தொல்காப்பியத்தை முதன் முதலில் மொழிபெயர்த்தவர்!

பி.எஸ். சுப்பிரமணிய சாஸ்திரி என்பவரை வெறும் சம்ஸ்கிருத அறிஞர் என்று மட்டுமே அறிந்தவர்கள், அவர் தமிழிலும் மிகுந்த பற்றும், திறமையும் கொண்டவர் என்று அறிந்திருக்க
தொல்காப்பியத்தை முதன் முதலில் மொழிபெயர்த்தவர்!

பி.எஸ். சுப்பிரமணிய சாஸ்திரி என்பவரை வெறும் சம்ஸ்கிருத அறிஞர் என்று மட்டுமே அறிந்தவர்கள், அவர் தமிழிலும் மிகுந்த பற்றும், திறமையும் கொண்டவர் என்று அறிந்திருக்க முடியாது. அவருடைய 125ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடும் இந்த நேரத்தில், அவரைப் பற்றித் தமிழர்கள் அறிந்துகொள்ளும் வாய்ப்பு சென்னை சம்ஸ்கிருத கல்லூரி பேராசியர் டாக்டர் காமேசுவரி மூலம் கிடைத்தது.

அவர் பிறந்தது ஜூலை 29, 1890. அவர்தான் தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் முதன் முதலாக மொழிபெயர்த்தார். அது மட்டுமல்ல, சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதன் முதலாகத் தமிழில் முனைவர் (பிஹெச்.டி.) எனப்படும் டாக்டர் பட்டம் பெற்றவர் அவர்தான். தமிழின் இலக்கணக் கோட்பாட்டு வரலாற்றையும் சம்ஸ்கிருத இலக்கண வரலாற்றையும் ஒப்பிட்டு எழுதிய ஆய்வுக் கட்டுரைக்குத்தான் இவருக்கு "டாக்டர்' பட்டம் கிடைத்தது. இதில் அவருக்கு மேலதிகாரியாக யாரும் இருக்கவில்லை; தானாகவே எழுதினார். இவருடைய ஆய்வுக் கட்டுரை வெளியானதும், உலகெங்கிலுமிருந்தும் இவரை மனமாரப் பாராட்டி எழுதியவர்கள் பலர். அவர்களுள் முக்கியமாகக் குறிப்பிடத்தகுந்தவர்கள் பேராசியர் ஜுயல்ஸ் ப்ளாக், ஆர்.எஸ். டர்னர், எல்.டி. பார்னெட் ஆகிய ஐரோப்பியப் பேராசியர்கள். இது பின்னர் ஜர்னல் ஆஃப் த ஓரியன்டல் ரிசர்ச் இதழ்களில் தொடர்ந்து வெளியாயிற்று; பின்னர் புத்தகமாகவும் வெளிவந்தது.

சுப்பிரமணிய சாஸ்திரி திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியிலும், பிஷப் ஹீபர் கல்லூரியிலும் படித்துக் கணிதத்தில் பட்டம் பெற்று, திருவையாறு மற்றும் திருச்சி பள்ளிகளில் கணிதம் கற்பித்தார். இலக்கணத்திலும் தத்துவ சாஸ்திரத்திலும் நிபுணராக விளங்கிய பேராசியர் நீலகண்ட சாஸ்திரியிடம் சம்ஸ்கிருதம் படித்துவிட்டு, நியாய, அலங்கார சாஸ்திரங்களை பிரசிடென்ஸி கல்லூரிப் பேராசியர் எஸ். குப்புசாமி சாஸ்திரியிடமும், மீமாம்சையை காசி இந்து பல்கலைக்கழகப் பேராசியர் சின்னசாமி சாஸ்திரியிடமும் படித்தார்.

தாம் இருந்த திருவையாற்றிலிருந்து சுமார் 20 கி.மீ. தூரம் நடந்தே சென்று úக்ஷத்ரபாலபுரத்தில் இருந்த நீலகண்ட சாஸ்திரியிடம் கல்வி கற்றுவிட்டு வருவாராம். சம்ஸ்கிருதத்தில் எம்.ஏ. பட்டம் பெற்ற பிறகு, சைதாப்பேட்டை ஆசிரியர் கல்லூரியில் ஆசிரியப் பயிற்சியும் பெற்றார் சுப்பிரமணிய சாஸ்திரி.

