இந்தவாரம் கலாரசிகன்

சுவாமி தயானந்த சரஸ்வதியின் மறைவு எத்தகைய ஈடு செய்ய முடியாத இழப்பு என்பது அவருடன் பழகியவர்களுக்கு மட்டுமே தெரியும். பிரதமர் நரேந்திர மோடியிலிருந்து நடிகர் ரஜினிகாந்த் வரை அவரைத் தங்களது மானசீக குருவாக ஏற்றுக்கொண்டிருப்பது காரணமில்லாமல் அல்ல.

சுவாமி தயானந்த சரஸ்வதியின் மறைவு எத்தகைய ஈடு செய்ய முடியாத இழப்பு என்பது அவருடன் பழகியவர்களுக்கு மட்டுமே தெரியும். பிரதமர் நரேந்திர மோடியிலிருந்து நடிகர் ரஜினிகாந்த் வரை அவரைத் தங்களது மானசீக குருவாக ஏற்றுக்கொண்டிருப்பது காரணமில்லாமல் அல்ல.

அவர் வேதத்தில் கரை கண்டவர். சம்ஸ்கிருதத்தில் அசாத்தியமான புலமை உடையவர். வைதீக சாஸ்திரங்கள் எல்லாம் கற்றறிந்தவர். இப்படி இருப்பவர்களுக்குப் பொதுவாக தமிழ்ப்பற்று இருப்பது இல்லை. சுவாமி தயானந்த சரஸ்வதியின் தனிச்சிறப்பு, அவர் தமிழ் இலக்கியத்திலும் அதே அளவு புலமையும், பற்றும், நாட்டமும் கொண்டவராக இருந்தார் என்பதுதான்.

ஒருமுறை, சம்ஸ்கிருதம் படிக்கவில்லையே என்கிற எனது குறையை வெளிப்படுத்தியபோது, ""அதனால் என்ன, தமிழ் படித்திருக்கிறீர்களே...'' என்று சொல்லிச் சிரித்தார். பன்னிரு திருமுறைகளிலிருந்தும், பிரபந்தங்களிலிருந்தும் மேற்கோள்கள் காட்டி அவர் பேசுவதைக் கேட்டால் வியப்பில் சமைந்து போவோம்.

ரிஷிகேஷில் கங்கைக் கரையில் அமைந்த சுவாமி தயானந்த சரஸ்வதியின் "ஆர்ஷ வித்யா' குருகுலத்தில் போய் தங்குவது என்பதே ஒரு சுகானுபவம். அதிலும் சுவாமிஜி அங்கே இருக்கும்போது தங்குகின்ற பாக்கியம் கிடைத்துவிட்டால் அதைவிடக் கொடுப்பினை வேறு எதுவுமே இருக்க முடியாது.

சுவாமிஜியை டாக்டர் எல்.பி. தங்கவேலுவுடன் கோயம்புத்தூரில் தரிசனம் செய்யச் சென்றிருந்தபோது, அப்போதுதான் மருத்துவமனையிலிருந்து உடல்நிலை தேறி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். "மல்டிப்பிள் ஆர்கன் பெயிலியர்' அதாவது இதயம், கல்லீரல், நுரையீரல், சிறுநீரகம் என்று பல்வேறு உறுப்புகள் பழுதுபட்ட அபாயமான சூழலிலிருந்து மீண்டு வந்திருந்தார் சுவாமிஜி. அந்த நிலையிலும் அவர் உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்து டாக்டர் தங்கவேலுவுக்கே ஆச்சரியம். மரணத்தின் வாயிற் கதவைத் தட்டிப்பார்த்துவிட்டுத் திரும்பி வந்து சிரிக்கிறார் என்று வேடிக்கையாகச் சொன்னார்.

சுவாமிஜியின் அசாத்திய மனோபலம் அவரை மரணத்தை எதிர்கொண்டு வெற்றிகொள்ள முடிந்தது எப்படி வியப்பளிக்கிறதோ, அதேபோல அவரது மரணமும் வியப்பளிக்கிறது. கடந்த ஜூலை மாத இறுதியிலேயே அவர் தனது பூவுலகப் பயணத்தை முடித்துக்கொள்ள முடிவு செய்திருந்தார் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கடந்த ஜூலை 20-ஆம் தேதி தனக்கு நெருக்கமானவர்களுக்கு அவர் ஒரு கடிதம் அனுப்பினார்.

""அனைவருக்கும். இந்த வயதில் எனக்கு ஏற்பட்டிருக்கும் நோய்கள் பல அன்பர்களுக்கும் கவலையளிக்கிறது. அவர்கள் அப்படிக் கவலைப்படத் தேவையில்லை. புற உதவிகளாலும், மருந்துகளாலும், உபகரணங்களாலும் உயிர் வாழ்வதை நான் விரும்பவில்லை, ஏற்றுக்கொள்ளவில்லை என்பதைப் புரிந்து கொண்டால், எனக்கு ஏதாவது நேர்வதையும் அவர்கள் புரிந்து கொள்வார்கள். நான் அமைதியாக விடைபெற விரும்புகிறேன். அனைவருக்கும் நன்றி. என்னுடைய அன்பும் வாழ்த்துக்களும். சுவாமி தயானந்தா'' - இதுதான் அந்தக் கடிதம்.

