
குழந்தையைப் பெற்றெடுத்த தாய் உயிரோடு இருந்தால்தானே அக்குழந்தையைத் தாலாட்டி, பாலூட்டி, சிராட்டி வளர்க்க முடியும்? ஆனால் பெற்ற தாய், அதைப் பெற்றவுடன் மறைந்து விட்டால் அல்லது காணாமல் போய்விட்டால் அக்குழந்தையின் நிலை - கதி என்ன என்பதை வார்த்தைகளால் வடிக்க முடியாது. அதுபோலத்தான் ஓர் இலக்கியத்தைப் படைத்து(பெற்று)விட்டு உடனே மறையும் அல்லது தன்னை - தன் பெயரை வெளிப்படுத்திக் கொள்ளாத ஆசிரியரும்! ஒவ்வோர் ஆசிரியருக்குமே தான் படைக்கும் ஓர் இலக்கியம் ஒரு குழந்தையைப் போன்றதுதான்! அத்தகையதொரு தாயை இழந்த - ஆசிரியர் பெயர் இன்னவென அறியாத ஒரு குழந்தைதான் (நூல்) "கோதை நாச்சியார் தாலாட்டு'! ஆசிரியர்(தாய்) யார் எனத் தெரியாத இத்தாலாட்டு 168 கண்ணிகளைக் கொண்டுள்ளது. சில வரிகள் விடுபட்டுள்ளன.
"தாலாட்டு' என்பது நாட்டுப்புறப்பாடல் வகைகளுள் ஒன்று. அது முன்பு வாய்மொழி இலக்கியம்; ஏட்டில் எழுதாக் கவிதை! ஆனால், பிற்காலத்தில் ஏட்டில் எழுதப்பெற்று, ஆசிரியர் பெயரும் குறிக்கப்பட்டது. இது கிராமிய மக்களின் வாழ்க்கையையும் உணர்வுகளையும் கூறும் இசைப்பாடல். பெரும்பாலும் இதை(தாலாட்டை) நீலாம்பரி இராகத்தில் பாடுவது வழக்கம். ஆனால், சஹானா, யதுகுலகாம்போதி, ஆனந்த பைரவி முதலிய இராகங்களிலும் பாடப்பட்டன. தாலாட்டுப் பாடல்களில் உவமை அணியும், உருவ அணியும் கைகோர்த்துப் பெரிதும் உலா வந்தன.
"எஸ்.வையாபுப்பிள்ளை உபசரித்தது' என்ற குறிப்போடு ஓர் இணையத்தில் வெளியிடப்பட்டிருக்கும் இந்நூலின் பதிப்பாசிரியர் பெரியன் ஸ்ரீநிவாசன் புதல்வர் எஸ்.நம்பி என்பவர்.
இந்நூல் முன்னுரையின் சில பத்திகள் வருமாறு: ""சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா! ஆடிவரும் தேரே!''
என்று கண்ணனைப் பாடிய பாரதியின் அழியாக் கவிதைக்கு அவர் மகள் காரணியாக இருந்தது போல், இப்படியானதொரு சிந்தனை சென்ற நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஒரு வைணவ அன்பருக்கு ஏற்பட்டு அவர், விட்டுசித்தரின் வழியில், அவரது வரிகளை உரிமையுடன் கையாண்டு அவரது மகளான கோதை நாச்சியாருக்கு ஒரு தாலாட்டுப் பாடியுள்ளார்.
ஆழ்வார் திருநகரி என்னும் ஊர் தமிழ்த் தாத்தா உ.வே.சா., மகாவித்வான் இரா.ராகவையங்கார் போன்றோருக்குப் பண்டைத் தமிழ்க் கருவூலங்களைத் தந்த புண்ணிய பூமியாகும். அத்தகைய ஆழ்வார் திருநகரியில் கிடைத்திருக்கும் மற்றுமொரு தமிழ்க் கருவூலம்தான், "கோதை நாச்சியார் தாலாட்டு'. ஏடுகளில் கண்டபடி 1928-இல் ஆழ்வார் திருநகரி திருஞான முத்திரைக் கோவை பதிப்பாக வெளிவந்திருக்கிறது.
ஆக்கியோன் பெயர் ஏட்டில் அழிந்து விட்டதாலோ, இல்லை, ""நாடோடிப் பாட்டுக்கு தாய் தந்தை யாரோ?''