தாம் உயர் கல்வி கற்ற திருச்சி எஸ்.பி.ஜி. (பின்னர் பிஷப் ஹீபர்) கல்லூரியில் ஓரியன்டல் ஸ்டடீஸ் பேராசிரியராக, 1917-இல் ஃபாதர் கார்டினர் இவரை நியமித்தார். சுமார் 9 ஆண்டுகள் இங்கு பணியாற்றியுள்ளார்.

இவருடைய "எழுத்து' மற்றும் "பொருளதிகாரம்' ஆங்கில மொழிபெயர்ப்புகளை குப்புசாமி சாஸ்திரி ஆராய்ச்சிக் கழகமும், "சொல்லதிகாரம்' ஆங்கில மொழிபெயர்ப்பை அண்ணாமலைப் பல்கலைக்கழகமும் வெளியிட்டிருக்கின்றன. இவரது

தொல்காப்பிய ஆங்கில மொழிபெயர்ப்பைப் படித்துவிட்டு, உலகம் முழுவதிலிருந்தும் பாராட்டுகள் வந்தன. நவீன மொழியியலின் தந்தை எனப்படும் லியோனார்ட் ப்ளூம்ஃபீல்ட், "தொல்காப்பியத்தைப் பற்றித் தாம் இதன் மூலமே அறிய முடிந்தது' என்று குறிப்பிட்டிருக்கிறார். "இந்திய இலக்கிய மொழியியலை அறிய ஆர்வம் காண்பிக்கும் எவரும் உங்கள் படைப்பை நன்றியுடன் ஏற்றுக்கொள்வார்கள்' என்று கடிதமும் எழுதியிருக்கிறார்.

""காஞ்சி மகா பெரியவர் வேண்டுகோளை ஏற்று, திருவையாற்றிலிருந்தபோது, மகாபாஷ்யத்தின் (பாணினியின் சம்ஸ்கிருத இலக்கணம்) ஆங்கில மொழிபெயர்ப்பை 4000 பக்கங்களில் 14 தொகுதிகளாக முடித்துக் கொடுத்திருக்கிறார் சுப்பிரமணிய சாஸ்திரி. இதில் முதல் ஆறு தொகுதிகள் வெளிவந்து, சில காலம் கழித்து 7 முதல் 13 தொகுதிகள் வெளியாகியுள்ளன. "முதல் ஆறு தொகுதிகளின் மறுபதிப்போடு, நிறைவான 14ஆவது தொகுதியும் விரைவில் வெளியாகும்'' என்றார் பேரா. மகேசுவரி.

சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ் லெக்சிகன் உருவாக்கியபோது துணை ஆசிரியராக இருந்தவர் சுப்பிரமணிய சாஸ்திரி. அவருடன் பணியாற்றியவர்கள் மு. ராகவையங்கார், வை.மு. கோபாலகிருஷ்ணமாசாரியர், எ.எஸ். வரதராஜய்யர் முதலிய அறிஞர்கள்.

பி.எஸ். சுப்பிரமணிய சாஸ்திரியாருடைய எழுத்துகள் அத்தனையும் மொத்தம் நாற்பது புத்தகங்களாக வெளிவந்துள்ளன.

சாதி, மத வேறுபாடுகள் பார்க்காத இவர், தம்மை அண்டி வந்த ஏழை மாணவர்களுடைய கல்வித் தொகையை தாமே கட்டிவிடுவாராம். ஓய்வு பெற்று திருவையாறு சென்ற பிறகு, திருக்குறள் கற்பித்தாராம்; யாருக்குத் தெரியுமா?ஆர்வத்துடன் கற்க வந்த துப்புரவுத் தொழிலாளிச் சிறுவனுக்கு!

1912 முதல் 1947 வரை சிறந்த டென்னிஸ் ஆட்டக்காரராகவும் இருந்திருக்கிறார் பி.எஸ். சுப்பிரமணிய சாஸ்திரி!

-சாருகேசி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com