
'பாரதியின் கண்ணம்மா யார்?' என்பதற்கு எண்பது சதவிகித எழுத்தாளர்களும் மனைவி செல்லம்மா என்றே குறித்துள்ளனர். மேலும், சிலர் புதல்வி சகுந்தலா என்றும், கண்ணன் என்றும், அவர் நேசித்த ஏதோவொரு பெண் என்றும் கூறுகின்றனர்.
பாரதியால் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிற கண்ணம்மா மனித உடம்பெடுத்த மோகனமல்ல. கண்ணம்மா சார்ந்த பாடல்களின் அடிநாதத்தை அறிந்துகொள்ள வேண்டுமென்றால் சித்தர் பாடல்களின் வழியே வெளிப்படுகிற உள்ளிருப்பை கண்டறிந்தாக வேண்டும். குறிப்பாக கொங்கணச் சித்தரின்
கண்ணம்மாவை ஆய்ந்துணர்வது அவசியமானது.
பாரதியார் தன்னுடைய சுயசரிதையில் தனக்கு வாய்த்த மனைவியைப் பற்றி வேறொரு கோணத்தில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறாரே என்ற சாட்சியத்தை ஆராய்ந்தால் பாரதியின் கண்ணம்மா செல்லம்மாளின் பிம்பம் அல்ல என உறுதியாகத் தெளியலாம்.
""வசிட்ட ருக்கு மிராமருக்கும் பின்னொரு
வள்ளு வர்க்குமுன் வாய்த்திட்ட மாதர்போல்
பசித்தொ ராயிர மாண்டு தவஞ்செய்து
பார்க்கி னும்பெறல் சால வரிதுகாண்''
இந்தச் சொற்களின் பின்னாலிருக்கிற சுய பச்சாதாபம், எதிர்பார்த்த எதுவும் நிறைவேறாத ஆதங்கம், ஏமாற்ற வேதனை, அவர்களிடையே காதல் கமழ்கின்ற வாழ்க்கை அமையவில்லை என்பதைத் தெளிவாக்குகிறது. எனவே, கண்ணம்மா முற்றிலும் வேறு என உறுதி செய்யலாம்.
இதனின் மேலாக பாரதி நம்முன்னே வைக்கின்ற சாட்சியம் இன்னும் தெளிவானது; இணையற்றது; எவராலும் மறுத்துரை செய்ய முடியாதது.
""சின்னஞ் சிறுகிளியே - கண்ணம்மா
செல்வக் களஞ்சியமே
என்னைக் கலிதீர்த்தே - உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்''
என்று பாரதியார் காட்டுகின்ற கண்ணம்மா எந்த வகையிலும் மானுட வடிவு தாங்கிய பெண்ணே அல்ல. செல்லம்மாவும் அல்ல, அதற்கும் மேலாக இன்னொரு சான்று உள்ளது.
""அன்பு தருவதிலே - உனைநேர்
ஆகுமோர் தெய்வமுண்டோ?''
என்று கண்ணம்மாவைத் தெய்வமென்று சத்தியம் செய்கிறார். பத்து வயதில் ஒரு சிவராத்திரி நாளில் சிவனைப் போல் வேடமணிந்த கதாதரன் என்கிற சிறுவன் சாம்பலைப் பூசியதும் சிவமேனியாகிப் போகிறான். சுயமிழந்து அப்படியே நிலைத்து விடுகிறான். அந்தச் சிறுவனே பின்னாளில் பகவான் இராமகிருஷ்ணராக மலர்கிறார்.
பாரதியும் பத்து வயதில் பாரதியால் (சரஸ்வதி) ஆட்கொள்ளப்படுகிறார். அவளே பாரதியின் கண்ணம்மா. பத்து வயதில் பிள்ளைப் பிராயத்தளாக பாரதியினுள்ளே மலர்ந்தவள் வளர்நிலையில் துரிய மேட்டுக் காட்சிப் பிம்பங்களாக அவனை வசீகரித்துள்ளாள்.
தாய்வழிப் பாட்டனார் மூன்று வேளை பூஜை செய்வதைப் பார்த்த பாரதி, தாத்தாவோடு இணைந்தும் அவர் பூஜை முடித்த பிறகு தனியே தானும் பூஜை செய்கிறார். அவ்வாறு பூஜை செய்கிற நாளில் பாரதியுள்ளே ஒரு சிறுமியாக அவள் காட்சியளிக்கிறாள். தெய்வ மகளின் திருக்காட்சியின் இனிப்பைப் பல இடங்களில் பலவாறு வெளிப்படுத்துகிறார். அவளோடு பல காலம் துரிய விளையாட்டில் தோய்ந்து போனதன் விளைச்சலே கண்ணம்மா பாடல்கள்!
தனக்குக் கிடைத்த காட்சி கனவல்ல நனவிலே கிடைத்ததென அவளை வரைந்து காட்டுகின்றபோது, ""நானுமொரு சித்தன் வந்தேன் தமிழ் நாட்டில்'' என முரசறைவாரே அதனை உறுதிப்படுத்துகிறவாறு,
""மேனி யெங்கு நறுமலர் வீசிய
கன்னி என்றுறு தெய்வத மொன்றைக்
கண்டு காதல் வெறியிற் கலந்தனன்''
என்றுரைக்கிறார். துரியம் திறக்கின்றபோது இஷ்ட தேவதை - வணங்குகிற தெய்வம் பிம்பமாக வடிவெடுக்கும். அப்போது இனம்காண முடியாத ஒரு வாசனை நுனி நாசியில் மணம் பரப்பும். இவ்வாறான வாசனையைக் ""கற்பூரம் மணக்குமென் மேனி'' என வள்ளலாரும், ""கஸ்தூரி மணம்'' எனத் தாயுமானவரும், ""ஜவ்வாது மணமென''க் கொங்கணரும் கூறியுள்ளனர். என்ன நாற்றமென இனம் காண இயலாத ஆண்டாள், ""கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ?'' எனத் திகைக்கிறாள். இது இயற்கை நிகழ்வு.
