கீழ் தென்னிந்தியா, தென்னிந்தியாவில் விஜயநகரக் கல்வெட்டுக்களும், நாயக்கர்கள் காலமும், பழமையிலிருந்து இடைக்காலம் - தென்னிந்திய சமுதாயத்தின் மாற்றம் எனப் பல அற்புதமான புத்தகங்களை அவர் எழுதியிருக்கிறார். இவைதான் நமது பழம் பெருமைகளை உலகுக்குப் பறைசாற்றும் ஆவணங்கள்.

கடந்த ஆண்டு வெளியான அவரது புத்தகம் "தென்னிந்திய சரித்திரம்'(A concise history of South India). . கல்வெட்டுகளின் மூலம் பல்வேறு புள்ளிவிவரங்களைத் தேடிப் பிடித்து அதன் அடிப்படையில் தென்னிந்திய சரித்திரத்தை, குறிப்பாக, தமிழர்தம் சரித்திரத்தை ஆவணப்படுத்திய பெருமை முனைவர் நொபுரு கரஷிமாவுக்கு உண்டு.

கடந்த சில ஆண்டுகளாக, 12-ஆம், 13-ஆம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட சமய இயக்கங்கள் குறித்த ஆய்வில் ஈடுபட்டிருந்தார் நொபுரு கரஷிமா. தஞ்சைப் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கல்வெட்டியல் துறையின் முன்னாள் தலைவர் வை. சுப்புராயலு, முனைவர் சண்முகம் ஆகியோருடன் இணைந்து, சமயம் சார்ந்த கல்வெட்டுகளின் அடிப்படையில், "தென்னிந்தியாவின் இடைக்கால சமய இயக்கங்கள்' என்கிற ஆய்வுப் பணியில் தனது தள்ளாத வயதிலும் ஈடுபட்டிருந்தார் அவர்.

தனிநாயகம் அடிகளைப் போலவே, முழு ஈடுபாட்டுடன் உலகத் தமிழ் ஆய்வு மன்றத்தை வழிநடத்திச் சென்ற பெருமையும் முனைவர் நொபுரு கரஷிமாவைச் சாரும். 1989-இல் இருந்து 2010-ஆம் ஆண்டு வரை அதன் தலைவராகவும் இருந்த முனைவர் நொபுரு கரஷிமாவின் வழிகாட்டுதலில்தான் 1995-இல் தஞ்சையில் 8-ஆவது உலகத் தமிழ் மாநாடு நடந்தது.

1968-இல் சென்னையில் நடந்த இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டின்போது, வெளிநாட்டு அறிஞர்களில் ஒருவராக 35 வயது இளைஞராக முனைவர் நொபுரு கரஷிமா கலந்து கொண்டதும், பார்வையாளர்கள் பகுதியிலிருந்து கல்லூரி மாணவர்களான நானும் நண்பர்களும் தூரத்திலிருந்து அவரை வியந்து பார்த்துக் கொண்டிருந்ததும் இப்போதும் பசுமையாக நினைவில் நிற்கிறது. அன்றைய பிரதமர் மன்மோகன் சிங்குடன் ஜப்பான் சென்றிருந்தபோது இந்திய அரசின் சார்பில் அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கிய நிகழ்ச்சியில் பங்குபெறும் பாக்கியமும் எனக்கு வாய்த்தது. ஆனால் சந்தித்துப் பேச முடியவில்லை.

தமிழை நேசித்த, தமிழினத்தை நேசித்த, தமிழனுக்கு உலகளாவிய மரியாதையை ஏற்படுத்தித் தந்த ஜப்பானியத் தமிழ் அறிஞர் நொபுரு கரஷிமாவின் மறைவு, தமிழகத்திற்கு மிகப்பெரிய இழப்பு. அத்தனை பல்கலைக்கழகங்களும், கல்வி நிலையங்களும் இவருக்கு அஞ்சலி செலுத்தக் கடமைப்பட்டவை. தமிழ் அமைப்புகள் இவருக்காக இரங்கல் கூட்டங்களை நடத்தி, இவரது பங்களிப்பை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.

