சுடுமண் கலை!

சங்க இலக்கியத்தில் சுடுமண் கலை பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. இதனால் மண்ணால் உருவங்களைச் செய்யும் கலையை அக்கால மக்கள் அறிந்திருந்தனர் என்பதை புறநானூறு, நற்றிணை, அகநானூறு ஆகிய இலக்கியங்களின் வாயிலாக அறிய முடிகிறது.
சுடுமண் கலை!
Published on
Updated on
1 min read

சங்க இலக்கியத்தில் சுடுமண் கலை பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. இதனால் மண்ணால் உருவங்களைச் செய்யும் கலையை அக்கால மக்கள் அறிந்திருந்தனர் என்பதை புறநானூறு, நற்றிணை, அகநானூறு ஆகிய இலக்கியங்களின் வாயிலாக அறிய முடிகிறது.

திணிமணல் செய்வுறு பாவை (புறம் 243:1-3)

வரிமணற் புனை பாவை (புறம் 11:2-4)

தருமணற் கிடந்த பாவை (அகம் 165-13)

இளம் பெண்கள் பொழுது போக்காக ஆறு, கடற்கரைப் பகுதிகளில் பொம்மைகள் செய்து விளையாடினர். அவ்வாறு செய்யப்படும் பொம்மைகள் பொதுவாக பாவை எனவும், புனைபாவை எனவும் அழைக்கப்பட்டன.

பாவை செய்யப்பட்ட மணலைக் குறிக்க திணிமணல், வரிமணல்(புறம்) தருமணல் (அகம்) என்னும் சொற்கள் இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளன. பொம்மை செய்வதற்கு ஏற்ற நிலையில் உள்ள களி மண்ணையே இச்சொற்றொடர்கள் குறிப்பதை உணரலாம்.

ஆற்றில் அல்லது கடற்கரையில் காணப்படும் சிறந்தவகைக் களிமண்ணில் இப்பாவைகள் செய்யப்பட்டன என்பதை நற்றிணைப் பாடல், ""மகளிர் வார் மணல் இழைத்த வண்டற் பாவை'' (பா.191: 2:3) எனத் தெளிவுபடுத்துகிறது.

வண்டல் மண்ணால் செய்த பிறகு இவை பூக்கொண்டு அலங்கரிக்கப்பட்டதாகவும் அறிய முடிகிறது. இவை யாவும் சூளையில் இட்டுக் சுடப்படாமல், வெயிலில் மட்டுமே உலரவைக்கப்பட்ட பொம்மைகள் என்றே கொள்ள வேண்டும். இப்பொம்மைகள் எல்லாம் விளையாட்டுப் பயன் என்ற ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு செய்யப்பட்டவையாகும்.

காதலர்கள் ஓட்டிவந்த தேரினால் இப்பாவைகள் சிதைவிற்கு உள்ளானதையும் (அகம்-320) அகநானூறு குறிப்பிடுகிறது. சுடுமண் பொம்மைகளால் அலங்கரிக்கப்பட்ட வீடுகள் பற்றி ""சுடுமண் ஓங்கிய நெடுநிலை மனை தொறும்'' என்று மணிமேகலை(3:127) குறிப்பிடுகிறது. சிலப்பதிகாரம், சுடுமண் பொம்மைகளால் அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தை (28-44) சுட்டுகிறது. இம்மண்டபம் "மண்ணீட்டரங்கம்' என்று அழைக்கப்பட்டதாக அறிகிறோம். அரச முத்திரைகள் பச்சைக் களிமண்ணால் இடப்பட்டன. விற்பனைப் பொருள்கள் மீது சுங்கவரித் தீர்வையிட்டதன் அடையாளமாக சோழ அரசின் புலிச்சின்னம் பொறிக்கப்பட்டதைப் பட்டினப்பாலை (134-5) கூறுகிறது.

-சீ.குறிஞ்சிச்செல்வன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com