

மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கடமை உண்டு. அத்தகைய கடமைகள் என்ன என்பதைப் பொன்முடியார் என்ற புலவர், புறநானூற்றுப் பாடல் ஒன்றில் ("ஈன்று புறந்தருதல் எந்தலைக் கடனே' - புறநா-312) பாடிவைத்துள்ளார்.
மகனைப் பெற்று வளர்த்தல் தாயின் கடமை; அவனைக் கல்வி பயில வைத்துச் சான்றோன் ஆக்குவது தந்தையின் கடமை; அவன் தன் நாட்டுக்காகப் போர்க்களத்திலே போரிடத் தகுந்த வேல், வாள் போன்ற ஆயுதங்களை உலைக்களத்திலே வடித்துக் கொடுத்தல் கொல்லரின் கடமை; இப்படிப்பட்ட ஆண் மகனை நல்லொழுக்கம், நற்செயல்களில் ஈடுபடச்செய்து அவனுக்கு நல்ல வழியைக் காட்ட வேண்டியது அரசனுடைய கடமை; இவ்வாறெல்லாம் உருவாக்கப்பட்ட ஆண்மகன், போர்க்களம் சென்று வீரப் போர் புரிந்து, யானையை வென்று வெற்றியுடன் திரும்புவது அந்த ஆண்மகனின் கடமையாகும் என்கிறார் பொன்முடியார்.
இப்பாடல் மன்னர் ஆட்சிக் காலத்தில் பாடப்பட்டது. மன்னர் ஆட்சிக் காலத்தில், பிற நாட்டினரிடமிருந்து தன் நாட்டைக் காக்கப் போர் செய்தலே முக்கிய வேலையாக இருந்தது. அதனால், ஆண்மகன் வீரனாகத் திகழ வேண்டியிருந்தது. இப்போது மக்களாட்சி நடைபெறுவதால், தனி மனிதனின் வீரத்துக்கு வேலையில்லை. அதனால், இக்காலத்தில் வயதான தாயையும் தந்தையையும் போற்றிப் பணிவிடை செய்து காக்க வேண்டியதே ஆண்மகனின் முக்கிய கடமையாகிறது. இக்கருத்தை புலவர் ஒட்டக்கூத்தர், இராமாயணம் உத்தரகாண்டத்தில் சிறந்த எடுத்துக்காட்டுடன் விளக்கியுள்ளார்.
நைந்து அடியற்ற ஆலம்
நடுங்கி வீழ்கின்றது என்று
வந்து வீழ் ஊன்றி வீழா
வகை நிலைப்பிக்குமா போல்
மைந்தர்கள் தமக்கு நல்ல
அறிவினால் மகிழ்ந்து சேர்ந்து
தந்தையைத் தளரா வண்ணம்
தாங்குதல் தவத்தின் நன்றால்!
(பா.835)
ஆலமரம் அதனுடைய வயதான காலத்தில் தளர்ந்துக் கீழே விழுந்துவிடாமல் அதனுடைய கிளைகள் எல்லாப் பக்கங்களிலும் வேரூன்றி அம்மரத்தைத் தாங்கிப் பிடிக்கும். அதுபோல, ஒரு தந்தையின் முதுமைக் காலத்தில் அவர் தளராவண்ணம் அவரைத் தாங்குவது - நன்கு கவனித்துக் காப்பாற்றுவது மகனின் கடமையாகும். இப்படிப்பட்ட மகனைப் பெறுவதற்குத் தந்தையானவர் நல்ல தவம் செய்திருக்க வேண்டும் என்பதையும் ஒட்டக்கூத்தர் கூறியுள்ளதை நன்கு கருத்தில் கொள்ள வேண்டும். எனவே, பெற்ற தாய்-தந்தையரைக் காப்பதே இக்கால மகன்களின் முக்கிய கடமையாகும்!
-மு.நக்கீரன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.