

சங்க இலக்கியங்களில் உள்ள பல பாடல்களில் "இரட்டுறமொழிதல்' என்னும் இலக்கண வகை பயின்று வந்துள்ளதைக் காணமுடிகிறது.
இரட்டுற மொழிதலாவது ஒரே சொல் இரண்டு இடங்களில் வந்து, வேறு வேறு பொருளைத் தந்து நிற்பது. அத்தகைய மூன்று பாடல் வரிகளைக் காண்போம்.
கோவூர்கிழார் ஒரு பாணனைக் கிள்ளிவளவன் என்னும் மன்னனிடம் ஆற்றுப்படுத்தும் பாடலின் ஓர் அடியில், ""செல்வை ஆயின் செல்வை ஆகுவை'' (புறம்.70:16) என்கிறார். முதலில் வரும் "செல்வை' என்பது "செல்லுதல்' என்னும் தொழிற்பெயரையும், பின்னால் வரும் "செல்வை' என்பது "செல்வத்தை'யும் குறிக்கும். "நீ கிள்ளி வளவனிடம் செல்வாயானால் செல்வத்தை உடையவனாவாய்' என்று பாணனிடம் கூறுகிறார் கோவூர்கிழார்.
மாங்குடி கிழாரின் பாடல் ஒன்றில் பரதவ மகளிர் கடலில் நீர் விளையாடலைச் சொல்லும் போது, ""முந்நீர் உண்டு முந்நீர்ப் பாயும்''(புறம்.70:16) என்கிறார். "முந்நீர் உண்டு' என்பது அம்மகளிர் பனை நுங்கின் நீரையும், கரும்பின் இனிய சாற்றையும் இளநீருடன் கலந்து பருகினர் என்பதைக் குறிக்கிறது. அப்படிப் பருகிய அவர்கள் "முந்நீர் எனப் பெயர்பெற்றக் கடலில்' ஆடினராம்.
அம்மூவனாரின் பாடல் ஒன்று. மாலைக் காலத்தில் தலைவி, தலைவனைப் பிரிந்திருக்கிறாள். பிரிவுத் துயரில் இருக்கும் அவள் மீது தென்றல் வீசுகிறது. அவளுக்குத் துன்பம் அதிகமாகிறது. "துன்பம் தரும் தென்றல் காற்றை முன்னால் விட்டுப் பின்னால் மாலை என்னும் காலனாகிய கூற்றுவன் வருவது போல் உள்ளதே' என்கிறாள். இப்பாடலில் "காலை' என்பது காற்று என்றும், காலன் என்றும் இரு பொருள்களில் வந்துள்ளது.
""மாலை வந்தன்று, மன்ற
காலை யன்னகாலை முந்துறுத்தே'' (ஐங்குறுநூறு,116:3-4)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.