"எடப்பாடி' பட்டதைக் கேளீர்!

சேலம் மாவட்டம் எடப்பாடியில் 1916-ஆம் ஆண்டில் இருபெரும் துன்பங்கள் நேரிட்டன. அப்பொழுது அவ்வூரைக் கொடிய "பிளேக்' நோய் தாக்கியது.
"எடப்பாடி' பட்டதைக் கேளீர்!

சேலம் மாவட்டம் எடப்பாடியில் 1916-ஆம் ஆண்டில் இருபெரும் துன்பங்கள் நேரிட்டன. அப்பொழுது அவ்வூரைக் கொடிய "பிளேக்' நோய் தாக்கியது. அதுமட்டுமல்ல, அவ்வாண்டில் பெய்த கனத்த மழையால் அவ்வூரின் நடுவில் ஓடும் சரபங்கா நதியில் வெள்ளம் பெருகி ஊருக்குள் புகுந்து பல நாசங்களையும் விளைவித்தது. இவ்விரு அவலங்களையும் கண்ணுற்ற கு.முத்துக் கவுண்டர், டி.ஏ.வெங்கிடராமசெட்டி ஆகிய இரு கவிஞர்கள் பிளேக் நோயாலும், வெள்ளத்தாலும் அவ்வூருக்கு நேர்ந்த உயிர், சொத்து, சுக இழப்புகளை சிந்துப் பாடல்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர்.

"பிளேக் சிந்தும் வருணனால் நேர்ந்த அலங்கோலச் சிந்தும்' என்பது நூலின் தலைப்பு. மொத்தம் எட்டுப் பக்கங்கள். "பரிதாபம் பார் - பாழும் பிளேக்கால் எடப்பாடி பட்டதைக் கேளீர்' என்ற பல்லவியில் ஆரம்பித்து, அனுபல்லவியைத் தொடுத்து, சரணத்தில் முடித்துள்ளனர். அப்பாடலின் சில வரிகளை மட்டும் காண்போம்:

""பம்பாய்க்கு முதல்பிளேக்கு வம்பாக வந்தது

பிரியமாய் பெங்களூரில் குடிபெற்று நின்றது

இயலான சேலத்தில் எங்கும் பரவிற்று...

எடப்பாடியில் பிளேக் மெய்யாகவே தோன்றி

எச்சரிக்கை முன்னாக எலிசெத்து விழுகுது

பின்னால் காய்ச்சல்வந்து கட்டியும் கட்டுது

கிளிபோன்ற அநேகரின் உயிரையும் போக்குது....

...... ....... ........ .........

....... ..... ........ ........

இதுயென்ன காலம் - எடப்பாடி போனதோர்

அநியாயக் கோலம்....''

இப்பாடலில் பிளேக் தோன்றுவதன் அறிகுறி, நோய்வாய்ப்பட்டபின் அக்குடும்பமும் ஊரும் சந்திக்கும் இன்னல்கள் போன்றவற்றைக் கவிஞர்கள் மிக விரிவாகப் பாடியுள்ளனர். சேலம் மாவட்டம்தான் பிளேக் நோய் தாக்கும் அபாயம் கொண்டது. இந்த நோய், வழக்கமாகப் பெங்களூரிலிருந்து பரவும்; பெங்களூர் பிளேக்கின் உறைவிடம். அருகிலுள்ள ஓசூர் தாலுகாவும் சேர்ந்து மைசூர் மாநிலத்தில் உள்ள மக்களை இந்நோய் தாக்கும் என்று இப்பாடல் வழி அறியமுடிகிறது.

பிளேக் நோய் முற்றும் ஒழிக்கப்பட்டுவிட்ட இன்றைய சூழலில், அன்றைய எடப்பாடிக் கவிஞர்கள் பாடிய சிந்துப் பாடல்கள்தாம் இந்நோய் குறித்த ஓர் எச்சரிக்கையாகவும், காலப் பெட்டகமாகவும் திகழ்கிறது. "வருமுன் காவாதான் வாழ்க்கை' எப்படி இருக்கும் என்பதை எண்ணிப்பார்த்து, முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்வது நல்லது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com