அதிசயமும் அற்புதமும்!

திருவாசகம் என்பது இதயத்தின் மலர்ச்சி. முத்தி நெறி விளக்கம். இறைச் செய்தியை மொழியால் வெளிப்படுத்துவது. தமிழ்ப் பண்பாட்டின் தனிப்பிழிவு. இறைவன் பெருமை, இறை - உயிர் உறவு, இறை அனுபவம் ஆகிய மூன்றையும் கவிதை மொழியில் உள்ளம் நெகிழ எடுத்துரைப்பது.
அதிசயமும் அற்புதமும்!

திருவாசகம் என்பது இதயத்தின் மலர்ச்சி. முத்தி நெறி விளக்கம். இறைச் செய்தியை மொழியால் வெளிப்படுத்துவது. தமிழ்ப் பண்பாட்டின் தனிப்பிழிவு. இறைவன் பெருமை, இறை - உயிர் உறவு, இறை அனுபவம் ஆகிய மூன்றையும் கவிதை மொழியில் உள்ளம் நெகிழ எடுத்துரைப்பது.

இறைவனே குருவாக வருகிறான் என்பதைச் சைவ

மரபில் முதன் முதலாகச் சொல்வது திருவாசகமே. இறைவனே அவர் வாழ்வின் மையம். தமிழ் நூல்களில் முதன் முதலாக அருளியல் அனுபவ உண்மைகள் முழுதும் அமையப் பிறந்தது திருவாசகம். பக்தி அருளியலைச் சார்ந்தது திருவாசகம் என்பர். சைவ சமயக் குரவர்களுள் மணிவாசகர் மட்டுமே நூல் முழுவதையும் தமது "

அருளியல் அனுபவ' வெளியீட்டிற்குப் பயன்படுத்தியிருக்கிறார்.

மூன்று வினைச் சொற்கள்:

ஆட்கொள், அறு, அருள் ஆகிய மூன்று வினைச்சொற்களும் திருவாசகத்தில் தனிச் சிறப்புடையவை. மணிவாசகர் - இறைவன் உறவை இம்மூன்று சொற்களில் அடக்கி விடலாம். திருவாசகத்தின் சாரமே இம்மூன்று சொற்கள்தாம். திருவாசகத்தில் அதிகமாகப் பயின்று வரும்சொல் "ஆட்கொள்ளுதல்' என்பது. தமிழ்நாட்டுச் சைவ மரபில் முதலில் இச்சொல்லைக் கையாண்டவர் காரைக்கால் அம்மையார். அம்மையார் தொட்டு வள்ளலார் முடிய வாழையடி வாழையென வந்த மரபில் இச்சொல் தனித்த இடத்தைப் பெறுகிறது.

சிவமாக்கி எனையாண்ட, சிவன் எம்பிரான் என்னை ஆட்கொண்டான் என இறைவனது ஆட்கொள்ளும் தன்மை பலமுறை நூலில் பேசப்படுகிறது. ஆட்கொள்ளுதல் என்பதற்கு இறைவன் மணிவாசகருக்குச் "சீவன் முத்தி' அளித்தான் என்று பொருள் கொள்ளுவர்.

சிவபெருமான் அவரைத் திருப்பெருந்துறையில் ஆட்கொண்டான், அவருடைய எல்லாத் தளைகளையும் அறுத்தான், அவருக்குப் பேரின்பம் அருளினான்.

அதிசயமும் அற்புதமும்:

திருவாசகத்தில் அதிசயம் (அதிசயப்பத்து), அற்புதம் (அற்புதப்பத்து) என்னும் இரண்டு சொற்களை தனிப்பட்ட முறையில் மணிவாசகர் கையாண்டுள்ளார். அதிசயம், அற்புதம் ஆகிய இரண்டுமே இதுவரை அமையாத, நிகழாத புது அனுபவம். ஆனால், இரண்டுக்கும் இடையே வேறுபாடு உண்டு.

இவ்வனுபவம் இன்னது என விளக்க முடியுமானால், அது அதிசயம்! இறைவன் அவரை ஆட்கொண்டு சிவனடியாரோடு சேர்த்ததை அதிசயம் என்கிறார். "அண்ணல் ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே' என்கிறது அதிசயப்பத்து. அவ்வனுபவம் இன்னது என விளக்க முடியாமல் போனால் அது அற்புதம். "அற்புதம் விளம்பேனே' என இருமுறையும், "அற்புதம் அறியேனே' என எட்டுமுறையும் அற்புதப்பத்து என்ற பகுதியில் இடம்பெறுகிறது.

இறைவன் அவரை ஆட்கொண்டு அடியாரோடு கூட்டியது அதிசயம்; அவரை ஆண்டு அவருக்குப் பேரின்ப அனுபவம் கொடுத்தது அற்புதம். ""பெருமறை தேடிய அரும்பொருள் அடியேனை அடித்து அடித்து அக்காரம் முன்தீற்றிய அற்புதம் அறியேனே'' என்பது அற்புதப் பத்து. எனவே ஆட்கொள்ளுதல், அறுத்தல், அருளுதல் ஆகிய மூன்று செயல்களில் ஆட்கொள்ளுதல் என்பது முதலில் அதிசயமாகவும் பின்னர் அற்புதமாகவும் அடிகளுக்கு அமைந்தது. ஏனெனில், முதலில் அவரால் அதை விளக்க முடிந்தது, ஆனால், பின்னர் விளக்க முடியாமல் போயிற்று. அறுத்தல் என்பது அவரால் அறிந்துகொள்ள முடிந்தது. எனவே, அது அதிசயமாக அமைந்தது. அருளுதல் என்பது விளக்க முடியாமல் போனது, எனவே அது அற்புதம் ஆயிற்று. அவரைச் சிவபெருமான் ஆண்டு அடியார் கூட்டத்தில் சேர்த்தான்; அது அதிசயமாக அமைந்தது. இவ்வாறு அதிசயம், அற்புதம் ஆகிய இரு சொற்களை நுட்பமாகப் பயன்படுத்தி வேறுபடுத்துகிறார் மணிவாசகர்.

-முனைவர் தி. நா.பிரணதார்த்தி ஹரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com