முத்தான முத்தம்

நவமணிகளில் ஒன்று முத்து. "துன்னரிய தரளம், நித்திலம், ஆரம், முத்து ஆம்' என்று முத்தின் பெயர்களைக் கூறுகிறது ஆசிரிய நிகண்டு. அபிதான சிந்தாமணி என்னும் கலைக்களஞ்சியம்
முத்தான முத்தம்

நவமணிகளில் ஒன்று முத்து. "துன்னரிய தரளம், நித்திலம், ஆரம், முத்து ஆம்' என்று முத்தின் பெயர்களைக் கூறுகிறது ஆசிரிய நிகண்டு. அபிதான சிந்தாமணி என்னும் கலைக்களஞ்சியம் முத்துச் சனிக்கும் (பிறக்கும்) இடங்கள் என ஒரு பட்டிலைத் தருகிறது. இதழோடு இதழ் சேர்த்து இனிக்க இனிக்கத் தருவதும் பெறுவதும் முத்தம். என்றாலும், முத்தைக் குறிக்கும் இன்னொரு சொல்தான் முத்தம்.

""முறிமேனி, முத்தம் முறுவல், வெறிநாற்றம்

வேல்உண்கண் வேய்த்தோ ளவட்கு'' (குறள்.1113)

என்று திருக்குறள் தலைவன், தலைவியின் நலம்புனைந்துரைக்கிறான். கடவுளரையும் பெரியோரையும் குழந்தையாகப் பாவித்துப் பாடும் பிள்ளைத்தமிழ் என்னும் சிற்றிலக்கியத்தில், முத்தப்பருவம் என ஒன்றுண்டு. பகழிக்கூத்தர் என்ற புலவர் இயற்றிய திருச்செந்தூர்ப் பிள்ளைத் தமிழின் முத்தப்பருவப் பாடல், பல்வேறு இடங்களில் பிறக்கும் முத்துக்களைப் பற்றிக்கூறி, "அந்த முத்துக்களுக்கு எல்லாம் முருகா! உன் கனிவாய் முத்தம் ஈடாகுமோ, முத்தம் தருவாய் முதல்வா' என்று சொல்கிறது.

"இடைவிடாது எந்நேரமும் ஓசை முழங்கும் பெருங்கடலில் அடுத்தடுத்துக் கரைமோதும் அலைகள், வலம்புரி சங்குகளை வாரிக் கடற்கரையில் இறைக்கின்றன. அந்தச் சங்குகளின் சூல் முற்றி முத்துக்களாக உதிர்கின்றன. அந்த முத்துக்களுக்கு விலை கூறிவிடலாம். பருத்த யானைகளின் பிறைநிலா போல் வளைந்த தந்தங்களில் பிறக்கும் தரளத்திற்கு விலையுண்டு. தழைத்து வளர்ந்து முற்றிச் தலைசாயும் செந்நெல்லில் பிறக்கும் குளிர்ந்த முத்துக்கும் விலையுண்டு. கடல் நீரை முகந்து இந்தப் பார் செழிக்கப் பொழியும் கார்மேகத்தில் தோன்றும் முத்துக்கும் விலையுண்டு. நீலத் திரைகடல் எந்நேரமும் தன்னில் பிறந்த முத்துக்களை எல்லாம் வாரி வாரிக் கடற்கரையில் குவிக்கின்ற பெருமைமிகு திருச்செந்தூரில் எழுந்தருளியுள்ள செந்திலாதிபனே, உன் செங்கனிவாய் முத்தத்திற்கு விலையுண்டோ? உன் கொவ்வைச் செவ்வாயின் குமிழ்முத்தம் தந்தருள்வாய்' என்று வேண்டும் பகழிக் கூத்தரின் திருச்செந்தூர்ப் பிள்ளைத் தமிழ்ப் பாடல் இதுதான்:

""கத்துந் தரங்கம் எடுத்தெறியக்

கடுஞ்சூல் உளைந்து வலம்புரிகள்

கரையில் தவழ்ந்து வாலுகத்திற்

கான்ற மணிக்கு விலையுண்டு;

தத்துங் கரட விகடத் தடத்

தந்திப் பிறைக்கூன் மருப்பில்விளை

தரளந்தனக்கு விலையுண்டு;

தழைத்துக் கழுத்து வளைந்த மணிக்

கொத்துஞ் சுமந்த பசுஞ்சாலிக்

குளிர் முத்தினுக்கு விலையுண்டு;

கொண்டல் தரு நித்திலர் தனக்குக்

கூறுந்தரமுண்டு; உன் கனிவாய்

முத்தந் தனக்கு விலையில்லை

முருகா முத்தந் தருகவே!

முத்தஞ் சொரியும் கடல் அலைவாய்

முதல்வா முத்தந் தருகவே!

-கண்ணையன் தட்சிணாமூர்த்தி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com