
பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சியமாறன் வழுதியின் ஆற்றல் சிறப்பைப் புலவர் ஐயூர் முடவனார் சிறப்பித்துப் பாட நினைக்கிறார். "அவ்வேந்தனையும், இவ்வேந்தனையும் விஞ்சியவன் வழுதி என்று பாடினால் அம்மொழிகளெல்லாம் இணையாகுமா? அவை இணையாகமாட்டா. மாறன் வழுதியோ, யாரோடும் ஒப்பவைத்து எண்ண இயலாத வீரன். வேறு யாரோடும் உவமை கூற இயலாத வேந்தன். எனவே, ஐம்பூதங்களுள் நீர், தீ, வளி ஆகிய மூன்றும் புடைபெயர்ந்து
வந்தால் அவற்றை யாராலும் தடுத்து நிறுத்த இயலாது. எதிர்ப்பட்டவர்களை அவை வருத்துவனவாதலின் அவற்றையொத்தவன் எம் வழுதி' என்று ஏற்றிப் போற்றுகின்றார்.
÷நீர் மிகுமாயின், அதனைத் தடுத்து நிறுத்தவும், தாங்கும் அரணும் எவ்விடத்துமில்லை; நெருப்பு மிகுமாயினும், உலகத்து நிலைபெற்ற உயிர்களை நிழல் செய்து காக்கும் நிழலுமில்லை; காற்று மிகுமாயின், அதனைப் பொறுக்கும் வலிமையும் யாங்கணுமில்லை. எனவே, தன்னை எதிர்த்த வேந்தர்களுக்கு அம் மூன்றையொத்த சினம்மிக்குப் போர்க்குணம் கொண்டவன் வழுதி.
÷"குளிர்ந்த தமிழ்நாடு மூவேந்தர்க்கும் பொதுவென்று கூறப்பொறானாய்ப் போரையேற்றுத் திறையை வேண்டுவனாயின், "கொள்க'வென்று சொல்லி முன்னே கொடுத்த மன்னர் நடுக்கம் தீர்ந்தார். கொடாராயின், யாவராலும் மிக்க இரங்கத்தக்கவராகிப் போவார். நீர் மிகின், தீமிகின், வளிமிகின் எதிர்த்து நிற்பார் யாருமில்லாற் போன்று, வழுதியின் அருளையிழந்த பகை வேந்தர், புற்றிலிருந்து புறப்பட்டு ஒரு
பகல்பொழுது மட்டுமே உயிர் வாழும் கறையானின் வாழ்க்கையை ஒத்தவராகிப் போவார்' என மாறன் வழுதியைப் புகழ்ந்து பாடியுள்ளார்.
நீர்மிகிற் சிறையு மில்லை; தீமிகிற்
மன்னுயிர் நிழற்று நிழலு மில்லை;
வளிமிகின் வலியுமில்லை; ஒளிமிக்கு
அவற்றோர் அன்ன சினப்போர் வழுதி!
"தண்டமிழ் பொது'வெனப் பொறாஅன்
போரெதிர்ந்து
கொண்டி வேண்டுவ னாயிற் கொள்கெனக்
கொடுத்த மன்னர் நடுக்கற் றனரே;
அளியரோ வளியரவ னளியிழந் தோரே
நுண்பல சிதலை அரிதுமுயன் றெடுத்த
செம்புற் றீயல் போல
ஒருபகல் வாழ்க்கைக் குலமரு வோரே!
(பா.51)
இக்கருத்தைப் பழமொழி ஆசிரியர் "நீர் மிகின் இல்லை சிறை' என்றார். சீத்தலைச் சாத்தனார், "சிறையும் உண்டோ செழும்புனல் புனல் மிக்குழீ' என அதை வழிமொழிந்தார். இயற்கையை வென்றவர் இதுவரை எவருமில்லை என்பதையே இப்பாடல்கள் உணர்த்துகின்றன.
- புலவர் ப.சோமசுந்தர வேலாயுதம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.