துரியமேட்டுக் காட்சியில் வயமிழந்தே மகாகவி பாரதியை அவள் வசியம் செய்தாளென்று தன்னிலை விளக்கம் தருகிறார். இவை எல்லாம் தியான வழியில் செல்கின்ற பயணிகளுக்கு இயல்பாக நிகழ்வன. சுய சரிதையை பாரதி பின்னாளில் நினைவுக் குறிப்பில் உள்ளவற்றையே பட்டியல் போட்டிருக்கிறார்.
""ஆதி ரைத்திரு நாளொன்றிற் சங்கரன்
ஆல யத்தொரு மண்டபம் தன்னில்யான்
சோதி மானொடு தன்னந் தணியனாய்ச்
சொற்க ளாடி யிருப்ப மற்றாங்கவள்
பாதி பேசி மறைந்துபின் தோன்றித் தன்
பங்கயக் கையில் மைகொணர்ந் தே"ஒரு
தேசி நெற்றியில் பொட்டுவைப் பேன்' என்றாள்
திலதமிட்டனள் செய்கை யழிந்தனன்''
சராசரி மனிதர்கள் இவ்வாறான விளையாடல்களில் ஈடுபடுதல் என்பது இயற்கையான நிகழ்வே எனினும், மனித உடம்பிலிருந்து வீசுகின்ற வாசனைகளென்பன செயற்கையாகப் பூசிக் கொள்கின்ற நறுமணத் திரவியங்களாகவே இருக்கும். பங்கயக் கையில் மைகொணர்தல், திலதமிடல், செய்கையழிதல் என்பன முற்றிலும் துரியாதீதக் களியே!
ஆதிரை நாள் சங்கரன் ஆலய மண்டபம் என்பதான அடையாளம் எது என சற்றே பாரதியோடு நடந்தால், பாரதியின் மனைவி ஊர் கடையத்தில் உள்ள வில்வவனநாதர் - நித்ய கல்யாணி ஆலயம் என அறியலாம். கடையம் ஊர் கடந்து மேற்கே வயல்களின் நடுவே மோனத்துள் மூழ்கிய மோனமென அந்த ஆலயம் யாரையும் வசியப்படுத்தும். பாரதி, நித்ய கல்யாணி அம்பாள் மீது ஒரு பாடலையும் பாடியிருக்கிறார்.
இந்தத் துரியத் திறப்பு தியானத்தில் தன்னை மறக்கின்றபோது - தானற்ற லயத்தில் மூழ்கும்போது நிகழ்கின்ற இயற்கைச் செயல். தன்னை மறந்து போகின்ற இந்த நிலையை தோத்தாப்புரி நாகா சாது தகர்த்து எறிந்து பகவானை தியான உச்சிக்கு அழைத்துச் செல்கிறார். அதன் பின்னரே யோகாரூடராகிறார்.
தவத்தில் ஈடுபடுகிறவர்கள் இந்தத் தேவதை நிலையைத் தாண்டாமல் மேலே போக வழியேயில்லை. இந்தத் தேவதையை "வாலை' என்று பத்து வயது பருவத்தாள் எனச் சித்தர்கள் அறிவிக்கிறார்கள். மகாகவி பாரதியும், ""வாலைக் குமரியடி கண்ணம்மா மருவக் காதல் கொண்டேன்'' என்று ஒரு பாடலில் (கண்ணம்மா என் காதலி) சுட்டுகிறார். "வாலைக் கும்மி' என சித்தர் பாடலுமுண்டு.
எனவே, பாரதியின் கண்ணம்மா செல்லம்மா அல்ல; கண்ணனும் அல்ல; பாரதியின் புதல்வி சகுந்தலாவும் அல்ல என்று தெளியலாம். இந்த மனோ வசிய மயக்கினைச் சொல்ல வந்த பாரதி,
""பன்னி யாயிரங் கூறினும் பக்தியின்
பான்மை நன்கு பகர்ந்திட லாகுமோ''
என்று சுயசரிதையில் கூறுகிறாரே, அந்த ஆதங்கத்தின் அடிநாதம் பாரதி தன்னுடைய வாழ்நாளிலேயே அவருக்கெதிரான விமர்சனங்களால் பாதிக்கப்பட்டிருப்பதை உணரலாம். ""பட்டப் பகலிலே பாவலர்க்குத் தோன்றுவதாம் / நெட்டைக் கனவி னிகழ்ச்சி'' எனக் கூறியவர், பாடலில் முடிவில், ""குயிலைக் கையிலெடுத்து முத்தமிட்டேன் அங்கே குயிலைக் காணவில்லை, பெண்ணெருத்தி அங்கு நின்றாள்'' என்றே அடையாளம் காட்டுகிறார். துரியத்தில் வெளிப்படுகின்ற பெண்ணோடு உறவாடி அங்கேயே நின்று போகிறவர்கள் சித்தநிலை பிறழ்ந்து போவதும் உண்டு.
""சந்திர னொளியில் அவளைக் கண்டேன்
சரணமெனப் புகுந்து கொண்டேன்''
என்று மகாகவி பாரதி சுட்டிக் காட்டுகின்ற இந்தக் காட்சியே துரிய விழிப்பின் நிலைப்பாடு. பாரதியின் கண்ணம்மா இவளேயன்றி வேறெவருமல்லர்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.