மருந்து மாத்திரைகளாலும், பல்வேறு மருத்துவக் கருவிகளின் உதவிகளாலும் உயிரைப் பிடித்து வைப்பதை விரும்பாமல், அமைதியாக மரணத்தைத் தழுவத் தயாரான மகான் சுவாமி தயானந்த சரஸ்வதி. அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தேன் என்பதும், அவரது அன்பும், ஆசியும் எனக்கும் இருந்தது என்பதும், நான் வாங்கி வந்த வரம் என்பதல்லாமல் வேறென்ன சொல்ல?

கார்ட்டூனிஸ்ட் ஸ்ரீதர் என்கிற பரணீதரனைப் போலவே கார்ட்டூனிஸ்ட் மதனுக்கும் பன்முகப் பரிமாணம் உண்டு. பரணீதரன் தனது ஒவ்வொரு பரிமாணத்துக்கும் வெவ்வேறு புனைபெயரைச் சூட்டிக்கொள்வார். மதன் அப்படியல்ல. பல்வேறு முகங்கள். ஆனால் பெயர் மட்டும் ஒன்று. கார்ட்டூனிஸ்ட், பத்திரிகையாளர், திரை விமர்சகர், எழுத்தாளர் என்று இவர் தொடாத துறையே கிடையாது.

இவரது கார்ட்டூனை எந்த அளவுக்கு ரசிப்பேனோ அந்த அளவுக்கு இவரது எழுத்தையும் ரசிப்பவன் நான். குறைந்தது நூறு இளைஞர்களுக்காவது இவர் எழுதிய "வந்தார்கள் வென்றார்கள்' நூலைப் பரிசளித்திருப்பேன். (ஒன்றரை லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகி சரித்திரம் படைத்திருக்கிறதாமே?)

எதைப்பற்றி எழுதினாலும் படு சுவாரஸ்யமாக, நகைச்சுவை கலந்து எழுதுவது என்பது இவருக்கு மட்டுமே கைவந்த கலை. கல்கி, தேவன், ஜ.ரா.சுந்தரேசன், சாவி, சுஜாதா என்று நகைச்சுவையை அவரவர் பாணியில் வழங்கி இருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே "மதன்' பாணிக்குள் அடங்கி விடுகிறார்கள் என்பது எனது கருத்து.

"பூமிப்பந்து' என்பது மனித குலம் தோன்றிய நாள்தொட்டு நம்மைத் தொடர்ந்து வியப்பில் ஆழ்த்திவரும் அதிசயம். அந்த பூமியைப் பற்றிய வரலாற்றை, பூகோளப் பாடம் சொல்வதுபோல அல்லாமல், சுவாரஸ்யமான கதைகளின் துணையுடன், அனைவருக்கும் புரிய வைக்கும் அற்புத முயற்சிதான் "மதன்' எழுதியிருக்கும் "பூமித்தாய்'.

பூமி உருவான கதை, பூமி எதிர்கொண்ட மாற்றங்கள், பூமிக்கும் விண்வெளிக்கும் உள்ள தொடர்பு என்று பூமி மண்டலம் பற்றி மட்டுமல்ல, சூரிய, வாயு மண்டலங்கள் பற்றிய அத்தனை தகவல்களையும் சுவாரஸ்யமாகப் புரிய வைக்கும் இந்தப் புத்தகத்தின் கடைசி அத்தியாயம் ஒவ்வொருவரும் கட்டாயம் படிக்க வேண்டியது. அனைத்து பள்ளிப் பாடப் புத்தகங்களிலும் இடம்பெற வேண்டியது.

கடந்த நூறு ஆண்டுகளில் பூமியின் வெப்பம் 0.5 டிகிரி உயர்ந்திருக்கிறது. இது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதனால் கடல்மட்டம் அதிகரிக்க ஆரம்பிக்கிறது. சில ஆண்டுகளில் இது 15 செ.மீ. அளவு உயர்ந்தாலும் கடற்கரைகள் காணாமல் போகும். கடற்கரை ஓரமாக வாழும் 300 கோடி மக்கள் வேறு இடத்தில் குடியேற நேரும்.

அதேபோல, ஒரு விநாடிக்கு ஒரு ஏக்கர் காடு அழிக்கப்படுகிறது. ஆண்டொன்றுக்கு மூன்றரை கோடி ஏக்கர் காடுகள் அழிக்கப்படுகின்றன. பூமி மனிதர்களைக் கைவிட்டுவிட்டால் இழப்பு பூமிக்கு அல்ல. அது எப்போதும் போலச் சூரியனை வலம் வந்து கொண்டிருக்கும். ஆனால், மனிதர்களோ, உயிரினங்களோ இல்லாமல்...!

அற்புதமான புத்தகம். படிக்காமல் இருந்து விடாதீர்கள். படித்தால் மட்டும் போதாது. மற்றவர்களையும் படிக்கச் சொல்லுங்கள்.

நாம் நேசிக்கும் சொந்தங்கள் நம்மை விட்டுப் பிரிந்து விட்டாலும், அவர்கள் நினைவு மட்டுமல்ல, அவர்களது வாசமும் நம்மை விட்டு அகலுவதில்லை. நேசம் நமது சுவாசத்தில் வாசமாக வீசும் என்கிற உண்மையை வெளிப்படுத்துகிறது "நஞ்சுண்டன்' என்பவர் எழுதியிருக்கும் இந்தக் கவிதை.

நீ

இப்போது என்னோடில்லை

உன் ப்ரியத்தையும் எடுத்துச் சென்று விட்டாய்

ஆனால்

அதன் வாசனையை

வீட்டில் எங்கோ ஒளித்து வைத்துள்ளாய்

எவ்வளவு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை

எவ்வளவு கழுவியும் போகவில்லை

உன் ப்ரியத்தின் வாசனை!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com