எனும் படியாகவோ இந்நூலை ஆக்கியோன் பெயர் விட்டுப் போயிருக்கிறது. பழம் ஓலைச் சுவடிகளைச் சரியாகப் பராமரிக்கவில்லையெனில் அவை பூச்சிகளின் வாய்க்கு இரையாகி அழிந்துவிடுகின்றன. இந்நூலில் பல வரிகள் அச்சிடப் படாததற்குக் காரணம் அவை வாசிக்கத் தக்கதாய் இல்லை என்று ஊகிக்கலாம். இல்லை, வாய்மொழியாகக் கேட்ட பாடலைப் பதிவு செய்தவருக்கு ஞாபத்தில் வராத வரிகளை எழுதாமல் விட்டு விட்டார் என்றும் கருதலாம். 1928 புத்தகம் இது பற்றி ஒரு சேதியும் தராமல் நம்மை இப்படியெல்லாம் ஊகிக்கவிடுகிறது'' என்கிறது முன்னுரை.
இத்தாலாட்டில், ஸ்ரீவில்லிபுத்தூரின் அழகு, பேரிகை, எக்காளம், வீணை, செகண்டி, தும்புரு, மத்தளம் முதலிய இசைக் கருவிகள், கோதை நாச்சியாரின் திருவவதாரம், சூடிக்கொடுத்த நிகழ்வு, மார்கழி நோன்பு, கோதை திருமணம் முதலியவை கூறப்பட்டுள்ளன.
தென்புதுவை விஷ்ணுசித்தன் திருவடியை நான்தொழுது
இன்பமுடன் தாலாட்டு இசையுடனே யான்கூறத்....(1)
தெங்கமுகு மாலானைச் சிறந்தோங்கும் ஸ்ரீரங்கம்
நம் பெருமாள் பாதம் நமக்கே துணையாமே (2)
பல்லக்கில் காணாமல் பந்தொடியார் காணாமல்
எல்லாருங் காணாமல் என்மகளை யாரெடுத்தார் (117)
ஒருமகளை யானுடையேன் உலகளந்த மாயவனாம்
திருமகளைத் தானெடுத்து செங்கண்மால் கொண்டொளித்தாய்!
(119)
அப்போது கோதையரும் அரங்கள் அடியைவிட்டு
இப்போதும் அய்யர் இணையடியைத் தான்தொழுதாள்
(121)
வாழ்த்தியே அய்யர் மகிழ்ந்து மகள்தனக்கும்
வாழ்த்தியே முற்று மகிழ்ந்து ரெங்கருக்கும் (122)
கோதையரும் வாழிகோயில்களும் தான்வாழி
சீதையரும்வாழி செகமுழுதும் தான்வாழி!(168)
என்று இத்தாலாட்டு நிறைவுபெறுகிறது.
ஜெர்மனி நா.கண்ணன் பதிவு (முன்னுரை) செய்துள்ள இத்தாலாட்டில் இடம்பெறும் "அய்யர்' (கண்ணி-121) என்பதற்கு, ""அய்யர் இணையடியை' என்று சொல்வதிலிருந்து இப்பாடல் இயற்றப்பட்ட காலத்தில் "ஐயங்கார்' என்ற ஒரு பிரிவு தோன்றவில்லையென்று தெரிகிறது. இல்லையெனில், பரம வைஷ்ணவரான விட்டு சித்தரை "ஐயங்கார்' என்றே இத்தாலாட்டு இயம்பியிருக்கும். 1928-இல் பதிப்பிக்கப்பட்டு இன்று 73 ஆண்டுகளாகின்றன (2001). இவ்வோலைச் சுவடி பதிப்பிக்கப்பட்ட காலம் புத்தகத்தில் இல்லை. ஐயங்கார் என்ற பிரிவு ஆங்கிலேயர் காலத்தில் உருவானது என்று சொல்வர். அப்படியெனில் இத்தாலாட்டு ஆங்கிலேயர் வருகைக்கு முன் எழுதப் பட்டிருக்குமோ?'' என்ற ஐயத்தையும் எழுப்பியுள்ளார். இது ஆராயப்பட வேண்டிய தாலாட்டு.
தாலாட்டு ஒரு வாய்மொழி இலக்கியக் கலை. தாயின் தாலாட்டு கேட்டே அக்காலக் குழந்தைகள் தூங்கின. அத்தாலாட்டின் மூலம் குழந்தைகளுக்கு நல்ல நல்ல அறக்கருத்துகள், நீதிநெறிகள், தெய்வத்தின் மகிமை, குழந்தையின் பெருமை, குலப்பெருமை, மாமன்மார்கள் பெருமை, புராணக் கதைகள், பழமொழிகள் முதலியவை வாய்மொழிப் பாடலாகப் பாடப்பட்டன. ஆனால், இன்றைக்கு செல்லிடப்பேசியின் அழைப்பொலியையும், தொலைகாட்சி தொடரின் அல்லது அதில் வரும் விளம்பரத்தின் ஒலியையும் கேட்டபடியே குழந்தைகள் தூங்குகின்றன. அதனால்தான், பண்டைக் காலத்திய தாலாட்டுகளும் தூங்கிப்போய் விட்டன!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.