சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன்

உலகின் மிகப் பழைமையான சிந்துவெளி நாகரிகத்தின் இடம் தற்போது பாகிஸ்தான், குஜராத் மாநிலம், இராஜஸ்தான் மாநிலங்களின் பகுதியில் இருப்பினும், முன்பு அங்கு வாழ்ந்த மக்கள் தமிழராக வாழ்ந்து வந்ததை அங்கு கண்டெடுக்கப்பட்டுவரும் பல பழைமையான சின்னங்கள், முத்திரைகள் சான்று பகன்று வருகின்றன.
சிந்துவெளி முத்திரையில் புறநானூற்று அரசன்

உலகின் மிகப் பழைமையான சிந்துவெளி நாகரிகத்தின் இடம் தற்போது பாகிஸ்தான், குஜராத் மாநிலம், இராஜஸ்தான் மாநிலங்களின் பகுதியில் இருப்பினும், முன்பு அங்கு வாழ்ந்த மக்கள் தமிழராக வாழ்ந்து வந்ததை அங்கு கண்டெடுக்கப்பட்டுவரும் பல பழைமையான சின்னங்கள், முத்திரைகள் சான்று பகன்று வருகின்றன. இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்னர் அரப்பாவில் கண்டெடுக்கப்பட்ட ஒரு முத்திரையானது, புறநானூற்றில் வரும் ஒரு வரலாற்றுச் செய்தியோடு ஒப்பு நோக்கத்தக்கதாக உள்ளது. அப்புறப் பாடல் வருமாறு:

நீயே, வடபான்முனிவன்றட வினுட்டோன்றிச்

செம்புபுனைந் தியற்றிய சேணெடும் புரிசை

உவரா வீகைத் துவரை யாண்டு

நாற்பத் தொன்பது வழிமுறை வந்த

வேளிருள் வேளே! விறற்போ ரண்ணல்!

தாரணி யானைச் சேட்டிருங் கோவே!

ஆண்கட னுடைமையிற் பாண்கட னாற்றிய

ஒலியற் கண்ணிப் புலிகடி மாஅல்

யான்தர விவரைக் கொண்மதி வான் கவித்து

இருங்கட லுடுத்தவிவ் வையகத் தருந்திறற்

பொன்படு மால்வரைக் கிழவ! வென்வேல்

உடலுந ருட்குந் தானைக்

கெடலருங் குரைய நாடுகிழ வோயே.

-கபிலர் (புறம் - 201)

பாரியின் மறைவிற்குப் பிறகு, பாரி மகளிரை மணந்து, அவர்கட்கு நல்வாழ்வு அமைத்துத் தரும் பொருட்டு, அவர்களை, கபிலர் இருங்கோவேள் என்னும் அரசனிடம் கூட்டிச் சென்றார். அப்போது கபிலர் பாடிய புறப்பாடல் வழியாக, இருங்கோவேளின் முன்னோர்

களுள் ஒருவனான புலிகடிமால் என்பவரின் புகழைப் பதிவு செய்துள்ளார். அதில், ""நாற்பத்தொன்பது(49) தலைமுறைக்கு முன்னர், செம்பால் போர்த்தப்பட்ட மதில்களையுடைய துவாரகையை வாழிடமாகக்கொண்டு வாழ்ந்த உன் முன்னோர்களின் அரச பரம்பரையில் வந்த புலிகடிமால் என்னும் வேளிர் மரபைச் சார்ந்த அரசன், துவாரகாபதியில் தவம் செய்து கொண்டிருந்த ஒரு முனிவரைத் தாக்கவந்த புலிகளிடமிருந்து முனிவரின் உயிரைக் காப்பாற்றினான். அவ்வீரச் செயலைப் புரிந்த தம் முன்னோரின் நினைவாக அவ்வேளிர்குல அரசர்க்குப் புலிகடிமால் என்ற பெயர் நிலைத்திருந்தது. மால் என்னும் பெயர் காக்கும் கடவுளைக் குறிக்கும். எனவே, புலியிடமிருந்து காத்ததன் பொருட்டுப் புலிகடிமால் மரபில் வந்த இருங்கோவேளே நான் தர, இப்பாரி மகளிரை ஏற்றுக்கொள்'' என்று மனமுருக வேண்டுகின்றார் கபிலர் பெருமான். இத்தரவானது சிந்துவெளியிலிருந்த மக்கள், தமிழ்நாட்டு வேளிரோடு குருதித் தொடர்பு கொண்டவர்கள் என்பதனை விளக்குகிறது.

சிந்துவெளி நாகரிகத்தின் கடற்கரை நகரமாக விளங்கியது துவரை என்னும் துவாரகை. கடலுள் மாய்ந்த அப்பகுதி, தற்போது தொல்லியலாளர்களால் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. வலிய கோட்டை மதில்களால் சூழப்பட்ட "துவாரகை' கடலுள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நச்சினார்க்கினியர் முதல் ஒளவை துரைசாமிப்பிள்ளை வரை உரை வரைந்த உரையாசிரியர்கள் பலரும், இந்தத் துவரையை ஆண்ட புலிகடிமால் பற்றிய செய்திக்கு விளக்கம்தர இயலாமல் குழப்பம் அடைந்துள்ளனர். இந்நிலையில், சிந்துவெளியில் மாபெரும் நகரமாக விளங்கிய அரப்பாவில் கிடைத்த முத்திரையின், நடுவில் ஓர் ஆணின் உருவமும், அவன் மேல் ஒரு சக்கரமும், அவன் இரு பக்கங்களிலும் இரு பாயும் புலிகளை, அவன் எதிர்ப்பதுமான வடிவம் காணப்படுகின்றது (படம் காண்க). இம்முத்திரையானது அரப்பாவிற்கு அருகில் அமைந்துள்ள துவாரகையைச் சேர்ந்த புலிகடிமாலின் செய்தியோடு ஒப்புநோக்கத்தக்கது.

பாரத நாட்டின் வடபகுதி நதிக்கரையிலிருந்த வேளிர்குடியினரை தென்னாட்டுக் காவிரி நதிக்கரை சென்று உணவைப் பெருக்குமாறு இறைவன் இட்ட ஆணையால் காவிரிக் கரையடைந்த வேளிர்கள் (வேளாள மக்கள்) காவிரிக் கரைக்குக் குடியேறி, உழவுத் தொழிலைப் பெருக்கினர் என்னும் வேளாள புராணச் செய்தியினை இங்கு ஒப்பிட்டுச் சிந்திக்கலாம்.

துவரை யாண்டு

நாற்பத்தொன்பது வழிமுறை

வந்த வேளிருள் வேளே

என்னும் புறநானூற்றின் தொடர், பல்வகை ஆய்வுகளைக் கருக்கொண்டு நிற்கிறது. புலிகளுக்கு இடையே நிற்பவன் ஒரு குடிமகன் அல்லன், ஒரு மன்னன் என்பதைக் காட்ட அவன் தலைக்கு மேல், ஆட்சிச் சக்கரமும் காலடியில் யானையும் உள்ளதாகச் சிற்பி காட்டியுள்ளதும் உணரத்தக்கது.

புறநானூற்றில் குறிப்பிடப்பட்டுள்ள புலிகடிமால் என்ற வேளிர் அரசனையே இவ்வுருவம் காட்டுவதாகக்கொண்டு மேலும் ஆய்வுகளை விரிக்க, இச் சிந்துவெளி முத்திரை, வழி திறந்து வைக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com