தமிழக முதல்வருக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்: அடுத்த சட்டப்பேரவைக் கூட்டத்தில், முனைவர் நொபுரு கரஷிமாவுக்குத் தமிழக சட்டப்பேரவை இரங்கல் தீர்மானம் நிறைவேற்றுவதன் மூலம், தமிழனின் பெருமையை ஆவணப்படுத்திய அந்த ஜப்பானியப் பெருமகனின் பங்களிப்பை நாம் பதிவு செய்வதாக இருக்கும்!

நாகைப் பதிப்புத் தொடக்க விழாவுக்காகச் சென்றிருந்தபோது, காரைக்காலில் பேராசிரியர் சாயபு மரைக்காயரை சந்திக்க வேண்டும் என்று விரும்பினேன். நேரம் வாய்க்கவில்லை. காரைக்கால் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் முதுகலைத் தமிழ்த் துறைத் தலைவராகவும், அதற்கு முன்பு புதுச்சேரியில் பத்தாண்டுகளுக்கும் மேலாகக் கல்லூரிப் பேராசிரியராகவும் பணியாற்றியவர் சாயபு மரைக்காயர்.

சந்திக்க முடியாவிட்டால் என்ன? அவருடைய படைப்புகள் அனைத்தையும் அனுப்பித் தந்திருந்தார். அவற்றில் சிலவற்றை புத்தக மதிப்புரைக்குக் கொடுத்து விட்டு, இரண்டு புத்தகங்களை மட்டும் எடுத்து வைத்துக் கொண்டேன். "பாரதிதாசன் வாழ்விலே' என்கிற புத்தகத்தையும், "பாரதிதாசன் கட்டுரைகள்' என்கிற புத்தகத்தையும் நான் தேர்ந்தெடுக்கக் காரணம் உண்டு. புதுவையில் பணியாற்றிய சாயபு மரைக்காயருக்கு, பாரதிதாசனின் குடும்பத்தினருடனும், அவருடன் தொடர்புடையவர்களுடனும் நெருங்கிப் பழகும் வாய்ப்பு இருந்திருக்கும் என்பதால், பல புதிய செய்திகள் அந்தப் புத்தகங்களில் இருக்கக் கூடும் என்கிற நம்பிக்கைதான் காரணம்.

"பாரதிதாசன் வாழ்விலே' புத்தகத்தில் பல்வேறு சம்பவங்களைப் பதிவு செய்து, புரட்சிக் கவிஞரைப் பல்வேறு கோணங்களில் எடுத்துக்காட்டியிருக்கிறார். "பாரதிதாசன் கட்டுரைகள்' ஓர் அற்புதமான தொகுப்பு. புரட்சிக் கவிஞரின் பார்வை பற்றிய முழுமையான புரிதலை ஏற்படுத்துகிறது. பாரதிதாசன் பற்றி "கலைமாமணி' மு. சாயபு மரைக்காயர் எழுதியிருக்கும் ஏனைய புத்தகங்களையும் படிக்க வேண்டும் என்கிற பேரவாவைத் தூண்டி விட்டிருக்கின்றன இந்த இரண்டு புத்தகங்களும்.

புரட்சிக் கவிஞர் குறித்து ஆய்வு செய்பவர்களும், பேச்சாளர்களும் கட்டாயம் படித்திருக்க வேண்டிய புத்தகங்கள் இவை இரண்டும் என்பது எனது பரிந்துரை.

"புதுகைத் தென்றல்' மாத இதழில் வெளிவந்திருக்கும் கவிஞர் அரு. கஸ்தூரியின் "இலஞ்சம்' என்கிற தலைப்பிலான கவிதை இது-

நீட்டிய அந்தக் கை

வெட்டியான் அடித்தும்

மடங்க மறுத்தது

வாங்கி வாங்கியே

பழக்கப்பட்ட அந்தக் "கை'!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com